Sunday, July 29, 2012

இன்று போய் நாளை வா : ஒரு மீள்பார்வை (!)

பாக்யராஜின் படங்களில் என்னைக் கவர்ந்த படம் இன்று போய் நாளை வா தான். கதையே இல்லாமல் வெறும் இளம்வயது அனுபவங்களின் தொகுப்பையே படமாக்கி இருந்தாலும் அதையும் தன் திரைக்கதை பலத்தால் நிற்க வைத்தது அவரது தனித் திறமை தான். முதல் பகுதியில் இருந்த இயல்பு இடைவேளைக்குப் பின் காணாமல் போனாலும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாதப் படம்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த வீடுகள், தெரு, மதிய வேளையில் அங்கு உலவும் மனிதர்கள். அவர்களின் வாழ்க்கை என்று 'அந்தக் கால' நினைவுகளைப் புரட்டிப் போடும் அனுபவத்தாலேயே  இந்தப் படம் எனக்குப் பிடித்ததாயிற்று. அந்தக் கால இளைஞர்களின்  பெண்கள் பற்றிய மனநிலை, அவர்களது உடை மற்றும் சிகையலங்காரம், அப்பாவித் தனம் என்று பல விஷயங்கள் இப்படத்தில் விரவிக் கிடக்கும். ஒரு காட்சியில் புதிதாகக் குடிவந்திருக்கும் எதிர்த்த வீட்டுப் பெண்ணை தரிசிக்க  பாக்யராஜ் வீட்டின் அறையில் நண்பர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது பாக்யராஜ் ஒரு விரக்தி சிரிப்புடன் சொல்வார். "என்னங்கடா இது..ஒரு பொண்ணைப் பாக்குறதுக்காக இவ்ளோ நேரம் வெயிட் பண்ணனுமா?" காத்திருந்து பார்த்தால் அது ராதிகா. இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை என்று பசங்கள் ஆளுக்காள் கனவு கண்டு காதலுக்காக நட்பை துறந்து ராதிகா வீட்டுப் பெரியவர்களிடம் கொத்தடிமை போல் அடிவாங்கி பின் 'பட்டுத் தெளிந்து' அப்பாவி  பாக்யராஜுக்கு விட்டுத் தரும் கதை. 

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரதையும் வடிவமைத்ததில் இன்று வரை நிற்கிறார் பாக்யராஜ். சரியாகப் படிக்காமல் வேலை வெட்டிக்குப் போகாமல் அப்பனிடம் வசை வாங்கி வாங்கி சுரணை மழுங்கிய கதாபாத்திரம் பாக்யராஜுக்கு. அத்தனை இயல்பாகப் பண்ணியிருப்பார். சாப்பிடும்போதெல்லாம் கரித்துக் கொட்டும் அப்பா "என்னைக்காவது பொண்ணுங்க வயத்தத் தள்ளிக்கிட்டு வீட்டு முன்னாடி நிக்கப் போறாளுங்க, இவனாலே" என்று சொல்லும்போது "அப்பா அதுக்குக் காரணம் நீயாத் தான் இருப்பே" என்பார்.  "உங்களைப் பத்தி தெரியாதா" என்று சப்போர்ட்டுக்கு அம்மா வந்தவுடன்  பாக்யராஜ் கேட்பார்" அப்பா ..உப்பு கொஞ்சம் போடட்டுமா?" 

