Sunday, February 28, 2010

'மை நேம் இஸ் கானை' முன்வைத்து..




கான் பதட்டமான நடையுடன் பெரிய பை ஒன்றை முதுகில் சுமந்தபடி ஏர்போர்டில் நுழையும் முதல் காட்சி் , படம் ஒரு சீரியசான தளத்தில் இருக்கப்போவதை சொல்லிவிடுகிறது. 'அஸ்பர்கெர் ஸிண்ட்ரோம் ' எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, கூட்டம், மஞ்சள் நிறம் போன்றவற்றால் கலவரம் அடையும் மனது கொண்ட கான் பயணிகள் வரிசையில் பிரார்த்தித்தபடி நின்று கொண்டிருக்க அவனை தீவிரவாதி என ஒரு பெண் சந்தேகப்படுகிறாள் .உடனே அமெரிக்க காவலாளிகள் கானை தனியறையில் சோதனை போடுகின்றனர்.கான் அபாயகரமான எந்த பொருளும் சுமந்திராத அப்பாவி என சோதனையில் தெரியவர அவரை விடுவிக்கும் அதிகாரிகளில் ஒருவர் அவர் வாஷிங்டன் DC க்கு போக காரணம் கேட்கிறார். ' அமெரிக்க அதிபரை' சந்திக்கபோவதாக சொல்கிறான் கான். "ஒசாமா இருக்கும் இடத்தை சொல்லப்போகிறாயா" என ஒரு அதிகாரி கிண்டல் சிரிப்புடன்கேட்க , அதை மறுக்கும் கான் தான் அதிபரிடம் சொல்லபோகும் செய்தியை கான் உறுதியுடன் சொல்கிறான். " My name is Khan and i'm not a terrorist". அதிகாரியின் முகம் சிந்தனையில் உறையும் காட்சி மறைய கான் எலிவேட்டரில் மேலே செல்கிறான். அருகில் , கீழ்நோக்கி இறங்கும் படிக்கட்டில் யாருமே இல்லை. மதத்தின் பெயரால் மனிதத்தை இழந்து வரும் பலர் அந்த படிக்கட்டில கட்புலனாகாமல் இருப்பதாக தோன்றியது எனக்கு. இந்த படம் சொல்லவந்த செய்தி இது தான். இந்த ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக எடுத்திருந்தால் ஆக சிறந்த குறுமபடமாக பல விருதுகளை வென்றிருக்கும். இந்திய குறிப்பாக ஹிந்தி சினிமா செண்டிமெண்ட் பலவற்றை கலக்கி அடித்திருப்பதால் , சொல்லவந்த செய்தி நீர்த்து போய்விடுகிறது.

படம் கான் தன மனைவி மந்திராவுக்கு எழுதும் கடிதத்தின் குரலாக நீள்கிறது. அஸ்பர்கெர் ஸிண்ட்ரோம் ' குறைபாடுள்ள சிறுவன் கானை அவன் தாய் அவனை மிகவும் நேசிக்கிறாள். மனிதர்களில் இருவகை தான் உண்டு. நல்லவன் அல்லது கெட்டவன் என்று சொல்லி அவனை மனிதத்துடன் வளர்க்கிறாள். அவனை ஒரு படித்த , வேலையில்லாத ஒரு பார்சி மனிதரிடம் படிக்க ஏற்பாடு செய்கிறாள். அவனது புத்திக்கூர்மையை உணரும் அம்மனிதர் அவனுக்குள் ஆங்கில அறிவை வளர்க்கிறார். தன்னை விட அண்ணனுக்கு தான் தாய் முக்கியத்துவம் தருகிறாள் என நினைக்கும் கானின் தம்பி பதினெட்டாவது வயதிலேயே அமரிக்க பல்கலை கழகம் ஒன்றில் படிக்க சென்றுவிட , தாய் மனமுடைகிறாள். பிறகு தாயும் மறைந்துவிட தன தம்பி இருக்கும் அமெரிக்காவுக்கே செல்கிறான் கான்.

அங்கு காதல் திருமணம். இடையில் 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கர்களால் தாக்குதலுக்கும் வெறுப்புக்கும் ஆளாகும் இஸ்லாமியர்களின் துயரம் என்று பயணிக்கும் படம், எந்த தொடர்பும் இல்லாமல் ஜியார்ஜியா புயலில் தவிக்கும் மக்களை 'காப்பாற்றும்' super hero போல் கானை சித்தரிக்கிறது. தொடர்ந்து மீடியாவின் பரபரப்புகளும் மக்களின் ஓவர் அக்டிங் ரியாக்ஷன்களும்
விக்ரமனை நினைவுபடுத்துகின்றன. தேவைக்கும் மீறிய நீளம் படத்தின் செய்தியை எங்கோ அடித்து சென்று விடுகிறது.

