Tuesday, November 6, 2012

ராஜன் குறை: நேர்காணல்

உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா மீதான தெளிவான பார்வையோடு இயங்கி வருபவர்களில் முக்கியமானவர் ராஜன் குறை. தமிழ் வணிக சினிமாவின் சாத்தியங்களையும் அதன் உள்ளீடான விஷயங்களையும் பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். தில்லியில் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் அவருடன் த சன்டே இந்தியன் பத்திரிக்கையின் சார்பில் செய்த நேர்காணல்...
 


 உங்கள் கல்வி மற்றும் இளமைப்பருவம் பற்றி..

விசேஷமாக சொல்லக்கூடிய  இளமைப்பருவம் கிடையாது. சாதாரண நடுத்தரக் குடும்பம் தான். சாதாரண பள்ளிகளில் தான் கல்வி. ஆனால் என் மிக இளைய வயதிலேயே நாவல்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அறுபத்தெட்டாம்  ஆண்டு ஆடிப்பெருக்கு சமயம் என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்க தொடங்கினேன். பதினொன்றாம் வகுப்பு முடிக்கும் முன்னர் சுமார் முன்னூறு தமிழ் நாவல்கள் வாசித்திருப்பேன். வாரம் ஒன்று அல்லது இரண்டு நாவல்கள் வாசித்திருப்பேன். உள்ளூர் நூலகங்களில் நாவல்கள்  படிக்கக் கிடைத்தன. என் அண்ணன் எடுத்துத் தருவார் . அடிப்படையில் அந்த நாவல்கள் படித்தது தான் என்னை உருவாக்கியது என்று நம்புகிறேன். அது தான் எனக்குள் ஒரு சிந்தனையை உருவாக்கியது என்று நினைக்கிறேன். கல்லூரி சென்ற பின்னர் ஆங்கில நாவல்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்போது உலக இலக்கியங்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. 82' இல் கல்லூரி முடித்த பின்னர் திருச்சி வாசகர் அரங்கம் என்ற சிறுபத்திரிக்கை சார்ந்த குழு ஒன்றுடனும்  சினி ஃபோரம்  திருச்சி என்ற அமைப்புடனும் தொடர்பு ஏற்பட்டது. பி.யூ. சி வரைக்கும் கோவையில் தான் படித்தேன். திருச்சி நேஷனல் கல்லூரியில் இளங்கலை இலக்கியம் படித்தேன்.

திரைப்பட சங்கம் பற்றி..

நாவல் படிப்பதிலும் சினிமா பார்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. ஒரு கட்டத்தில் ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், அசோகாமித்திரன் போன்றோரின்  நாவல்கள் வாசிக்கத் தொடங்கிய பின்னர்  நம் திரைப்படங்களில் அது போன்ற நாவல்களின் பண்பு இல்லையே  என்று பட்டது. நாவல்களில் கிடைத்த அனுபவத்துக்கும் சினிமாவில் கிடைத்த அனுபவத்துக்கும் ஒரு இடைவெளி இருந்தது போல் எனக்குத் தோன்றியது. திரைப்பட சங்க பரிச்சயதுக்குப் பின்னர் என்ற Bitter Love ஒரு இத்தாலிய திரைப்படம் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் இதற்காகத் தான் ஏங்கிக்கொண்டிருந்தேன் என்று தோன்றியது. விஷூவலாக அந்தப்படம் என்னை ஈர்த்தது.  ஹாலிவுட் படங்களில் ஒரு சாகசத் தனம் தான் இருக்கும். அதில் அன்றாட வாழ்க்கை பதிவாவதில்லை. இந்தப் படம் நான் எதிர்பார்த்தவற்றை தந்தது.  நல்ல இலக்கியங்களில் நாம் காண்பது போல இந்தப் படம் அன்றாட வாழ்வின் மனித உணர்வுகளின் நுட்பங்களை அழகாகக் கையாண்டிருந்தது அந்தப் படம்.. அதன் தாக்கத்தில் பிறகு தீவிரமாக திரைப்பட சங்கத்தில் இயங்க ஆரம்பித்தேன். திருச்சி சினி ஃபோரத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரமாகப் பங்காற்றினேன். அது டிவிடிக்களுக்கு முன்பான காலம். வெளிநாடுகளின் தூதரகங்களின் மூலமாக உலகப் படங்களை வாங்கித் திரையிடுவோம்.

மானுடவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கிறீர்கள். சினிமா பின்னணி கொண்டதா அந்த ஆய்வு?

