Friday, October 5, 2012

பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்


நம்மிடம் சரித்திரம் பற்றிய பிரக்ஞை இல்லை


வரலாறு மற்றும் சமகாலப் பிரச்சனைகளின் பின்னணியில் புலிநகக்கொன்றை மற்றும் கலங்கிய நதி ஆகிய நாவல்கள் எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன், சமூகம் பற்றிய ஆழமான பார்வை கொண்டவர். மேற்கத்திய ஓவியங்கள், சினிமா, பயண அனுபவங்கள் என்று பலதரப்பட்ட தளங்களில் எழுதி வரும் அவர்  தசஇ-க்காக அளித்த நேர்காணல்...
 உங்கள் இளமைப் பருவம், கல்வி பற்றி சொல்லுங்கள்..

நான் படித்தது திருநெல்வேலியில் தான். அங்குள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பின்னர் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலையும் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் முதுகலையும் பயின்றேன்.

எந்த வயதில் இலக்கியத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது? தங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

நான் பிறந்தது இலக்கியத்தோடு என்று சொல்வேன். என் தந்தை பட்சிராஜன் ஒரு புகழ்பெற்ற தமிழ் அறிஞர். கம்பன் புகழ் பாடியே தன் வாழ்நாள் முழுவதும் கழித்தவர். அவர் மூலம் இலக்கியத்துடன் இயல்பாகவே பரிச்சயம் ஏற்பட்டு விட்டது. எனக்கு ஏழெட்டு வயது இருக்கும்போது என் தந்தை மகாபாரதத்தின் சுருக்கமான மகாபாரத வசன சங்கிரகம் என்ற புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். அதன் விலை ஐந்து ரூபாய் என்று நினைக்கிறேன். தமிழில் நான் படித்த முதற் பெரிய புத்தகம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சிறுவர்களுக்கான புத்தகங்களைக் பதிப்பித்துக் கொண்டிருந்த காலம் அது. கழகக் கதைக் கொத்து, கழகக் கதைப் பூங்கா போன்ற புத்தகங்கள். எனது அறுபத்தைந்தாவது வயதிலும் என்னால் அந்தக் கதைகளை நினைவுகூர முடிகிறது. மிக அருமையான புத்தகங்கள் அவை.

மீசை முளைக்கும் முன் நான் விரும்பிய எழுத்தாளர்கள், கல்கி, தேவன், பகீரதன், லக்ஷ்மி. முளைத்த பின் என்னை ஈர்த்த எழுத்தாளர்கள் புதுமைப் பித்தன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் அப்புறம் ஜானகிராமன். ஜானகிராமனை இப்போது படிக்கும்போது சற்று ஏமாற்றமளிக்கிறது என்றாலும் அந்த வயதில் அவர் எழுத்து மிகவும் பிரமிப்பூட்டியது. அவரது சிறுகதைகளில் இன்னும் உயிர்ப்பு இருப்பதாக உணர்கிறேன். ஜெயகாந்தனுடைய சிறுகதைகளும் இப்போது ஆகச் சிறந்த படைப்புகளாகத் தோன்றவில்லை. ஆங்கிலத்தில் எனக்கு ஷேக்ஸ்பியர் பிடித்தமானவர். எனது ஆசான் . ஈவ்லின் வா, எலிசபெத் போவன், பிஜி உட் ஹவ்ஸ் போன்ற எழுத்தாளர்கள் பிடித்தமானவர்கள்.

இளம் வயதிலேயே ஆங்கிலத்தில் படிக்கும்படியான சூழல் இருந்ததா?

இல்லை. நான் எஸ்.எஸ்.எல்.சி வரை தமிழ் மீடியத்தில் பயின்றவன். எனக்கு ஆங்கிலத்தில் அப்போது பெரிய ஆர்வம் இல்லை. பி.யூ.சி படிக்கும்போது ஒரு சம்பவம். எனது முதல் ஆங்கில ஆசிரியர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சானட் ஒன்றை பாடமாக எடுத்தார். ஒரு மூன்று மணிநேரம் பாடம் நடத்திவிட்டு கடைசியில் எங்களைப் பார்த்து 'புரிகிறதா?' என்று கேட்டார். எனக்கு என்னடா இது ஆங்கிலம் இதன் பக்கத்திலேயே செல்லக் கூடாது என்று தோன்றியது. ஆங்கில இலக்கியத்தின் பால் எனக்கு நாட்டம் ஏற்பட ஊக்கம் அளித்தவர் எனது தந்தையின் நண்பர் திரு கோபால பிள்ளை அவர்கள். அவர் படிக்கத் தந்த புத்தகங்கள் காட்டிய உலகத்தில்தான் நான் இன்று வரை பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

ஒரு அரசு அதிகாரியாகவும் பின்னர் தனியார் துறையில் உயர்ந்த பொறுப்பிலும் இருந்து வரும் நீங்கள் எழுத வேண்டும் என்று நினைக்க எது காரணமாக இருந்தது?

