Thursday, October 14, 2010

மூடிக்கிடக்கும் சாளரங்கள்...



வடக்கு வாசல் 2008 இல் வெளியிட்ட இலக்கிய மலர் தொடர்பான எனது கட்டுரை. சிற்றிதழ்களை நடத்துபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது..

வடக்கு வாசல் இலக்கிய மலர் வெளியீட்டு விழாவுக்காக நண்பர்களுடன் வந்திருந்த நான் இதழ்கள் விற்பனையாகும் ஸ்டாலின் முன் நின்றிருந்தேன். மாலை 6 மணி ஆனவுடன் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் மேஜையில் வைக்கப்பட்டிருந்த புதிய, பழைய இதழ்களை பார்த்தவாறே வேகமாக வந்த ஒருவர் இதழை எடுத்துக் கையில் வைத்து கொண்டார். பின்பு சந்தேக தொனியில் ப்ரீ தானே?' என்றார். இதழ் வடிவமைப்பாளர் செந்தில் இல்லே, சார் ஒரு புத்தகம் பத்து ரூபாய் என்றார். உடனே சுற்றும் முற்றும் பார்த்தவர் இதழை கைவிட்டவராக வேக வேகமாக அரங்கத்தினுள் நுழைந்தார். செந்திலின் கண்களும், என்னுடைய கண்களும் ஒரு முறை சந்தித்து சிரித்து கொண்டன. கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நல்ல நிகழ்வு அது. பி.ஏ.கிருஷ்ணன் அறிவு பூர்வமான பேச்சோடு, முன்னள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தன்னம்பிக்கையூட்டும் உரையோடு சிறப்பாக நிகழ்ந்த விழாவில் விற்பனையாகியிருந்த இலக்கிய இதழ்களின் எண்ணிக்கை தான் வருத்தமளிக்கும் வகையில் இருந்தது. வெறும் பார்வையாளர்களாக வடக்கு வாசல் நடத்தும் இசை விழா மற்றும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ளும் நண்பர்கள் வாசகர்களாய் மாறுவது எப்போது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. வாசிப்பு பழக்கம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்கிற தகவல்கள் கிடைக்கிறபோதும் இன்னொரு பக்கம் அது வெறும் செய்தி தானோ என எண்ண வைக்கும் அளவு புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் விற்பனை கவலை தருகிறது.

இதழ் தொடங்கிய காலத்திலிருந்து வடக்கு வாசலுடன் நெருங்கிய உறவில் இருக்கும் நான், முதல் இதழின் பிரதியை கையில் வைத்துக் கொண்டு கண்களிலும், வார்த்தைகளிலும் உறுதியுடன் பேசிக் கொண்டிருந்த ஆசிரியரை ஒருமுறை நினைத்துப் பார்த்தேன். வாசகர்கள் பலர் அறியாத பக்கங்களைத் தன்னுள் கொண்டவர் அவர். நவீன நாடகம் மற்றும் நவீன இலக்கியம் போன்றவற்றில் அவரின் தேர்ந்த பயிற்சியும் ஆழ்ந்த அறிவும் பலமுறை என்னை பிரமிக்கச் செய்திருக்கின்றன. பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்று வரும் பொழுது அது குறித்து அவரின் தீர்மானங்கள் மிக வித்தியாசமானவையாக அமைந்தன. வாசகனை தேடச் செய்யும் கடினமல்லாத ஒரு எளிய மொழியை வழங்க வேண்டும் என்று அவர் தொடக்கத்திலிருந்தே உறுதியாய் இருக்கிறார். புதிய எழுத்தாளர்களை மட்டுமன்றி புதிய வாசகர்களை உருவாக்க வேண்டும் என்கிற தீவிர எண்ணம் அவருக்கு உண்டு. மிக முக்கியமாக அட்டைப் படங்களில் அவர் செலுத்தும் கவனம் மற்ற தீவிர மற்றும் வணிகப் பத்திரிகைகளில் கிடைக்கப் பெறாத அம்சம். இதழில் பிரசுரமாகும் கட்டுரைகள் மற்றும் முக்கிய எழுத்தாளர்களின் பெயர்களை அட்டையில் பிரசுரித்தால் விற்பனைக்கு உதவியாயிருக்கும் என்பது போன்ற யோசனைகளை அவர் முற்றிலும் நிராகரித்து விடுவார். புகைப்படத்தின் அழகியலில் குறுக்கிடுவது அதைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சமம் என்பது அவர் கருத்து.

