Thursday, October 14, 2010

உரக்க அதிரும் மெளனப் பறை




நூல் விமர்சனம்

ஜே.எஸ்.அனார்கலி

சங்ககாலப் பெண்கவிகள் நாற்பத்தி இரண்டுபேர் இருந்தார்களென சங்க இலக்கியங்கள் சான்று அளிக்கின்றன. சங்க காலத்துக்குப் பின்னர் 20,21 ஆம் நூற்றாண்டுகளில்தான் அதிகளவு பெண்கவிகள் காணப்படுகிறார்கள். இடைப்பட்ட காலங்களில் பெண்கவிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே காணப்படுகின்றனர். அயலவர் படையெடுப்பு , பக்திமரபு , சித்தர் மரபு போன்றவை பெண்ணை உடமைப் பொருளாக, பாவப் பொருளாக, போகப் பொருளாக அதீதமாக உருவகித்திருந்தன. பெண்ணினுடைய வரலாறும் பெண் பார்வையில் இந்த உலகப் பதிவுகளும் நிராகரிக்கப்பட்டன. பக்திச் சாம்பல் பூசிக்கொண்டு பூத்திருக்கும் கனல் துண்டுகள்தான் ஆண்டாளும் காரைக்காலம்மையாரும். சங்கம் தொட்டே பெண்கவிகளின் பாடல்கள் அகம் சார்ந்து மட்டுமல்ல புறம் சார்ந்தும் அமைந்திருந்தன. களவு, கற்பு முதல் மன்னன் செங்கோலாட்சி வரை பெண்கவிகள் பாடாதவை இல்லை. சங்க காலப் பெண்கவிகளின் கருத்து சுதந்திரம் அவர்களின் படைப்புகளில் மிளிர்கின்றன.

இதைக்காட்டிலும் சம கால பெண்கவிகளின் கவிதைகள் துணிவான பாய்ச்சலை வெளிப்படுத்துகின்றன. இந்த வரிசையில் சமிபத்தில் வெளி வந்திருக்கும் கனிமொழியின் கவிதை நூல் 'சிகரங்களில் உறைகிறது காலம்' மனதின் நுண்ணிய உணர்வுகளை நெசவாலனின் மென் பதத்துடன்நெய்திருக்கிறது.

''ஈன்று புறந்தருதல் எந்தலைக்கடனே'' (புறம். 312)
''படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மாண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முளையறுத் திடுவேன்யான் .........'' (புறம். 278)

என்றும் பாடினர் சங்கப் பெண்கவிகள். ஆண்மகனைப் பெற்றெடுத்தல் எனது கடமை;
போரில் தன் மகன் புறமுதுகிட்டு ஓடியிருந்தால் அவன் வாய் வைத்து பால் உண்ட மார்பை அறுத்து எறிவேன் என்று சொன்ன சங்கப்பெண் வீரத்தாயாக சிலை வைக்கப்பட்டாள். சிலையாய் செதுக்கியது போதும் எங்கள் சிந்தனைக்கு பதில் சொல் என்கிறார்கள் இன்றைய பெண்கவிகள்.

" உன் தீரம் தகைக்கவும்/ வீரம் விளைக்கவும்/
விழலான என் பிள்ளை
பெருமை என்றாய், உரிமை என்றாய்
எதைக் கண்டேன் நான்.
.............................................
என் கருவறை சுமந்த
கோமேதத்தை எடுத்து
போனாய் உன்
கிரீடத்தில் அணியாய் சேர்க்க''
என மௌனப் பறை உரக்க அடிக்கிறார் கனிமொழி. போரை, "சரித்திரத்தின் கரிமப் பதிவுகளாய்" காண்கிறார் கனிமொழி. தாய்வழி சமுகத்தின் வளர்ச்சி எத்தனைக் கொடுத்திருக்கும் என்ற கனவினை காணச் சொல்கிறது. இந்த வரிகள்.

போர் சுழலில்,
" அச்சத்தின் வேர்கள்
நீளுகின்றன தலைமுறைகள் தாண்டி" என்று கூறும் கவிஞர்,
" 'ஒருமித்த குரலில்
கரிசனத்தை
வெளிப்படுத்தினோம்' "
என்று போருக்கு 'வெள்ளை கொடி காட்டும்' தலைவர்களையும் தாக்க தவறவில்லை. பெண் கவிஞை, சமூகப் பொறுப்பில் உள்ள போது வெளிப்படுத்தும் உணர்வுப் பதிவுகள் மிக்கியமானவை. அவ்வகையில் கனிமொழியின் கவிதைகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை.
தனிமை கவிதை பிறக்க இன்றியமையாதது. தனக்குள் இருக்கும் தனிமையை அடையாளம் கண்டு கொள்ளும் கவிஞர் கனிமொழி, சமுகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் உள் வாங்குகிறார். அதனை அழகாக பதிவும் செய்து இருக்கிறார். 'சமூகம்' என்ற கவிதையில் இன்றய சமுகத்தின் இயல்பை மிக இயல்பாக எடுத்துக் கூறி இருக்கிறார். மூன்று 'மயமாதல்கள்' சேர்ந்து மனிதனுக்குக் .
கொடுத்திருக்கும் நிலை என்ன? தோலை இழுத்துக் கட்டிய இயந்திரமாகத் தான் இன்று நவயுக யுவதிகளும் யுவன்களும் திரிகிறார்கள். இந்த அவல நிலையை 'கசகசத்த நகரம்' கவிதை காட்டுகிறது.