முன்பே சொன்னபடி இலக்கியம் என் வாழ்க்கை சூழலிலேயே இருந்தது. என்றாலும் வாழ்க்கையின் பல அனுபவங்கள், தருணங்கள் என்னை பிற்பாடு எழுதத் தூண்டியது எனலாம்.

உல்பாவால் கடத்தப்பட்ட அதிகாரியை மீட்க நீங்கள் எடுத்த முயற்சிகள் பற்றி கலங்கிய நதி சொல்கிறது என்று அது தொடர்பான மற்றப் பதிவுகளில் சொல்லியிருக்கிறீர்கள். அந்த சம்பவங்கள் நடக்கும்போதே இதை ஒரு கட்டத்தில் படைப்பாக வெளியிடலாம் என்று நினைத்திருந்தீர்களா? அல்லது பின்னர் அது பற்றிய எண்ணம் வந்ததா?

இல்லை. அந்த நாட்களில் எனக்கு கடத்தல் விவகாரம் எப்படி முடியும் எங்கு என்னைக் கொண்டு செல்லும்..என்பவைப் பற்றிய பதட்டம் தான் இருந்தது. சொல்லப்போனால் நான் திரும்பிவருவேனா என்றெல்லாம் யோசிக்க வைத்த சம்பவம் அது. எல்லாம் முடிந்த பின்னால் அசாமில் இருந்து வரும் சென்டினல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் அந்த மீட்புப் பணியில் எனக்கு உதவிய அசாம் மாநில முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹா பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். இக்கட்டுரையின் மற்றொரு வடிவம் தமிழில் ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள் என்று வந்தது. அதற்குப் பிறகு தான் இந்தச் சம்பவத்தை ஒரு நாவலாக்கலாம் என்ற எண்ணம் எழுந்த்து. 2002 ஆம் ஆண்டில் நாவலை எழுதி முடித்தேன். ஆனால் படித்துப் பார்த்த்தில் மிகவும் தட்டையாக இருந்தது போல் தோன்றியது. சில வருடங்கள் கழித்து பல மாற்றங்கள் செய்து நாவலுக்கு புது வடிவம் கொடுத்தேன..

அசாமில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்கள் உங்களிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

எனது நாவலின் களமான கோக்ரஜார் மாவட்டத்தில் தான் சமீபத்தில் கலவரம் நடந்தது. இது போன்ற கலவரங்களுக்கு நிலம் தான் முக்கியக் காரணம் என்று சொல்வேன்.கலவரங்களுக்கு எந்த வண்ணமும் பூசப்படலாம். வங்காளக் வண்ணம், முஸ்லிம் வண்ணம், போடோ வண்ணம்என்று எது வேண்டுமானாலும் பூசலாம். ஆனால்அடிப்படை காரணம் மனிதனுக்கு நிலத்தின் மீது இருக்கும் ஆசை தான். அது அவனுக்கு மிக முக்கியத் தேவை என்பதில் சந்தேகமில்லை. இதற்கு தீர்வு என்ன என்று கேட்டால்..தீர்வு இல்லை என்றே சொல்வேன். இந்தியாவில் நிலத்தை சார்ந்து மனிதன் இருக்கும் வரை இது போன்ற கலவரங்கள் முடிவுக்கு வருவது கடினம் தான்.

பங்களாதேஷில் இருந்து குடிபெயரும் முஸ்லீம்கள் இதற்கு காரணமா?

அது நிச்சயமாக ஒரு காரணம். அது தான் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியாது. அசாமில் களத்தில் இறங்கி கடுமையாக உழைத்தவர்கள் வங்க முஸ்லீம்கள் . அசாமியர்கள் அவ்வளவு கடுமையாக உழைக்காத காலம் இருந்தது. அவர்களுக்கு தேவையும் இருந்திருக்கவில்லை. நதியில் வெள்ளம் வரும் சமயங்களில் அந்த நீரைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் விவசாயம் செய்வதில் வங்க முஸ்லீம்கள் தேர்ந்தவர்கள். எஅவர்கள் உழைத்து கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் மற்றவர்களுக்கு பொறாமை வந்து விட்டது என்று சரத் சந்திர சின்ஹா என்னிடம் கூறியது நினைவிற்கு வருகிறது. அவர் சிரித்துக் கொண்டே அப்படிச் சொன்னாலும் அதன் பின்னால் ஓர் உண்மை இருக்கிறது.