திரைப்பட சங்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் எனக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. சமூகம் மேம்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இளம் வயதில் இருந்தே இருந்து லட்சியம். பாரதியாரை படித்ததனால் ஏற்பட்ட சிந்தனை அது. மக்களுக்காக நக்சலைட்டாக மாறிவிடலாமா என்றெல்லாம் எண்ணம் இருந்தது. மார்க்சியத்தின் மீது ஈடுபாடு இருந்தது. கட்சிகளில் சேராமல் இருந்தாலும் அரசியல் மற்றும் சமூக அக்கறை இருந்தது. '69 இல் என்று துக்ளக் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பத்து  வருடங்கள் அதை வாசித்து வந்தேன். பிறகு அந்த பத்திரிக்கையுடன் எனக்கு ஒரு விலக்கம் ஏற்பட்டது. வலது சாரி இடது சாரி கருத்து முரண்பாடுகளால் உண்டான ஒரு விலக்கம் அது. எம்.ஜி.ஆர் முதல்வரான பின்னர் ஒரு சினிமா நடிகர் ஆட்சிக்கு வரலாமா என்ற பேச்சு இருந்தது. உலக சினிமாக்கள் பார்த்த அனுபவத்தில் தமிழ் சினிமாக்களை பார்க்கும்போது மக்களுக்குத் தேவையான சினிமாவாக அது இல்லையே என்று தோன்றியது. ஆனால் மக்கள் தங்களுக்கு உண்மையில் அவசியம் உள்ள, விழிப்புணர்வு தரக்கூடிய படங்களை பார்க்காமல் தமிழில் வெளியான வழக்கமான படங்களையே பார்த்துக்கொண்டிருந்தது எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. திரைப்பட சங்கம் மூலமாக குடிசைப் பகுதி மக்களுக்கு நல்ல சினிமாக்களை எடுத்து சென்றோம். நாம் அவர்களிடம் கொண்டு செல்லும் நல்ல படங்களை அவர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்களாகத் தேடி சென்று பார்த்த படங்கள் வணிகப் படங்களாகவே இருந்தன. அவர்களுக்கு என்ன தேவை என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு மாறாக அவர்களுக்கு வேறு வகையான சினிமா தேவையாக இருந்தது. இதில் ஒரு முரண்பாடு  இருக்கிறது அல்லவா? இதை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்வி எனக்கு இருந்தது. அந்த சமயத்தில் கலாச்சார ஆய்வு தொடர்பான படிப்புகள் கல்விப்புலங்களில் பிரபலமாக ஆரம்பித்தன.  வெகுஜனக் கலாச்சாரத்தை எப்படி புரிந்துகொள்வது..இந்திய வெகு ஜன சினிமா  பற்றி கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்ற தகவல்கள் நண்பர்கள் மூலம் தெரியவந்தன. ஆசிஷ் நந்தி போன்றோர் இது பற்றி நிறைய எழுதினார்கள். அவர் தொகுத்த The Secret Politics of Our Desires புத்தகம் முக்கியமானது. சுந்தர் காளி போன்றோர் அதில் கட்டுரை எழுதி இருந்தார்கள்.அவர் எனக்கு நல்ல நண்பர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் பராசக்தி படம்  பற்றி எழுதிய புத்தகமும் ரம்.ஜி.ஆர் பற்றி எழுதிய Image Trap ஆர்வம் தந்தது. பிறகு வெகுஜன சினிமாவை புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. எனவே அது தொடர்பாக படிக்க வேண்டும் என்று உத்வேகம் ஏற்பட்டது. அதே போல கிராம்ஷி எழுதிய புத்தகங்கள் இந்த சிந்தனையை வலுப்படுத்தின. அப்போது ஏற்பட்ட ஆர்வம் வெகு ஜன சினிமா பக்கம் செல்ல வைத்தது. எனவே இது தொடர்பான ஆய்வு செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

தமிழ் சினிமா குறித்த ஆய்வை தொடர்ந்து செய்து வருகிறீர்கள். உலக சினிமா மீது பார்வை கொண்ட உங்களுக்கு தமிழ் சினிமாவின் போதாமைகள் பற்றிய விமர்சனம் என்ன?

போதாமை என்பதை யார் முடிவு செய்வது என்பது தான் முக்கியமான கேள்வி. முந்திரிப் பருப்பு இல்லாத உணவை சாப்பிடாமல் இருக்கவே முடியாது என்று நாம் இருந்தால் முந்திரிப் பருப்பு இல்லாதது ஒரு போதாமை மாதிரி தான் தெரியும். நம்முடைய பழக்கம், தேர்வுகள் போன்றவற்றை வைத்தே விஷயங்களை அணுகினால் அப்படித் தெரியலாம். சமூக ரீதியாக ஐரோப்பிய கலைப் படங்கள் போல தமிழில் ஏன் வரவில்லை என்ற கேள்வி இருக்கிறது. இது ஒரு சமூகவியல் கேள்வியா என்றே எனக்கு சந்தேகம் இருக்கிறது. இதுபற்றி பல கருத்தரங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் யாரும் இதை கவனிக்கவில்லை. ஒரு உதாரணம், நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில் வெறும் கலைப்படங்கள் தான் பார்ப்பார்கள் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அங்கும் விஜய் நடித்த தமிழ் படங்கள் தான் பார்க்கிறார்கள். சிவாஜி, எம்.ஜி.,ஆர் காலத்திலும் அவர்கள் படங்கள் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றன.இங்கே உள்ள ரசனை தான் அங்கேயும். ஆனால் அங்கே அரவிந்தன் நல்ல படம் எடுக்க முடிந்தது. எப்படிஎன்றால் அவர் நல்ல கார்டூன் வரைபவர், சினிமா பற்றி பேசுபவர். அவரது அறைக்கு பல நண்பர்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பணக்கார நண்பர்  "நான் பணம் தருகிறேன்..படம் எடுங்கள்" என்றார். அரவிந்தன் படங்கள் எடுக்கத் தொடங்கினார். அவரது படங்களுக்கு வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் உள்ளூரில் யாரும் அரவிந்தன் படம் தான் பார்ப்பேன் என்று அலையவில்லை. அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. இது தமிழ்நாட்டிலும் நடக்க முடியும். ஆனால் யார் இங்கே இதுபோன்ற படங்களுக்கு பணம் போட  முன்வருவார்கள்? எனக்கும் அருமையான படம் எடுக்க முடியும். ஆனால் எனக்கு வாய்த்த நண்பர்கள் அப்படி அமையவில்லையே. அது தற்செயலாக நடக்க வேண்டும். இங்கே தமிழில் ஜெயகாந்தனுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. அவரும் படம் எடுத்தார். ஆனால் அவ்வளவு சிறப்பாக அவர் படம் எடுத்துவிடவில்லை .  ஏனென்றால் அவருக்கு சினிமா தெரியாது. எனவே தமிழில் நல்ல படங்கள் வராததற்கு  சங்க இலக்கியங்களில் இருந்து உதாரணம் சொல்வது, ஒட்டுமொத்த  சமூகமும் காரணம், திராவிட இயக்கம் காரணம் என்று சொல்லும் போக்கு உள்ளது. திராவிட இயக்கத்தை குறை சொல்ல என்றே ஒரு ஆசை உள்ளது சிலருக்கு. வெகுஜன அரசியல் படித்தவர்களுக்கு பிடிக்காது. அடுக்குமொழி அரசியல் சரியில்லை என்றால் வர்க்க அரசியல் பேசும் கேரளாவின் சி.பி.எம் கட்சி மட்டும் உயர்வானதா என்ன? அரசியல் என்று வந்து விட்டால் எல்லா கட்சியும் ஒன்று தான். சில வேறுபாடுகள்  இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கத்தை மட்டும் குறைசொல்லும் போக்கு இங்கு உள்ளது. பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்தை இகழ்வதில் முன்னணியில் இருக்கிறார்கள். எனவே தமிழ் சினிமாவின் நிலைக்கு இது போன்ற காரணங்கள் சொல்வது சரியல்ல. உண்மை என்னவென்றால் எல்லா ஊரிலும் சினிமா என்பது இப்படித் தான் இருக்கிறது. வெகுஜன  ரசனை என்பது வேறுமாதிரியும் கலைப்படங்கள் சார்ந்த ரசனை என்பது  வேறு மாதிரியும் இருப்பது உலகில் எல்லா இடத்திலும் நடக்கிறது.