வாசகர்களில் பலர் ஒரு இலக்கிய மாத இதழ் எவ்வளவு சிரமத்திற்கு இடையில் தயாராகிறது என்பது பற்றிய அக்கறை கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். அசோக மித்திரன் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல் பலருக்கு செய்திகளை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் நல்ல புனைவுகள் மற்றும் அறிவுசார் கட்டுரைகளை வாசிப்பதில் இருப்பதில்லை. நல்ல இலக்கியம் மனித மனத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை எனினும் பலர் இதுபோன்ற விஷயங்களை வாசித்தல் ஒரு அர்த்தமற்ற வேலை என்பது போன்ற மனோபாவம் கொண்டவர்கள். புத்தக, பத்திரிக்கை வாசிப்பு பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குன்றிவருகிறதா? இல்லை வலைத்தளங்களிலே நிறைய விஷயங்கள் கிடைப்பதால் வாசகர்களின் பெரும்பகுதி அந்தப் பிராந்தியத்துக்குள் சென்று விட்டதா என்பது புரியவில்லை.

மிகச் சிறப்பான முறையில் வடிவமைப்போடும் நல்ல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளோடும் வெளியாகியிருக்கும் இலக்கிய மலர் தயாரிப்பில் எத்தனை பேர் ஈடுபட்டிருந்தார்கள் என்று தெரிய வந்தால் ஆச்சரியமாயிருக்கும். முழுக்க முழுக்க ஆசிரியரும், வடிவமைப்பாளர் செந்தில் மட்டுமே மிகக் கடுமையாக உழைத்து இந்த மலரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அகஸ்டஸ், சுரேஷ் சுப்ரமணியம் போன்றோர்களின் ஆலோசனையோடு கிட்டத்தட்ட தனிமனிதனக நின்று இலக்கிய மலரை வெளியிட்டு இருப்பது பென்னேஸ்வரனின் மிகப்பெரிய சாதனை.

இதழில் வெளியாகும் பல இளம் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை வெளியிடுவதற்காக பல பெரிய கவிஞர்களின் சாதாரண கவிதைகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரித்ததை நான் நேரில் கண்டதுண்டு. இப்படி செய்வதினல் அவர்களின் பகைக்கு ஆளாக நேரிடுமே என்றால் "பரவாயில்லை நன்றாக எழுதுபவர்களை அடையாளம் காண்பது தான் எனக்கு முக்கியம் என்பார். இதழில் வெளியான நேர்காணல்களுக்காக அவர் உழைத்த விதம் பிரமிப்புக்குரியது. தெரிந்த பலரின் தெரியாத பக்கங்களையும் புதிய சாதனையாளர்களையும் அறிஞர்களையும் மிகச் சிறந்த முறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த நேர்காணல்கள் அவை.

முன்பு தொடர்ந்து மொழி பெயர்ப்புகளையும், சிறந்த சிறுகதைகளையும் வழங்கி வந்த ஆசிரியர் ஒரு கட்டத்துக்கு மேல் அவற்றைத் தருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டார். இந்த முறை எதுவும் எழுதவில்லை என்றால் "எனக்கு இருக்கும் வேலைப்பளுவில் அதற்கு நேரமே கிடைப்பதில்லை'' என்பார். ஒரு பத்திரிகை ஆசிரியர் நேரடியாக செய்யத் தேவையில்லாத வேலைகளில், வேறுவழியின்றி தானே ஈடுபடுவதைத் தவிர கொடுமையானது ஏதும் இல்லை. நவீன இலக்கியத்திலும் நாடகத்திலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் விளம்பரம் சம்பந்தமாகவும் விற்பனை சம்பந்தமாகவும் அலைந்து திரிவது எவ்வளவு துயரமானது?

வாசகர்கள் பல்வேறு விதமான பத்திரிகைகளை வாசிக்கிறார்கள். சிலவற்றை தொடர்ந்தாற் போலும், சிலவற்றை நேரம் கிடைக்கும் போதும் வாசிப்பது உண்டு. ஒரு வாசகனக நான் சக வாசகர்களை கேட்டுக் கொள்வது இதுதான். நல்ல பத்திரிகையை அடையாளம் காணுங்கள். வெளியாகும் விஷயங்கள் மீது தங்கள் கருத்தை கொண்டு தர்க்கம் செய்யுங்கள். வடக்கு வாசல் மட்டுமின்றி பல சிற்றிதழ்கள் பல்வேறு சிரமங்களிடையில் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடக்க வாசகர்கள் தங்கள் ஆதரவை நல்க வேண்டும்.

http://www.vadakkuvaasal.com/article.php?id=93&issue=47&category=4

No comments:

Post a Comment