இதே plot இல் அமைந்த New York போன்ற சில படங்களின் மிக பெரிய குறைபாடே சொல்ல படத்தின் தவிர தன்மையை Entertainment elements ஐ கொண்டு கொன்று புதைக்கும் 'விக்ரமன்' பாணி தான். New York இல் முதல் பாதி முக்கோண காதல் கதையாகவும் இரண்டாம் பாதி த்ரில்லர் டைப்பாகவும் அமைந்து விடுகிறது. 9/11 க்கு பிறகு அமெரிக்காவில் இஸ்லாமியர் சந்திக்கும் அடக்குமுறைகளையும் துவேஷத்தையும் முழுமையாக காட்ட முடிவதில்லை இவர்களால். இந்த விஷயத்தை ஓரளவு தொட்டு செல்கிறது My name is Khan. கானின் தம்பி மனைவி உட்பட , ஆப்கானியராக பார்க்கப்படும் சீக்கியர்கள் வரை இவ்வாறு தாக்கபடுவதை படம் பதிவு செய்கிறது. எனினும் வீர்யமாக இல்லை.

சில விதிவிலக்குகள் உண்டு .90 களின் பாம்பே குண்டு வெடிப்பு, அதற்கு முக்கிய காரணமாக இருந்த பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றை தைரியமாக கையாண்ட அனுராக் காஷ்யப்பின் ' Black Friday' ஒரு நல்ல உதாரணம். சம்பத்தப்பட்ட அரசியல்வாதிகள், பிரமுகர்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்துவதில் இருந்து பிரச்னையின் பின்னணியையும் , விசாரணையின் நிஜ முகத்தையும் உண்மைக்கு மிக அருகில் சென்று பதிவு செய்யும் வரையில் முடிந்தவரை சிறப்பாக எடுக்கப்பட்டஇப்படம் பரவலாக கவனம் பெறவில்லை. நமக்கு ஹிந்து- முஸ்லிம் ஒருமைப்பாடை வலியுறுத்தும் 'பாம்பே' போன்ற படங்களில் கூட 'ஹம்மா..ஹம்மா' தேவையாய் இருக்கிறது. அப்போது தான் நாம் திரையரங்கை நோக்கியே திரும்புவோம். யாருக்கு வேண்டும் 'செய்தி?'
திரைப்படத்திலேயே தீர்வு சொல்ல முடியாது தான் என்றாலும் சிந்திக்க வைத்து விட கண்டிப்பாக முடியும். அதற்கு தேவை ஆழமான பார்வை..இந்தியாவின் பல இயக்குனர்களிடம் இல்லாத விஷயம் அது தான்.

படத்தில் கானின் ஹிந்து மனைவியான மந்திரா தன மகனின் இறப்புக்கு, கானின் மதப்பெயரை சுமந்தது தான் காரணம் என்று அபத்தமாக சிந்திப்பது மட்டுமல்லாமல் எந்த பாவமும் அறியாத கானை கரித்துகொட்டுவது தேவையில்லாத காட்சி. ஈடு செய்யமுடியாத இழப்பு என்று வரும்போது மனம் தடுமாறுவது உண்மை தான் என்றாலும் அதற்கான சரியான base இல்லாமல் அவர் கானிடம் கடுமையாக நடந்து கொள்வது மிக பெரிய குறை. ஆனால் கரன் ஜோகர் இதை முக்கிய காரணமாக எடுத்து தான் திரைக்கதையையே புனைகிறார். மேலும் ஒரு நாட்டின் அதிபரை சந்தித்து 'நான் தீவிரவாதி அல்ல' சொல்வதன் மூலம் அல்லது அதிபர் 'வெரி ஸாரி' என்று சொல்வதன் மூலம் பிரச்சனை தீந்து விடுமா? ஒபாமா போல் தோற்றமளிக்கும் அந்த அதிபர் தன உரையை தொடங்கியவுடன் அவர் குரல் mute செய்யப்பட்டுமந்திராவின் ' எண்ணக்குரல்' ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது. 'என் கோபத்தால் சாதிக்க முடியாததை உன் அன்பால் சாதித்து விட்டாய் என்று ' என்று கானை பற்றி மந்திரா நினைப்பதாக படம் முடிகிறது. அதிபர் என்ன பேசினார் என்று காட்டாமலேயே அவர் பேச்சை கேட்டு ஆரவாரிக்கும் கூட்டத்தின் நடுவே பெருமிதத்துடன் கானும் மந்திராவும் நடந்து செல்கையில் படம் தான் சொல்ல வந்த செய்தியை விட்டு எங்கோ போய் விட்டதை இறுதியாய் உணர்கிறோம். கரை வேட்டி கட்டி மேடையில் முழங்கும் நம்மூர் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் நாம் திட்டமிட்டு சிறுபான்மையினர் மீது அடக்குமுறை செய்யும் ஒரு நாட்டின் அதிபர் மேடையில் பேசினாலே பிரச்னை தீர்ந்து விடும் என்று நினைக்கும்படி கதை அமைக்கும் புத்திசாலி இயக்குனர்களிடம் சரணடைகிறோம். தீராத சாபம் தான் இது.