படத்தில் அவருக்கு நண்பர்களாக வரும் இருவருமே அருமையாக நடித்திருப்பார்கள். கொஞ்சம் வசதியான வீட்டுப் பையனான ராஜேந்திரன் வேடத்தில் வருபவர் ஜானிடம் ஹிந்தி கற்கும் காட்சி இன்று வரை பிரபலம். நானும் தக்ஷின பாரத சபா புண்ணியத்தால் ஹிந்தி படித்ததால் டெல்லியில் 'கூடா' கொட்ட முடிகிறது. எனவே ஹிந்தி கற்பதில் இருக்கும் சிரமங்கள் சுலபங்கள் புரியும். 
"ஏக் காவ் மேய்ன் ஏக் கிசானை" சமீபத்தில் விவேக் கூட உபயோகப் படுத்தி இருந்தார். என்னோடு ஹிந்தி படித்த ஒரு நண்பன் இது போல் மிகச் சிரமப்படுவான். அவனுக்கு ஹிந்திக்காரர்கள் மேல் கொலைவெறியே உண்டாகிவிட்டது. பையன் டிவியில் சித்ரஹாரே பார்க்க மாட்டான் என்றால் ஹிந்தி எதிர்ப்பில் அவன் காட்டிய தீவிரம் உங்களுக்குப் புரியும். அவன் அப்பா ஏனோ ஹிந்தி படிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார். பாவம் பையனுக்கு  கடைசி வரை மொழி பிடிபடவே இல்லை. " ரஹ்த்தா த்தா" என்ற வாக்கியத்துக்கு  வாழ்ந்து வந்தான் என்று பொருள். ராஜேந்திரன் "ரகுத் தாத்தா " என்று சொல்ல அவனிடம் ஜான் முட்டி மோதும் காட்சியும், அவன் "ஹ.." "ஹ" என்று   சொல்லும் காட்சியும் கிளாசிக் வகை. போதாதக்குறைக்கு பாட நேரத்தில் பேரனுக்கு லட்டு கொடுத்து வெறுப்பேற்றும் பாட்டி. சிரிக்கவைத்தே மக்களைக் கொல்ல வேண்டும் என்று பாக்யராஜ் நினைத்தாரோ என்னவோ! காட்சிக்கு காட்சி சிரிப்பு தான்.

காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானாக வரும் கல்லாப்பெட்டி போல் இப்போது நடிகர்கள் கிடைப்பார்களா? என்ன குறும்பு. என்ன குரல். அதிலும் இந்தப்படத்தில் அர்ஜூனை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஆக்ஷன் அவதாரத்தில் மனிதர் கலக்கியிருப்பார். அம்பது ரூபாய் அடியாட்களை துவைத்து வீசும் காட்சியில் நடித்தது டூப்பா அவர்தானா தெரியவில்லை. பாய்ந்து பாய்ந்து உதைப்பார். அந்தக் காட்சி மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளில் ஒன்று. பாக்சிங் கற்றுக்கொள்ள -ராதிகாவை சைட்டடிக்க- டவுசர் கேன்வாசுடன் வீட்டுக்கு வருபவரை தலைகீழாக நிற்கவைத்து வயிற்றில் குத்தும் கல்லாப்பெட்டி கடைசியில் காதல் தோல்வியடைந்த அதே மாணவனிடம் அடி வாங்கும் காட்சியில் கலக்கியிருப்பார். பொண்ணு கிடைக்காத வேகத்தில் பையன்  புரட்டி எடுத்துவிடுவான். 

படத்தில்  சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட உணர்ந்து நடித்திருப்பார்கள். முக்கியமாக துணி வெளுப்பவராக நடித்திருப்பவர் பாத்திரம் தான் மிக அருமை. பொதுவாக அந்தந்த ஏரியாவில் பெட்டிக்கடை, மளிகைக்கடை வைத்திருப்பவர்கள் துணி வெளுப்பவர்களுக்கு எரியாக்காரர்களின் எல்லா விஷயங்களும் அத்துபடியாக இருக்கும். உரிமையோடு வீட்டு விவகாரங்களை விசாரிப்பார்கள். இந்தப் படத்தில் அந்த பாத்திரத்தில் வருபவர் மிக யதார்த்தமாக அருமையாக நடித்திருப்பார். ஓட்டை சைக்கிளை கிண்டல் செய்வது, நாயகி வீட்டு விபரங்களை இளைஞர்களிடம் சொல்வது, பாக்யராஜுக்கு கடன் கொடுப்பது கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு குழந்தை மருந்துக்கென  கழுதையைத் தருவது என்று இயல்பாக நடித்திருப்பார். அவரது பாத்திரத்தை வடிவமைத்ததே பாக்யராஜ் தான் வாழும் சமூகத்தின் மனிதர்களை எத்தனை நுணுக்கமாக அவதானித்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. அப்புறம் ராதிகாவுக்கு காதல் அட்வைஸ் தரும் 'எல்லாம் தெரிந்த ' ஆண்ட்டி. பள்ளி- கல்லூரி நாட்களில் சைட்டடித்துத் திரியும்போது வயசுப் பெண்களுடன் இதுபோன்ற ஆண்ட்டிகள் கூடவே இருந்து அட்வைஸ் செய்வது, கூட்டாக சேர்ந்து பசங்களை கிண்டல் செய்வதைப் பார்த்ததுண்டு. இந்தப் பாத்திரத்தில் நடித்தப் பெண்ணை வேறு படத்தில் பார்த்ததாக நினைவில்லை. இயல்பாக செய்திருப்பார். 