சினிமா ஒரு குறைந்த வயதுகொண்ட கலை என்ற கருத்து  உள்ளவர்கள் நீங்கள் என்றாலும் தொழில்நுட்பம் என்பதையும் தாண்டி ஹாலிவுட் மற்றும் பல நாடுகளில் சினிமா கதை சொல்லலில் நல்ல தேர்ச்சியும் முதிர்ச்சியும் கொண்டுள்ளன. தமிழ் சினிமாவில் அவ்வாறு தெரியவில்லையே..

இது தொடர்பாக வித்தியாசமான சிந்தனை நிறைய வந்திருக்கிறது. காட்சிப்பிழை திரையில் நாங்கள் எழுதி வருவது அதைத் தான். கதை சொல்லும் முறைமை ஹாலிவுட் அல்லது ஐரோப்பிய சினிமா முறைமையில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் சினிமாவுக்கு என்று கதை சொல்லும் முறைமை உண்டு. அதற்குள் அது எவ்வாறு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். உதாரணமாக எம்.ஜி .ஆரின் வேட்டைக் காரன் படத்துக்கும் படகோட்டி படத்துக்கும் இடையே உள்ள தரம் வித்தியாசம் பற்றி பேசினால் அது சரி என்று சொல்லலாம். எனவே அந்த அழகியலுக்குள் அது எவ்வாறு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். வேட்டைக்காரன் படம் நன்றாக இல்லை என்பதுடன் அது நன்றாக ஓடவும் இல்லை. விமர்சகர்கள் அல்ல மக்களே அந்த படத்தை புறக்கணிக்கிறார்கள். எனவே இங்கே நல்ல படங்கள் வரவில்லை என்று புலம்புவதில் அர்த்தமில்லை. நல்ல படங்கள் வேறு மொழியில் இருக்கும்போது  பிறகு அந்த தரம் தமிழில் இல்லையே என்று புலம்ப வேண்டியதில்லை. அது பற்றிய தேவை இங்கு இருந்திருந்தால் இந்நேரம் இங்கேயும் நல்ல படங்கள் உருவாகியிருக்குமே! தமிழில் நல்ல படங்கள் வரவில்லை என்றால் ரஜினிகாந்தை திட்டுவது வணிக வெற்றியை குறை சொல்வது போன்ற போக்கு சரியானது அல்ல.  வணிக சினிமா பக்கம் அவர்கள் யாரையும் கையைப் பிடித்து இழுக்கவில்லையே..அரவிந்தனும் அடூர் கோபால கிருஷ்ணனும் பிரேம் நசீரை திட்டிக்கொண்டே இருந்தார்களா என்ன? அவர்கள் தங்கள் வேலையை செய்துகொண்டு தானே இருந்தார்கள்..! தமிழில் அம்ஷன் குமார் எடுத்த 'ஒருத்தி', ஜான் ஆபிரஹாம் எடுத்த 'அக்ரகாரத்தில் கழுதை' போன்ற படங்கள் வந்தன.  ஒன்றுமே இங்கு நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. எனவே தமிழ் சினிமாவில் போதாமைகள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

தீவிர சினிமா ஆர்வலர்களும்  வணிக சினிமாவை வழி நடத்துபவர்களும் ஒரே நேர்கோட்டில் வர வாய்ப்பே இல்லையா?