" பேரிரைச்சலாய் எழுந்து
பேரிரைச்சலில் அடங்கும்
நகரம்
மரியாதை நிமித்தங்களுக்கு
நேரமற்ற மொழி"
நேரமற்றவன் மனிதனல்ல. அவனது மொழி. மனிதனால் கையாளப்படும் மொழிதான் எவ்வளவு அவசரகதியில் இருக்கிறது? மனிதனிடம் வர அதற்க்கு நேரமில்லை. ஊமையாகிப் போன மனிதர்கள்/ இயந்திரங்கள்.

இந்த பரபரப்பில் எதிர்கால சந்ததிக்கு இந்த தலைமுறை வழங்கப்போவது என்ன?
"சக்கையாய்த் துப்பிய
பூமியை
.................
மகரந்தமற்ற சோலைகளை!
......................
மலட்டுக் காடுகளை !"

இந்த அவசர மனிதர்களை, விட்டு விலகவும் கவி உள்ளம் நினைப்பதில்லை. கலைஞனை எல்லாவற்றையும் ரசிப்பவன்: உணர்பவன். கருவறை வாசனையில் கனிமொழி சொன்னது,
" என் காதலில்
பெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது."
மகாகவி இன்
" காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல் " தானோ இது?
" நேசிக்காமல் வாழவும்
தெரியவில்லை
நேசிக்காமல் இருந்தததில்லை"
என்ற கனிமொழியின் கவிதை மனிதனின் மீது உள்ள நம்பிக்கை ஊற்றை வற்ற விடாமல் பாதுகாக்க சொல்கிறது.

சபிக்கப்பட்டதன் சாட்சியமே மனித வாழ்க்கை. இதில் கிடைக்கும் அடிமை வாழ்க்கை மேலும் கொடுமையானது. பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் அத்தகைய வாழ்க்கையை கனிமொழி ' அவிழும் தினங்கள்" என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.. செக்கு மாட்டு வாழ்க்கை வாய்க்கப்பெற்ற பெண்கள், தங்கள் வாழ்வில் தினங்கள் ஒவ்வொன்றாய் " அவிழ்த்து விழட்டும்" என ஏங்குவது தவிர வேறு என்ன செய்வார்கள்?

பெண் மீதான அடையாளங்கள், சமூகம் அவளுக்குக் கொடுத்த சவுக்கடிகள் என்பதை "அச்சம்" , "சீதை மகள்" , "ரௌத்திரம் ததும்ப" போன்ற கவிதைகளில் கனிமொழி விவரிக்கிறார்.
கவிஞர்கள் மிக மிக மென்மையானவர்கள். சிறு குழந்தையின் இயல்பான ஆச்சரியமும் பயமும் நிறைந்து ஒருவித பாதுகாப்புணர்வும் வேண்டி நிற்ப்பவர்கள் அவர்கள். வார்த்தைகளை விதைக்கும் கவி உள்ளத்திற்கு வார்த்தைகள் காட்டும் அச்சுறுத்தல்கள் தான் என்ன?

"அம்புகளைப் போல் சீறிப் பாய்கின்றன !
நீதி கேட்ட
ரத்தினப் பரல்களாய்
வெடித்துச் சிதறுகின்றன !
................................................
கயிறாய் திரித்த பின்
கழைக் கூத்தாடியின் லாவகத்தோடு
அவற்றின் மீது நடக்க !
சமுகத்தின் அவலங்களை காண்பதும் அதனை செரித்துக் கொள்வதும் கவிஞர்களுக்கு எளிதான காரியம் அல்ல. இனம் புரியாத அவஸ்தை அவர்களைக் குடைந்து கொண்டேதான் இருக்கும். ' சிறு பறவைக்குக் கிடைக்கும் அமைதி"யே நகரங்கள் கொடுக்கும் அவஸ்தைகள் இடையே கலைஞர்களுக்கு போதுமானதாய் இருக்கிறது.

" மெத்தென்ற
அணைப்பில் என்
பிள்ளையோடு நான்
உறங்கும் சூட்சுமம் !
'சாலை ஓர தாய்க்கு ஒரு ருபாய் வழங்குவதில் தான் உள்ளது' என காட்டுவதும் கவியின் மென் மனம் அன்றி வேறு எது?

கவிதையின் வீர்யத்தை உணர்ந்து ஓவியங்களை தந்திருக்கும் சந்ரு பாராட்டுக்குரியவர். ஓவியங்கள் தனியே ஒரு வெளியில் ஆவர்த்தனம் செய்கின்றன. புத்தக வடிவமைப்பும் சிறப்பாய் செய்யப்பட்டிருக்கிறது.கனிமொழி கூறுவது போல, ' நம்பிக்கை என்பது மேசையின் விளிம்பில் உள்ள கண்ணாடிக் குவளையாய் இருப்பினும் அதைப் பாதுகாப்பதோ அல்லது மீண்டும் கண்ணாடிக் குவளையை மேசைமீது வைப்பதோ' தான் மனித வாழ்க்கை ஆகிறது.


No comments:

Post a Comment