தீவிரவாதத்துக்குத் தள்ளப்படும் மக்களுக்கு மாற்று வழிகள் உள்ளனவா? அரசு இதுபற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அரசால் இதற்குத் தீர்வு தர முடியும் என்று எனக்குத் தோன்றவில்ல. அரசுக்கு காது இல்லை, கண் இல்லை. அதற்கு வாய் பேசவும் தெரியாது. பேசினாலும் என்ன இழவு சொல்கிறது என்பது புரியாது பெரும்பாலும்.எல்லா நாடுகளிலும் அரசு இவ்வாறுதான் இயங்குகிறது. இந்த நிலைமையில் தீவிரவாதம் பற்றி அரசு எடுக்கும் எந்த நிலைப்பாடும் மக்களுக்கு நம்பிக்கை தராது. . அப்படியே அரசு தவறி சில சரியான முடிவுகளை எடுத்தாலும் அவற்றின் மீது குறைகள் சொல்வது மிகவும் எளிதாக இருக்கும். இது இருந்தால் அது இல்லை என்று எதைப் பற்றியும் சொல்ல முடியும். அசாமை எடுத்துக்கொண்டால் பிரச்சனைகள் முற்றும் வரை குறட்டை விட்டுக் கொண்டிருந்து விட்டு உல்பா அடித்து எழுப்பிய பின் விழித்துக்கொண்டால் என்ன பயன்? ஆனாலும் தீவிர வாதம் வலுவாக இருக்கும் இடங்களில் அதன் பிடியிலிருந்து வெளியே வருவதற்கான வழிமுறைகளை அங்கிருக்கும் மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். வழிமுறை வன்முறை சார்ந்து இருந்தால் ஏழை மக்கள் ஆயிரக் கணக்கில் பலி கொடுக்கப் படுவார்கள். வன்முறை காய்ச்சலைக் குறைக்கும் மாத்திரை மாதிரி. எல்லாம் சரியாகி விட்டது என்ற மாயையை ஏற்படுத்தும். இந்த மாயையிலிருந்து விடுபடுவது கடினம். காந்தி மருந்து உடனே குணம் தராத மருந்து. குணம் தருமா என்ற சந்தேகத்தையும் பலரிடம் ஏற்படுத்துவது.

ஒரு படைப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு அதை அந்த எழுத்தாளரே மொழிபெயர்ப்பது என்பது வழக்கமில்லாத ஒன்று. உங்கள் படைப்பை நீங்களே மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைக்க காரணம் என்ன?

நான் தமிழ் மாணவன். தமிழில் ஓரளவு நன்றாக எழுதக் கூடியவன். . I need not to be modest about it. அதனால் எனக்கு என்னுடைய நாவலைத் தமிழில் மற்றொருவரைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யலாம் என்ற எண்ணமே தோன்றவில்லை.

இந்திய ஆங்கில எழுத்துக்கும், இந்திய பிராந்திய எழுத்துக்கும் உள்ள வித்தியாசம் எப்படியானது?

ஆங்கிலத்தில் இந்தியன் எழுதும்போது சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆங்கிலத்தில் ஆங்கிலேயன் எழுதினாலும் பல தடுமாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக பதினேழாம் நூற்றாண்டு பற்றிய ஆங்கில நாவலை இன்று எழுதும் போது எந்த ஆங்கிலத்தைக் கையாளுவது? இன்றைய மொழியையா அல்லது அன்று புழக்கத்தில் இருந்த மொழியையா?

இந்திய ஆங்கிலம் என்று ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. I don't like the word 'Indian English'. எழுதுபவர்கள் ஆங்கிலத்தை வெவ்வேறு விதமாக பயன்படுத்துகிறார்கள். என் ஆங்கிலம் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலங்களின் கலவையாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.

என்றாலும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. ஆங்கிலேயன் ஆங்கிலம் எழுதும் போது ஏற்படும் தடுமாற்றமும் அதிலிருந்து மீள்வதும் இயற்கையாக நிகழும். எனக்கும் அந்த மீட்சி இயற்கையாக நிகழ்கிறது என்று கூற தயக்கமாக இருக்கிறது. என்னுடைய ஆங்கிலம் ஏர் கண்டிஷன் அறையில் வளரும் ஒரு potted plant மாதிரி என்று எனக்கே சில சமயம் தோன்றுகிறது.