இயக்குனர் ஷங்கர் தரமான படங்களை தயாரிக்கிறார். பாலாஜி ஷக்தி வேலின் காதல், வழக்கு எண் போன்ற படங்கள் வெகுஜன உரையாடல் சார்ந்த படங்கள் தான். வெகுஜன மனோவியலுக்கு உள்ளே உள்ள படங்கள் அவை. அதைத் தாண்டிய படங்களுக்கு பணம் போடுவது என்பது அரிதானது. வெகுஜன மனோவியலுக்கு உள்ளேயே நல்ல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. காதல்கொண்டேன், ஆடுகளம், காதல் போன்ற பல படங்கள் முக்கியமானவை. அவை வெற்றிபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவற்றை பாராட்ட நமக்கு மனம் வருவதில்லை. அப்படி  செய்தால் வெங்கட் சாமிநாதன் திட்டுவாரோ என்று யோசிக்க வேண்டியதில்லை. அவர் செய்வது தான் விமர்சனம் என்றில்லை. விமர்சனம் என்பது வளர்ந்து வரும் ஒன்று. எனவே கூர்ந்து நோக்கி விமர்சனம் செய்யும் திறனும் மொழியும் நமக்கு தேவை. அதை காட்சிப்பிழை திரை இதழ் மூலம் செய்ய முயன்று வருகிறோம்.

காட்சிப்பிழை திரை இதழ் மூலம்  தமிழ் சினிமா பற்றி தமிழ் வாசகர்கள் மத்தியில் என்ன மாதிரியான பார்வை தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..?

முதலில் தமிழ்நாட்டில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டியிருக்கிறது.ஓ..தாழ்ந்த தமிழகமே என்ற நினைப்பை மாற்ற முயற்சி செய்கிறோம்.சமீபத்தில் ஒரு சந்திப்பில் பேசும்போது ஒருவர் தமிழ் சினிமா ஐ.க்யூ பற்றி கவலைப்படுவதில்லை என்றார். ஹாலிவுட்டில் அவ்வளவு செலவு செய்து இண்டிபெண்டன்ஸ் டே என்றொரு படம் எடுத்தார்கள். பூமிக்கு வந்த ஏலியன்களை அமெரிக்க அதிபர் நேரடியாக சென்று அழிக்கிறார். எத்தனை அபத்தமான படம். அங்கே கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம். அவர்கள் அந்த படத்தை ரசிக்கவில்லையா. இங்கே அறிவுக்கும் கேளிக்கைக்கும் தொடர்பே இல்லை. சினிமா கண்டுபிடிக்கப்பட்டது பிரான்சில். பெரிய மாற்றம் தந்தது இத்தாலி. நியோ ரியலிச பாணி படங்கள் தந்த பல இயக்குனர்கள் அங்கே இருந்து வந்தவர்கள். இப்போது பாருங்கள் அங்கே எல்லாம் ஹாலிவுட் படங்கள் தான் பார்க்கிறார்கள். இத்தாலியன் சினிமா என்று இப்போது இல்லவே இல்லை. அது பற்றி யாருமே பேசுவதில்லை. இங்கே ஹாலிவுட் படங்களால் நம் படங்கள் முடங்கியா போய்விட்டன? தமிழனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் உறவு மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். உலகில் வேறு எங்கும் இப்படி இல்லை. எனவே நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என்பது தான் காட்சிப்பிழையின் நோக்கம். நிறைவேறுமா என்று தெரியவில்லை. என்றாலும் எங்களால் ஆனவரை முயற்சி செய்கிறோம்.

பொதுவாக இங்குள்ள சில இயக்குனர்கள் நடிகர்கள் உலக சினிமா பற்றிய பார்வை கொண்டவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் வணிக சினிமா வெற்றியையே நம்பி இருப்பதன் காரணம் என்ன?

அப்படி சொல்ல முடியாது. முதலில் இது தொடர்பான மொழியை நாம் உடைக்க வேண்டி இருக்கிறது. கமல் அன்பே சிவம் என்று ஒரு படம் எடுத்தார். உண்மையில் அது அற்புதமான படம். அதை ஏன் கொண்டாட நம்மவர்களுக்கு மனம் வரவில்லை. குஜராத் கலவரத்துக்கு பிறகு வந்த படம் அது . அதில் கிறித்துவ மதம் பற்றிய ஒரு குறியீடு வரும். தலைப்பே அன்பே சிவம். மதங்களை கடந்து அன்பு என்றால் என்ன என்று சொன்ன படம். யார் தீவிரவாதி, கம்யூனிசத்தின் வீழ்ச்சி, முதலாளித்துவத்தின் எழுச்சி என்று பல விஷயங்களை உள்ளடக்கிய முக்கியமான படம் அது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை யாரும் பேசவில்லை. அரவிந்தன் நீலகண்டன் என்ற ஒரு ஆர்.எஸ்.எஸ், காரர் படத்தைப் பற்றி தீவிரமாக சிந்தித்து இந்த படம் இந்து மதத்தை எப்படியெல்லாம்  புண்படுத்துகிறது என்று விளக்கி எழுதினார். கம்யூனிஸ்டுகள் கூட படத்தை தீவிரமாக அணுகினார்களா என்று தெரியவில்லை. எனவே நம்மிடம் நல்ல விஷயங்கள் நடக்கும்போது அதை கொண்டாடும் மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும். அதைப் பேசுவதற்கான மொழி நம்மிடம் இல்லை எனது தான் உண்மை. காதல் போன்ற படங்கள் மீடியாவால் முதலில் கொண்டாடப் படவில்லை. மக்கள் அந்த படங்களுக்கு தந்த வரவேற்புக்கு பிறகு தான் மீடியா அந்த படங்களை கொண்டாடியது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா முழுவதிலும் அனுமதி இல்லாமல் நகலெடுக்கும் கலாசாரம் சர்வசாதாரணமாக காணப்படுகிறதே..