படத்தை அதன் plot ஐ தவிர்த்து பார்த்தால் மிக அழகான காதல் கதை கிடைக்கிறது. ஷாருக்கின் அற்புதமான நடிப்பும், கஜோலின் உயிர்ப்பான கதாபாத்திரமும் உடல்மொழியும் மிக அழகாக வெளிப்பட்டிருக்கின்றன.பாராட்டப்பட வேண்டிய இன்னொரு பாத்திரம் கானின் தம்பி மனைவியாக வரும் பெண்ணுடையது. கணவனின் அண்ணனை ஒரு தாயின் பரிவுடன் கவனித்துக்கொள்ளும் அவள் காதலித்து திருமணம் செய்யும் கான்- மந்திரா திருமணத்துக்கு தன கணவனின் எதிர்ப்பையும் மீறி வந்து.. கானை மணமகனாக அலங்கரித்து பூரிக்கிறாள். தம்பியாக வரும் ஜிம்மி ஷெர்கில் , அம்மாவாக நடித்திருக்கும் பெண் பக்கத்துக்கு வீட்டு அமெரிக்க குடும்பம், என பலர் சிறப்பாக நடித்திருக்கின்றனர் . படத்தின் பின்னணி இசையை விட அவ்வபோது பாடல்களே ஒலிக்கின்றன. காட்சியின் தீவிர தன்மையை பாதிக்கும் முக்கிய குறைபாடு இது. ரவிசந்திரனின் நேர்த்தியான ஒளிப்பதிவு சிறப்பு.

எனினும் எந்த பிரச்னையை பேச வேண்டுமோ அதை பேசாமல் தடம் மாறிவிடுவதால் படம் தன பொலிவை இழக்கிறது.




9 comments:

  1. hey.. chandru.. nice to read ur writings after a long time.. nice review without any bias.. great work.. keep it up - Arivu, Muscat

    ReplyDelete
  2. A really different review from the other 'awestruck' types!!!

    ReplyDelete
  3. good da - Chandrasekar

    ReplyDelete
  4. Very good review sir..

    ReplyDelete
  5. நண்பரே,கரன் ஜோகர் வழக்கமான (கள்ளக்)காதலை விடுத்து இந்த கருவை எடுத்ததற்கே பாராட்டியாக வேண்டும்.நிறைய நல்ல படங்கள் வருது ஹிந்தியில்.எழுதுங்க பாஸ்.

    ReplyDelete
  6. அப்படி இல்லை இராவணன் ..
    இது போன்ற 'முயற்சிகள்' மேம்போக்காக மட்டுமே செய்யப்படுகின்றன என்பது என் ஆதங்கம். குஜராத் கலவரம் பற்றி பேசிய 'பர்சானியா' , நந்திதா தாசின் Firaaq போன்ற படங்களில் சமரசம் என்பதே இல்லை. 'மை நேம் இஸ் கான் ' ஒரு முக்கியமான கருத்தை சுமந்தாலும் நிறைவாக எடுக்கப்படவில்லை . ஹிந்தியில் வரும் மற்ற படங்களை குறித்து எழுதுவேன். நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் எழுத்து நடை மேலும் மேலும் செம்மையாகி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    திரை விமர்சனத்தில் மதிப்பெண் அல்லது நட்சத்திர குறியீடு அல்லது 7/10 போன்ற குறியீடுகளும் நச் என்று விமர்சனத்தை நிறைவு செய்யும்.

    வாழ்த்துகள் !

    ஹார்ட்டா

    ReplyDelete
  8. Nalla paarvai..
    Ramesh

    ReplyDelete