தமிழில் எழுதுவது அவ்வாறு அல்ல. அது என்னுடைய மொழி. என்னுள்ளேயே இருக்கும் மொழி. அது எனக்கு பல உரிமைகளைத் தயக்கமின்றித் தருகிறது.

இளமையில் மார்க்சிஸ்ட்டுகளாக இருந்த பலர் ஒரு கட்டத்தில் ஆன்மிகம் பக்கம் நெருங்கி வருவதைப் பார்த்திருக்கிறோம். உங்கள் எழுத்தில் இன்னும் மார்க்சியம் மீதான ஆதரவு இருந்தாலும் ஆன்மீகத் தரப்புகளின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற பார்வை உங்களிடம் தற்போது இருப்பதாகப்படுகிறது. தற்போதைய உங்கள் நிலை என்ன?

ஆன்மீகத் தரப்பின் உரிமைகளை மதிக்கக் கூடாது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் தந்தை மிகப் பெரிய ஆன்மீகவாதி. அவரது தரப்பு நியாயங்களை என்றும் நான் மதித்து வந்தேன்.

என்னைக் கேட்டால் ஆன்மீகவாதிகளை மலினமான முறையில் கிண்டல் செய்வது மிகவும் எளிதானது. மக்களின் நம்பிக்கைகளை கேலி செய்து புகழ் பெறுவது அதைவிட எளிதானது. இதனாலேயே பல மூன்றாம் தரப் எழுத்தாளர்கள் இவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். படைப்பின் மீது மதிப்புக் கொண்ட எந்த எழுத்தாளனும் இதைச் செய்யச் சிறிது கூச்சப்படுவான்.

நான் ஆன்மீகவாதியாக மாறிவிடவில்லை. மார்க்சியத்தின் மீதான மதிப்பு இன்றும் மாறவில்லை. ஆனால் விமரிசனங்கள் இல்லாமல் இல்லை.

புலிநகக் கொன்றையில் மார்ச்கிய புத்தகங்களை உடலுறவு சமயத்தில் பயன்படுத்துவது போல் ஒரு காட்சி உண்டே..

அந்த சம்பவத்திற்கும் மார்க்சியத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எந்தப் புத்தகமாகவும் இருக்கலாம் அல்லவா? அந்த நேரத்தில் கிடைத்த்து லெனின் எழுதிய புத்தகம் . அங்கு வில்லி பாரதப் புத்தகம் இருந்திருந்தால் அது கூட பயன்பட்டிருக்கலாம்...

கல்லூரி ஆசிரியராக இருந்தபோது இயற்பியலை சொல்லிக்கொடுக்கவும் மாணவர்களிடம் நெருங்கவும் தமிழ் தான் உதவியாக இருந்தது என்று சொல்லி இருக்கிறீர்கள். அறிவியல் பிரிவில் மொழி மிகவும் முக்கியமான ஒன்றா?

நிச்சயமாக. அதில் சந்தேகமே இல்லை. .தாய் மொழியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது தான் நல்லது. ஆங்கிலமும் தமிழும் கலந்து அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக்கொடுத்தால் அவர்களுக்கு பாடம் நிச்சயம் புரியவரும். என்னைப் போல பலர் அவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இது நானாக நினைத்து செயல்படுத்திய விஷயம் அல்ல. என் துறைத்தலைவர் ஒருவர் -அவரைப் போர்வை என்று அழைப்பார்கள் - ரொம்பக் கண்டிப்பானவர். அவர் நான் புத்தகங்கள் வாசிக்கும்போது சொல்வார். 'நீங்களெல்லாம் ஃபிராடு பசங்கள். உன் தொழில் என்ன? மாணவர்களுக்குப் புரியும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது. இங்கே உட்கார்ந்து மார்க்சியம் படித்துக்கொண்டிருந்தால் மாணவர்களுக்கு என்ன பயன்?' என்றார். கடுமையாகச் சொல்லவில்லை. உறைக்கும்படியாக சொன்னார்.அது எனக்கு பெரிய தூண்டுதலாக இருந்தது.

பயணம் சார்ந்த உங்கள் கட்டுரைகள் மற்ற எவரையும் விட மிக வித்தியாசமாக உள்ளன. அந்த அனுபவங்கள் வாழ்வின் சட்டகத்தில் பொருந்தும் விதமனான எழுத்து உங்களுடையது. தன்முனைப்பு இல்லாதது. இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது சிலவற்றைப் போல் இருக்கக் கூடாது என்ற தீர்மானம் உங்களிடம் இருந்ததா?