இந்த விஷயத்தில்  மூன்று வகை இருக்கிறது. Another version என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. சற்று மாறுபட்ட கதைகளில் ஒரே படம் வேறு மாதிரியாக எடுக்கப்படுவது. அப்புறம் remake என்ற வகை. உதாரணத்துக்கு கிங்காங் படங்கள் திரும்ப திரும்ப எடுக்கப்பட்டன,ஒரே கதையில். மூன்றாவது Adaptation. செவன் சாமுராயைப் பார்த்து மேக்னிஃபிசியன்ட் செவன் படம் எடுக்கப்பட்டது ஒரு உதாரணம். சினிமாவில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டவை. சினிமாவின் பலம் என்று கதையை மட்டும் பார்க்கக் கூடாது. எப்படி அது எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம். எனவே இது போன்ற விஷயங்களை நகல் எடுத்தல் என்று பேசுவது சரியல்ல. சட்டப்பூர்வமாக அது சரியா இல்லையா என்பது வேறு விஷயம். அவற்றை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மானுடவியல் ஆய்வாளர் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?தமிழ்நாட்டில் கலை இலக்கியம் சார்ந்த ரசனை எவ்வாறு இருக்கிறது?

பொதுவாக உலகில் எல்லா சமூகமும் மோசமான நிலையில் தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நான் பார்க்கும் நல்ல விஷயம் இங்கே இருக்கும் அதிகாரப் பரவல், ஜனநாயகம் பற்றிய பார்வை இவை பற்றி தமிழர்கள் பெருமைப்பட கற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்ற விஷயத்தை தமிழர்கள் தான் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு இந்த அறுபத்தைந்து வருடங்களில் தமிழ்நாட்டில் நல்ல விஷயங்கள் பல நடந்துள்ளன. உலகில் இருக்கும் வேறு எந்த பிரதேசத்தை விடவும் தமிழகம் பலவகைகளில் முன்னேறியுள்ளது. சிகாகோவில் நடக்கும் முறைகேடுகள், மாபியா நடவடிக்கைகள் பற்றி இங்கு யாருமே எழுதுவதில்லை. தமிழ் நாட்டில் மட்டும் தான் எல்லா ஜாதியினரின் பங்களிப்பும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு நல்ல நிலையில் இருப்பதை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். எனவே தாழ்வு மனப்பான்மையை முதலில் கைவிட வேண்டும். அமெரிக்காவில் உள்ள மக்களின் அரசியல் அறியாமை பிரசித்தம். நம்மூரில் டீக்கடைகளில் கூட அரசியல் பற்றி நிறைய பேசுவார்கள். அங்கு  படித்தவர்கள் நல்ல வேலையில்  இருப்பவர்கள் கூட அரசியல் பற்றி சிறிதளவு பிரக்ஞை கூட  இல்லாமல் இருப்பதை பார்த்தேன். கார், சாப்பாடு, செக்ஸ் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். அரசியல் என்று ஆரம்பித்துவிட்டால் உடனே அங்கிருந்து ஓடி விடுவார்கள். இங்கே எவ்வளவோ பரவாயில்லை என்பதை சொல்ல வேண்டும். மானுடவியல் துறை இங்கிருந்து ஆய்வாளர்களை  அனுப்பி அமெரிக்க வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டியது தானே? அவர்கள் இங்கு வந்து ஆய்வு செய்கிறார்கள் அல்லவா? நமக்கு அவர்களை விமர்சனம் செய்ய தைரியம் வரவில்லையே..


தமிழக அரசியலில் திராவிட கட்சிகளின் தாக்கம் தேசிய அரசியலில் அதன் தாக்கம் இவை பற்றி சொல்லுங்கள்..

முக்கியமான தாக்கம் தான். அதன் உள்ளடக்கம் சரியானது. ஆனால் அது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இந்தியா பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. அதில் வாழும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளை சரியாக புரிந்து கொண்டு தீர்வு காண்பது என்பது முடியாத ஒன்று.  எனில் ஒவ்வொரு மாநிலங்களிலும் தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சிகள் உருவாகும்போதுதான் மக்களிடையே சமத்துவம் உருவாகும்.  பல மாநிலங்கள் இருக்கும் இந்தியாவில் தனிப்பட்ட அடையாளம் சார்ந்த அரசியல் உருவானால் தான் ஜனநாயகம் வலுப்படும். கூட்டாட்சி முறையில் தான் நமது ஜனநாயகத்தை செழுமை படுத்த முடியும். ஆனால் இதன் மூலம் பிரிவினை வந்து விடுமோ என்ற அச்சமும் உண்டு.  இந்தியா முழுவதும் ஒரே மொழி, ஒரே கட்சி என்பது தவறான கருத்து. இதனால்தான் ஹிந்தி திணிப்பு போன்ற விஷயங்கள் நடந்தன. ஆனால் தமிழ் நாட்டில் அது சரியாக புரிந்து கொள்ளப் பட்டது. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் ஆனால் நாங்கள்  தமிழர்கள் என்ற தெளிவான பார்வை இருக்கிறது. இந்த பார்வை கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வரத் தொடங்கிவிட்டது.  எதிர்காலத்தில் இது முழுமையாக இருக்கும்.  உத்தரகண்ட் தனிதான் ஜார்கண்ட் தனிதான் என்ற அரசியல் பார்வை தொடங்கிவிடும். எல்லா கட்சிகளும் , மாநிலங்களும் சேர்ந்த ஒரு கூட்டாச்சி இருக்கலாமே தவிர அந்தந்த மாநிலங்களின் அரசியல் என்பது தனித்தனிதான். இதுதான் அறிவார்த்தமாக இருக்கும். (sensible) ஆனால் தீடிரென்று எந்த மாற்றமும்  இந்தியாவில் வந்துவிடாது. அதற்கு நூறு வருடங்கள் ஆகலாம்.  தமிழ் நாட்டில் நடந்த அரசியல் செயல்பாடுகள் தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. அந்த விதத்தில் திராவிட கட்சிகளின் தாக்கம் முக்கியமானது. திராவிட இயக்கத்தில் பல பலவீனங்கள் இருக்கிறது.  எல்லா கட்சிகளிலும் பலவீனம் இருக்கிறது. பலவீன இல்லாத கட்சி என்பது கற்பனையான ஒன்று. ஆட்சிக்கு வராத கட்சியை வேண்டுமானால் அப்படி கூறலாம்.  ஆட்சிக்கு வந்துவிட்டால்தான்  தெரியும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் சென்று CPM பற்றி கேட்டால் தான் தெரியும். அவர்கள் எப்படியென்று. அதிகாரத்திற்கு வந்துவிட்டால் தான் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியும். ஒப்பிட்டு முறையில் ஆட்சியை மதிப்பிடலாம். எனக்கு தெரிந்த நண்பர்கள் இதனை செய்கிறார்கள். பிரேர்னா சிங்   என்பவர் இதை போல ஒரு ஆய்வை செய்தார். வட   மாநிலங்கள் இரண்டையும் தென்மாநிலங்கள் இரண்டையும் எடுத்து கொண்டு ஆய்வு செய்தார். அதில் தமிழ் நாடும் கேரளமும் பலமடங்கு வட  மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய  பிரதேசம் ஆகியவற்றை காட்டிலும் ஜனநாயக ரீதியில் முன்னேறி இருக்கிறது. அந்த ஆய்வாளர் political science  இல் அதற்க்கான சில அலகுகளை  வைத்து செய்தார்கள். அதில் தென் மாநிலங்கள் இரண்டும் வடமாநிலங்கள் இரண்டைக் காட்டிலும் நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார். கேரளாவைப் பொறுத்த அளவில் அங்கு கல்வியின் காரணமாக அந்த முன்னேற்றம் இருப்பதாக கூறுகிறார். தமிழ் நாட்டை பொறுத்த அளவில் திராவிட அரசியல்  ஒரு முக்கிய காரணம்  என்கிறார். நானும் அதைப் பற்றிய ஆய்வில்தான் இருக்கிறேன். ஆனால் முக்கிய காரணமாக மாநில அரசியலைத்தான் கூறுவேன். மாநில அரசியல் தான் ஜனநாயக சிந்தனையை பலப்படுத்துகிறது. ராஜஸ்தானில் என்ன மாநில உணர்வு இருக்கிறது? அங்கு ஹிந்தி தான் பேசுகிறார்கள். பழமையான மரபை  கொண்டது அந்த மாநிலம்.

தமிழ் நாட்டின் இந்த அரசியல் விழிப்புணர்வுக்கு கல்வி எந்த அளவுக்கு கரணம் என்று கருதுகிறீர்கள்?

கல்வி விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் இன்று ஊடகங்கள் அதில் முதன்மை பெறுகின்றன. இன்று அச்சு ஊடகம் என்பது பின்னடைந்து விட்டது. மாறாக காட்சி ஊடகங்கள் முன்னுள்ளன. எடுத்துக்காட்டாக தொலைக்காட்சி.  இன்று புதிய தலைமுறை இருக்கிறது. அதில் எல்லாமும் விமர்சிக்கப்படுகிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். அதைப்  பார்த்தாலே போதுமே. ஆனால் கல்வி எத்தனை  முக்கியம் என்பதற்கு சில உதாரனங்களும் இருக்கின்றன. காமராசர் கொண்டுவந்த கல்வித் திட்டங்களினால் பயனடைந்தவர்கள் எத்தனயோ பேர்.  சிலர் காமராசர் பெயர் சொல்லியே அவர் தான் தான் கல்வி கற்பதற்கு காரணம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன்.

மரண தண்டனை குறித்தான உங்கள் பார்வை என்ன? குற்றங்களுக்கு தண்டனை அவசியம் என்ற வகையில் எந்த அளவுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்படலாம்?

இதைப்பற்றி நிறைய இடங்களில் கட்டுரையாகவும் பேசியும் நான் பதிவு செய்திருக்கிறேன். Retributive justice என்று ஒன்று உண்டு. Retributive என்றாலே ஒருவர் செய்த தவறுக்கு அதேபோல வலிக்கும் படியாக தண்டனை கொடுப்பது. இன்று தண்டனை என்பது குடும்பத்திலிருந்து பிரித்து வைப்பது, சிறைச்சாலையில் போடுவது என்று இருக்கிறது. அவனை தனிமை படுத்துவதன் மூலம் அவமானப்படுத்துவதன் மூலம் ஒரு பயத்தை உண்டாக்குவது. இதுதான்  Retributive. இதற்கு ஒரு எல்லை இருக்கிறது.  இந்த நாட்டில் ஒரு நாகரிகம் இருக்கிறது. அதாவது கொல்லாமை. மனிதனை மனிதன் கொல்வதோ, அல்லது மனிதனை அரசாங்கம் கொல்வதோ இருக்கக் கூடாது.  ஆனால் மனிதனை அரசாங்கம் கொல்லலாம்  என்பது இங்கு ஒரு முரண். மரண தண்டனை என்பது அரசாங்கம் செய்யும் கொலை. நாகரீகம் என்று சொல்லிக் கொள்கிறோம். தூக்கில் போடுவதும், கை, கால் காலை  வெட்டுவது என்பது எப்படி நாகரீகம் அடைந்த ஒரு சமூகத்தில் நடக்கும் தண்டனையாக இருக்க முடியும். நாகரீகம் என்ற பெயரால் தான் நம் இன்று அறிவியல் போன்ற விசயங்களில் முதன்மை பெறுகிறோம். சுற்றுச் சூழலைப் பற்றி கவலை கொள்ளாமல் ஏவுகணைகள் விடுகிறோம். ஆனால் நாகரீகம் என்ற பெயரால் அரசாங்கம் மரதண்டனை வழங்க முடியும் என்று சொன்னால் அது எப்படி நாகரீகம் ஆகா முடியும்? எது ஒரு முரண். தவறு செய்வதை தடுக்கலாம்.  அவன் திருந்துவதற்கு சந்தர்ப்பமோ கொடுக்கலாம். ஆனால் மரண தண்டனை என்பது அதீதமானது. ஒருவரை ஒருவர் மனிதர்கள் வெட்டிக் கொள்வது இருந்திருக்கிறது. அது உணர்ச்சி வசப்பட்டு செய்வது. அது குரூரமானது . மனிதன் ஒரு விலங்கு என்பதால் அதை தடுக்க முடியாமல் வரலாற்றில்இருந்து வந்திருக்கிறது. ஆனால் நீதியின் பெயரால் ஒருவனை தூக்கில் போடுவது அதே போல மிக கொடுமையானது. இது இந்தியா போன்ற நாட்டில்  இருப்பது ஏற்க முடியாதது. காந்தி வாழ்ந்த நாட்டில் அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மரண  தண்டனையை எதிர்த்து இன்னும் ஒருமித்த குரல் வரவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மரணதண்டனை இந்தியாவில் இருப்பது தவறானது. ஒருவர் வாழ்வைப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.
உலக வெப்பமயமாதல் குறித்த கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள். அது தொடர்பாக அரசும் மக்களும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