எனக்கு ஆங்கிலத்திலேயே travel writing ரொம்பப் பிடிக்கும். ......பால் தோரோ, காலின் தப்ரான், பில் ப்ரைஸன் போன்ற எழுத்தாளர்கள் பிடித்தமானவர்கள்.அவர்களைப் போல, ஒரு நாட்டைப் பற்றி எழுதும்போது அதன் சில பரிமாணங்களையாவது தமிழர்களுக்குக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. இந்த வகையில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும்.

காந்தியம் பற்றிய அப்போதைய சிந்தனைக்கும் தற்போதைய சிந்தனைக்கும் என்ன மாற்றம் காண்கிறீர்கள்?

காந்தியம் முன்பை விட வலுப் பெற்றிருக்கிறது என்று சொல்வேன். எழுபதுகளில் மார்க்சியவாதிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காந்தி என்றாலே கெட்ட வார்த்தை என்று நினைத்தார்கள். இப்போது உலகம் மாறிவிட்டது. காந்தி சொன்னது சரியாக இருக்குமோ என்று மக்கள் நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இளமையில் காந்தியின் மேல் கோபமாக இருந்ததாக கூறியிருக்கிறீர்கள்..

பகத்சிங் விஷயத்தில் காந்தி நடந்து கொண்டது தவறானது என்று அப்போது நினைத்தேன்.

அப்புறம் ஆர்.பி தத் .பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பார்ட்டியில் ஜெனெரல் செகரட்டரியாக இருந்தவர். இந்தியா டுடே என்ற புத்தகம் எழுதியவர். அவர், எம்.என். ராய் போன்றவர்கள் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். போராட்டத்துக்கு மக்களைத் தயார்படுத்தி விட்டு பிறகு ஒரு கட்டத்தில் விலகியவர். போராட்டத்தை முழுமையாக முன்னெடுத்து செல்லாதவர் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் பணக்காரர்களின் கைக்கூலி என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இக்குற்றச்சாட்டுகள் உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவை என்பது புரிய எனக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை.

ஜெகந்நாதன்-கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் பூதான இயக்கங்கள் பற்றி மார்க்சியர்கள் விமர்சித்தார்கள் என்று கூறியிருக்கிறீர்கள்..ஒரு மார்க்சிய ஆதரவாளராக நீங்கள் எவ்வாறு இதை பார்க்கிறீர்கள்?

அப்போது கூர்மையாகிக் கொண்டிருந்த வர்க்கப் போராட்டத்தை இவர்கள் மழுங்கடித்து விடுவார்கள் என்று மார்க்ஸிஸ்டுகள் நினைத்தார்கள். அவர்கள் பார்வையில் அது சரியாக இருக்கலாம். என்றாலும் இந்த காந்தியவாதிகள் முயற்சியால் மக்களுக்கு நிலம் கிடைத்தது மறைக்க முடியாத உண்மை. சர்வோதயா இயக்கங்களால் மக்கள் பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வு கொடுக்க முடியாது என்று மார்க்சிஸ்டுகள் சொன்னார்கள். அது உண்மையாக இருக்கலாம்.ஆனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் உதவினார்கள் என்பது உண்மை. இத்தகைய நிகழ்வுகள் நாடு முழுவதும் பரவலாக நடக்காமல் இருக்கலாம். ஒரு இடத்தில் நடந்தாலும் அது நல்ல விஷயம்தான்..

ஆரம்பத்தில் திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டதாக சொல்லி இருக்கிறீர்கள். அதன் பாதிப்பில் வெண்பாக்கள் எழுதிப் பழகியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள். திராவிட இயக்கம் உங்களை ஈர்க்க சமூக அடுக்குகள் காரணமாக இருந்தனவா?

இல்லை..நான் திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்படவே இல்லை. விடலைப் பருவத்தில் சில விஷயங்கள் நடந்தன. பதினைந்து வயதில் எம்.ஜி.ஆர் படம் பார்ப்பதும், வெண்பா எழுத முயற்சிப்பதும், ஆசிரியைகளின் மேல் காதல்வயப்படுவதும் அந்தக் காலத்தில் பலருக்கு இயல்பாக நடந்தவை. இதை ஈர்ப்பு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல!

திராவிட இயக்கங்கள் அரசாட்சிக்கு வந்த பின்னர் நடந்த விஷயங்களைப் பற்றி..