சிந்தனையில்  ஒரு மற்றம் வந்தால் தான் இதை  சரி செய்ய முடியும். ஒரு அவசர நிலையில் இருக்கிறோம். வீடு பற்றி எரியும் போது  நாம் வெளிப் பூச்சு செய்ய முடியாது. அதை போல மனித வாழ்க்கை முறையில் மாற்றம் வந்தால் தான் உலக வெப்பமயமாதலை தவிர்க்க முடியும். வேறு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதிகாரம் இப்போது  முதலீட்டியத்தின் கையில் தான் இருக்கிறது. வளர்ச்சி தான் அரசியல் என்றாகி விட்டது. வளர்ச்சி அளவு எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்துதான் அரசியல் இருக்கிறது. உலக வெப்பமாதலை பற்றி தலைவர்கள் ஒன்று கூடி  பேசினார்கள். ஆனால்  ஒன்றும் நடக்க வில்லை.பூனைக்கு யார்  மணி கட்டுவது என்பதிப் போலத்தான் அது. எல்லோருக்கும் பொருளாதாரம், வளர்ச்சி தான் முக்கியம். வளர்ச்சிதான் இன்று ஒரே மொழி.
செயல்பாட்டு அளவில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் கிடைத்து விட்டன என்று நினைக்கிறீர்களா? இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் நிலை எவ்வாறு இருக்கிறது?

கடந்த  15, 20 வருடங்களில் பெரிய பின்னடைவு தான். முதலில் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்கள் இருந்தன. அப்போது ஒரு உள்ளடக்கம் இருந்தது. ஆனால் அதற்க்கு பிறகு நடந்தது எல்லாம் ஏமாற்று வேலைதான். அடிப்படி தொழில் செய்பவர்கள் எல்லோரும் சுரண்டப் படுகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு அந்த சுரண்டலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் பொருளாதார நிலை இருக்கிறது. குறிப்பாக தலித் மக்கள் நிலை. குறைந்த கூலி பெறுகிறார்கள் என்பதுடன்  குழந்தைகள் படிப்பு மற்றும் தங்கும் இடம் எல்லாம் மோசமாக இருக்கிறது. ஆனால் முந்தைய நிலையைக் காட்டிலும் இது முன்னேற்றம் என்று அவர்கள் நினைக்குமளவு நிலை இருக்கிறது. இன்று மோசமாக சுரண்டலுக்கு தொழிலாளர்கள் ஆளாகிறார்கள். இதை எந்த தொழிலாளர் சங்கம் கேள்வி கேட்கப்  போகிறது? தொழிலாளர்களை சுரண்டி பெரிய கட்டுமானங்கள் உருவாகின்றன. எல்லோரும் ஒரு ரகசிய உடன்பாட்டில்தான் இந்த வேலையை செய்கிறார்கள்.  யாரும் இதைப் பற்றி பேசக்கூடாது என்று இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் கூட அதை செய்வதில்லை. அவர்களால் தொழிலாளர்களை ஒன்று திரட்ட முடிவதில்லை. அசாமில் உள்ளவர்கள் இங்கு வருகிறார்கள் இங்கு உள்ளவர்கள் உத்திர பிரதேசத்தில் வேலை செய்கிறார்கள். சொந்த மாநிலத்தில் மொழி தெரிந்தவனை அடிமையாக்க முடியாது. வேற்று மாநிலத்தவனை அதனால் அடிமையாக்கி  வேலை வாங்குகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தலித்கள் அல்லது அவர்களைப் போன்றே பொருளாதார நிலைமையில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்கள். இவர்களை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள் இல்லை. அவை தமது செயல்பாடுகளை  நிறுத்திக் கொண்டன.   முதலாளித்துவத்தின் செயல்பாடே தொழிலாளர்களை சுரண்டுவது தானே.. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
மானுடவியல் ஆய்வு தொடர்பாக பல்வேறு பிரதேசங்களில் தங்கியிருப்பீர்கள். தனி மனித வாழ்வு பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவது எவ்வாறு என்று சொல்லுங்களேன்..