எல்லோருக்கும் தெரிந்த. வெட்ட வெளிச்சமான விஷயத்தைப் பற்றி நான் என்ன சொல்ல? இருந்தாலும் தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு மூலம் அரசாங்க வேலை கிடைத்து முன்னேறியது என்பது அவர்கள் ஆட்சியில் நடந்தது. அவர்களுக்கு முன்பே காங்கிரஸ் அரசு இதை செய்யத் துவங்கி விட்டது. என்றாலும் அதை செயல்படுத்தியது திராவிட இயக்கங்களின் ஆட்சி தான் என்பதில் சந்தேகமில்லை....தமிழ் சினிமாவின் இன்றைய நிலைமைக்கு எம்ஜியார் ஒரு முக்கியமான காரணம் என்ற எண்ணம் உறுத்திக் கொண்டிருந்தாலும் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் அவர் என்பதை என்னால் மறக்க முடியாது.

உலக சினிமா பற்றி எழுதி வருகிறீர்கள்..அந்த அளவீட்டில் இந்திய சினிமாவின் தரம் எவ்வாறு உள்ளதாக நினைக்கிறீர்கள்?

இந்திய சினிமாவில் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் போன்றவர்கள் இல்லையா? அடுத்த தளத்தில் ம்ருளால் சென், ஷ்யாம் பெனகல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள். தமிழில் எண்பது ஆண்டுகளாக திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த ஊடகத்தைப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. தொழில்நுட்பம் என்ற வகையில் .நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தமிழில் வெற்றி பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் உலகத்தரத்தைத் தொட்டவர்கள் என்று என்னால் கூற முடியாது. (திரை இசையமைப்பாளர்கள் சிலர் இதற்கு விதி விலக்கு. அவர்களைப் பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பேசலாம்.) பொழுதுபோக்குப் படங்கள், நகைச்சுவைப் படங்கள் என்ற விதத்தில் தமிழில் நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இந்த எல்லைகளைத் தாண்டி வெகுதூரம் சென்றிருக்க வேண்டும். செல்லவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான ஒரு காரணம் நமது நாயகர்கள். மற்றொரு காரணம் எதையும் மலினப்படுத்தி விடலாம்- வரலாறு, இலக்கியம், புராணம், கலாச்சரம் போன்றவைகளைக் கூட – என்ற உறுதி - தடித்தனம் என்றும் சொல்லலாம் - தமிழர்களிடம் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம் இருப்பது.

உதாரணமாக கட்டபொம்மன் , மருது பாண்டியர் வரலாறு சிறிது சிக்கலானது. சுதந்திர போராட்ட்த்திற்கு பல அடுக்குகள் இருக்கின்றன.

சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் கட்டபொம்மன் பக்கிங்ஹாம் அரண்மணை போன்ற ஒரு இடத்திலிருந்து கோலோச்சுவது போலவும், ஜாக்ஸனை மஞ்சள் அரைக்க அழைப்பு விடுவது போலவும் படம் எடுத்த்தை நாம் மன்னித்து விடலாம். தூக்கு மேடையில் நின்று பெருக்கல் வாய்ப்பாட்டை ஒப்பிப்பது போல மருது பாண்டியர் வசனம் பேசுவதையும் மன்னித்து விடலாம். சிதம்பரம் பிள்ளை Ministry of Defence என்ற பட்டை எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும் கப்பலில் நின்று கொண்டு சுதேசிக் கப்பல் விடுவதைப் பற்றிப் பாட்டுப் பாடுவதையும் மன்னித்து விடலாம். ஆனாலும் அறுபது வருடங்கள் கழித்தும் நமது வரலாறு, கலாச்சாரம் சார்ந்த ஒரு நல்ல படம் இது வரை ஏன் வரவில்லை? நான் உளியின் ஓசை, எலியின் மீசை போன்ற படங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். காரணம் நமக்கு சரித்திரம் பற்றிய பிரக்ஞையே இல்லை.

1908ல் திருநெல்வேலி கலவரம் நடந்தது. சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான சம்பவம் அது. வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. தமிழன் சுரணையுடன் இருந்தால் 2008 இல் அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழாவை பெரிதளவில் கொண்டாடியிருக்க வேண்டாமா?

மருதுபாண்டியர்கள் பற்றிய உங்கள் கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது..

ஆமாம். மருதுபாண்டியர்கள் பற்றி கோர்லே என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய புத்தகம் தொடர்பான கட்டுரை அது. காலச்சுவட்டில் வெளியானது . வரவேற்பிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. அது தேவர் சமூகத்தை உயர்த்தும் விதமாக தொனித்ததால் அக்கட்டுரைக்கு வரவேற்பு கிடைத்தது என்றும் சொல்கிறார்கள். தமிழர்களுக்கு சரித்திரத்தில் மீது திடீரென்று ஏற்பட்ட ஈடுபாட்டால் இந்த வரவேற்புக் கிடைத்த்து என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது.

1857 சிப்பாய் கலகத்தில் தென்னகத்தை சேர்ந்தவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்பது பற்றிய கட்டுரையும் அந்த வகையில் வரும்..

    ஆமாம். அது சம்பந்தமான ஆவணங்களைப் பார்த்தாலே எளிதாகத் தெரியும். அன்றைய மெட்ராஸ் ஆர்மியில் தலித்துகள் நிறைய இருந்தார்கள். படை செல்லும் இடங்களுக்கு எல்லாம் குடும்பத்தோடு சென்றார்கள்.. ஆங்கிலேயர்கள் அவர்களை ஓரளவு நன்றாக வைத்திருந்தார்கள்... ஆங்கிலேயர் வீட்டுக்குள் அவர்கள் போக முடியும். சமையல் செய்ய முடியும். பின்னர் எதற்காக அவர்கள் போராடவேண்டும்? வடக்கில் கதை வேறு மாதிரி. நிலம் இருந்த உயர்சாதிக்கார்ர்கள் அங்கு பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்திருந்தனர். இவையெல்லாம் என்னுடைய புரிதல்கள். இவை சரியா இல்லையா என்று சரித்திர ஆசிரியர்கள் தான் சொல்ல வேண்டும்.

தனியார் துறையில் எங்கு வேலை பார்க்கிறீர்கள்? அரசுத் துறைக்கும் தனியார் துறைக்கும் வேறுபாடுகள் எந்த அளவில் உள்ளன?நீங்கள் எழுதிய The Muddy River நாவலில் வரும் சந்திரன் டீ விஷயத்தில் அவரது மேலதிகாரியின் விரோதத்தை சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் உண்டா?

Intellectual Ventures என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணி செய்கிறேன். அரசுத் துறையில் இந்தியா முழுவதிலும் ஏற்படக் கூடிய பல பிரச்சினைகளக் கையாளக் கூடிய பதவிகளில் இருந்தேன். அதனால் எனக்கு ஓர் அகன்றப் பார்வை கிடைத்தது என்று சொல்லலாம். தனியார் துறையில் இந்த அனுபவம் கிடைக்க சாத்தியம் இல்லை. எனக்கு அரசுத் துறையில் வேலை பார்த்தது பிடித்திருந்தது. தனியார் துறை தரும் பணம் மிகவும் பிடித்திருக்கிறது. தனியார் துறையில் நீங்கள் நன்றாக வேலை பார்த்தீர்கள் என்றால் அதன் பலன் உங்களுக்கு உடனடியாக தெரியவரும். குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில். அதே சமயம் உங்களைப் பிடிக்கவில்லையென்றால் உடனே வெளியேத் தள்ள தயங்கவும் மாட்டார்கள். ஆனால் அங்கேயும் முட்டாள்கள் உண்டு. முட்டாள்கள் உலகெங்கிலும் பரவி விரிந்திருக்கிறார்கள். அவர்களைச் சலித்து ஒதுக்கும் வலை இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அரசுத் துறையிலும் சரி, தனியார் துறையிலும் நல்ல சுதந்திரம் கிடைத்தது கிடைத்து வருகிறது. சந்திரனுக்கு நடந்த்து போன்ற மோசமான சம்பவங்கள் என் வாழ்வில் நடக்கவில்லை.

பல்வேறு நகரங்களில் பணி, பயணம் என்று தங்கி இருப்பீர்கள். மனதுக்கு நிறைவு தந்த நகரம் எது?

இந்திய நகரங்களில் எனக்குப் பிடித்தது, கொல்கத்தா தான். அதன் கவர்ச்சி வார்த்தைகளுக்கும், அந்த நகரத்தின் அழுக்குகளுக்கும் அப்பாற்பட்டது. தமிழகத்தில் எனக்குப் பிடித்த ஊர் காரைக்குடி. பழைய அழகுகள் சிறிது மிஞ்சியிருக்கும் ஊர். காரைக்குடியைச் சுற்றி மிக அருமையான இடங்கள் உண்டு. திருமயம், ராமேஸ்வரம் போன்ற இடங்கள். நாங்குநேரிக்கு அருகில் உள்ள திருக்குறுங்குடி கிராமம் மிக அழகியது. உலக அளவில் என்று பார்த்தால் எனக்கு மிகவும் படித்த நகரம் லண்டன் . நகரம் முழுவதும் உலகப் புகழ் பெற்றஅருங்காட்சியகங்கள்,ஓவியக் காட்சியகங்கள். . முக்கியமான விஷயம எல்லா இடங்களுக்கும் அனுமதி இலவசம். எனக்குப் பிடித்த மற்றொரு நகரம் சான்பிரான்ஸிஸ்கொ.