ஒரு சமூகம் உயர்ந்தது ஒரு சமூகம் தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு ஊருக்கும்  ஒவ்வொரு சிறப்பு உண்டு. மேற்கத்திய சமூகத்தை பொறுத்த  அளவில் அங்கு தனிமனித வாழ்வு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அனால் அங்கே தனிமனித வாதத்தினால் மிகப் பெரிய சிக்கல் வந்திருக்கிறது. பெரிய வெறுமையும் தேக்கமும் இருக்கிறது. அவர்களை பற்றிய மானிடவியல் ஆய்வு செய்யும் அளவுக்கு   நாம் இன்னும் முயற்சி எடுக்கவில்லை. எடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு பல உண்மைகள் தெரிய வரும். இங்கு உள்ள பண்பாட்டு விழுமியங்கள் தனித்துவமானவை. இங்கு சாதி, ஆண் மைய சமூகம் என்று பல பிரச்சனைகள் இருக்கிறது.  இங்கு உள்ள தனிப்பட்ட அம்சங்களில் இன்னும் தனிமைப் பட்ட மனிதர்களாக இல்லாமல் இருப்பது , எளிதாக ஒன்று கூடுவது என்று  பல அம்சங்கள் இருக்கிறது. அதனை  காப்பாற்றுவது முக்கியம்.மேற்கத்திய முதலீட்டிய சமூகங்களில் மிகவும் தனிமைப் படுத்தல்கள் இருக்கிறது. அதை  இங்கு பார்ப்பது கடினம். ஆனால் அது இங்கும் சீக்கிரம்  நடக்கும். ஏனெனில் வளர்ச்சி என்பது தான் முக்கியம்; பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்ற சிந்தனை வந்து விட்டது. மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி எடுத்து பள்ளி மாணவன் சுடுகிறான். இங்கு மாணவன் கத்தி எடுக்கிறான். படித்து  பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்று நினைக்கும் போது நிலைமை இப்படித்தான் மாறும். பெருமாள் முருகன் போன்றோர் இதை பற்றி நிறைய  எழுதுகிறார்கள்.
கூடங்குளம் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நிலைப்பாடுகளும் அங்கு நிறுவப்படும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களும் பற்றிய உங்கள் பார்வை என்ன? அங்கு அணு உலையைத் தொடங்க வேண்டும் என்றே செயற்கையான மின்வெட்டை அரசு செயல்படுத்துவதாக வெளியாகும் செய்திகள் பற்றி..

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் செயற்கையான மின் தட்டுப்பாடு என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. என்றாலும் கூடங்குளம் போராட்டம் இடையில் நிறுத்தினார்கள். அப்போது மின்சார தட்டுப்பாடு கொஞ்சம் குறைந்தது. 8 மணி நேர மின் வெட்டு 4 மணி  நேரமாக ஆனது. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு ஆதரவு பெருகக் கூடாது என்பதற்காக இந்த மின்வெட்டு தொடர்கிறதா என்று கூட நினைக்க தோன்றுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கூடங்குளத்திற்கு  ஆதரவாக போராட  தொடங்கிவிட்டால் அரசியல் கட்சிகள் அதை விரும்பாது. ஆளும் வர்க்கமும் விரும்பாது. சிறிது காலம் சென்ற பிறகு நீதிமன்றங்கள் அந்த 17 அம்ச பாதுகாப்பு குறித்து ஏதாவது ஆலோசனைகள் கூறலாம். அதற்குள் தமிழக அரசு தான் சொன்னது போல  500 கோடி  செலவில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினால் கூட எதிர்ப்பு போராட்டம் நின்று விடும் என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் அங்கு அணு மின் நிலையம்  திறக்கப்படலாம். கூடங்குளத்தை  நிறுத்தவும் அரசு முடிவெடுக்காது. அதற்காக அந்த மக்களை ஒடுக்கவும் முடியாது.  எனவே பொறுத்திருந்து ஏதாவது தந்திரங்களை செய்துதான் அரசு இதை செய்யும் . அந்த பகுதி மக்கள் இதனை எதிர்கொள்ள விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்  என்பது  நிச்சயம்.
ஆய்வு மற்றும் எழுத்து தொடர்பாக எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

இது மிகவும் சிக்கலான கேள்வி. தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுத வேண்டும். ஆனால் நிறைய திட்டங்கள் இருப்பதினால் தெளிவான முடிவுக்கு இன்னும் வரவில்லை.  நான் கடந்த 3 வருடங்களாக வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஆய்வில் இருக்கிறேன். கடந்த 2 வருடங்களாக தலித் மக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக கள  ஆய்வில் இருந்தேன். படிக்கவும் செய்தேன். இது தொடர்பாக புத்தகம் அல்லது கட்டுரை எழுத வேண்டும் . தமிழிலும் ஆங்கிலத்திலும்  முக்கியமாக கிருத்துவ தலித்துகள் பற்றி எழுத வேண்டும். அதைப் பற்றி பல படித்திருக்கிறேன். இது அவசியம் செய வேண்டிய வேலை. இவை தவிர சினிமா மற்றும் அரசியல் பற்றியும் எழுதுகிறேன். மிக தாமதமாக எழுத்து உலகில் வந்ததினால் எழுத்தில் வேகம் குறைவு. 93 இல் பெரியார் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதினேன். அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.நாடகம்  போடுதல், திரைப்பட சங்கம் என்ற நடவடிக்கைகளில் இருந்ததினால் எழுத வேண்டும் என்று யோசிக்கவில்லை. நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது; செய்திகளும் இருக்கின்றன.

No comments:

Post a Comment