எழுத்தாளர்களை நேரில் காண்பதில் விருப்பமில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். டெல்லியில் பல எழுத்தாளர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் நட்பு இருந்ததா?

ஆமாம். எனக்கு எழுத்தாளர்களை சென்று சந்திக்க வேண்டும் என்று எண்ணம் இருந்த்தில்லை. என்றாலும் டெல்லியில் சில நண்பர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள்.வெங்கட் சாமிநாதன் எனக்கு நண்பரானது Tiger Claw Tree வெளியான பின்னர் தான். அதற்குப் பின்னர் தான் பல எழுத்தாளர்கள் எனக்கு நண்பர்களானார்கள்.. இந்திரா பார்த்தசாரதியை வாசந்தி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்திரா பார்த்தசாரதி இன்று எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். வெங்கட் சாமிநாதன் எனது கடுமையான விமர்சகர். அவர் என்ன சொன்னாலும் அதை நான் மதிப்பேன். முன்பு டெல்லியில் இருந்த பாரதிமணி, டெல்லியில் வசிக்கும் யதார்த்தா பென்னேஸ்வரன் போன்றோர் நல்ல நண்பர்கள். தி.ஜானகிராமனை ஒரு முறை பார்த்திருக்கிறேன். டெல்லியில் க.நா.சு வை பார்த்திருக்கிறேன்என்றாலும் அவரிடம் பழக்கம் கிடையாது. அவர் டெல்லியில் இருக்கும்போது நானும் இருந்தேன்.

டெல்லியில் தமிழ் இலக்கிய வாசிப்பு, நூலகங்கள் பற்றி சொல்லுங்கள்..

டெல்லியில் இருக்கும் வாசகர்களை விட நூலகங்கள் அதிகம் என்று நினைக்கிறேன். இங்கு புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. தமிழ் இலக்கிய வாசிப்பு என்பது மிக அரிதாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். தில்லிகை என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக மாதம் ஓர் இலக்கியச் சந்திப்பை தவறாமல் நடத்தி வருகிறது. இதுவரை இலக்கிய பரமார்த்த குருக்கள் அங்கு பேச அழைக்கப்படாதது நல்லதொடக்கத்தின் அறிகுறி என்று சொல்ல வேண்டும். தில்லியில் சமீபத்தில் நடந்த ஒரு பெரிய இலக்கிய இழப்பு வடக்கு வாசல் பத்திரிகை நின்று போனதுதான். பென்னேஸ்வரனின் நண்பர்களாகிய நாங்கள் பிடிவாதமாக பத்திரிகையை நிறுத்தச் சொன்னோம். சொந்தப் பணத்தைப் போட்டு அவர் பத்திரிகை நடத்துவது எங்களுக்குச் சரியாகப் படவில்லை. தில்லியிலிருந்து வடக்கு வாசல் மீண்டும் வரும் சூழ்நிலையை இலக்கியத்தில் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் சீக்கிரம் உருவாக வேண்டும்.

தற்போது எழுதி வரும் படைப்புகள் பற்றி சொல்லுங்களேன்..

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைச் சார்ந்த நாவல் ஒன்றிற்கான வரைவைத் தயாரித்திக்கிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வரும். இந்த முறை மூலம் தமிழில் இருக்கும் என்று தோன்றுகிறது. இதைத் தவிர ‘மேற்கத்திய ஓவியங்கள் –ஓர் எளிய அறிமுகம்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன்..

உங்களுக்குப் பல முகங்கள் உண்டு. இவற்றில் எந்த முகம் மக்களுக்கு அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஓர் எழுத்தாளனாக, அதுவும் தமிழ் எழுத்தாளனாக அறியப்படவேண்டும் என்பது தான் என் ஆசை.

த சன்டே இந்தியன் நேர்காணல்

3 comments:

  1. அருமையான நேர்காணல் மோகன்...

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. I agree. excellent interview. where else can i find Krishnan's articles or writings. i am a proud owner of both tiger claw tree and muddy river. eagerly awaiting his new publications.

      Delete
  2. அன்பிற்குரிய திரு. பி. எ. கிருஷ்ணனின் நேர்காணலை
    வாசிக்க தந்தமைக்கு மிகவும் நன்றி. கேள்விகள் தேர்வும், அளித்திருந்த பதிலும்
    நிறைவாக இருந்தன.

    நா.கிருஷ்ணா

    ReplyDelete