படத்தில் பல காட்சிகள் வெயில் பரவிய நண்பகல் காட்சிகளாகவே இருக்கும். அதுவே இந்தப்படத்துக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம். ராஜாவும் தன் பங்குக்கு அந்த வெயில் நேரத்தை தன் இசையால் உணர்த்தியிருப்பார். ஒரு காட்சியில் பாக்யராஜ் ராதிகாவை ரேஷன் கடைக்கு கூட்டி செல்லும்போது அவரது அம்மா அவர் வீட்டுக்கு வெளியே நின்று தலை சீவிக்கொண்டிருப்பார். நண்பகல் நேரம். கூட்டமில்லாத தெரு. ஒரு பறவையின் குரல் போல் குழலோசை -சின்ன பிட் தான்- தருவார் ராஜா. அந்தப் பகல் நேரத்தில் அங்கு நாமே நின்றுகொண்டிருப்பது போல் இருக்கும். 

பாக்யராஜின் அப்பாவித் தனம் கலந்த நடிப்பு இன்னும் பிரமாதம். வீட்டுக்கு வரும் அவரது நண்பர்களை கண்டித்து அவர்களுடன்  கூட்டுசேரக்கூடாது என்று பாக்யராஜின் பெற்றோர் கடுப்படிக்கும்போது " நான் சும்மா வீட்டுல தான் இருந்தேன்..அவங்களாத் தான் வந்து இங்கே சேந்தாங்க" என்று  ஒன்றுமே தெரியாதவர் போல் சொல்வார். அதே போல் ராதிகா வீட்டுக்காக வாங்கி வரும் ரேஷன் அரிசியை அப்பாவுக்கு பயந்து குப்பைத் தொட்டிக்குள் மறைக்க அதை அங்கிருப்பவர்கள் கண்டு பங்கிட்டுக்கொள்ள பேயறைந்தவர் போல் நிற்பார். அப்போது அங்கு வரும் அந்த சலவைத் தொழிலாளி என்ன நடந்தது என்று கேட்பார். "அரிசி கொண்டு வந்தேன்..எல்லாம் போச்சு..எல்லாம் பிரிச்சிட்டாங்க" என்பார் பரிதாபமாக. துயரத்தில் இருப்பவன் வார்த்தைகள் தடுமாறி குழறும் விதத்தை மிக இயல்பாக நடித்துக் காட்டியிருப்பார். 

 சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் பார்த்து மனதை லேசாக்கிக்கொள்ள தகுந்த படம். இதுபோன்ற இயல்பான படங்கள் இனிமேல் வருமா?







6 comments:

  1. காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானாக வரும் கல்லாப்பெட்டி போல் இப்போது நடிகர்கள் கிடைப்பார்களா?


    A trillion rupee question! ( I am sudesi)

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம்..அதே போல் நடிகர்களைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்த இயக்குனர்களும் இப்போது குறைவு தானே!

      Delete
  2. நல்ல பதிவு சந்ரு சார்...!
    //
    எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த வீடுகள், தெரு, மதிய வேளையில் அங்கு உலவும் மனிதர்கள். அவர்களின் வாழ்க்கை என்று 'அந்தக் கால' நினைவுகளைப் புரட்டிப் போடும் அனுபவத்தாலேயே இந்தப் படம் எனக்குப் பிடித்ததாயிற்று//

    //படத்தில் பல காட்சிகள் வெயில் பரவிய நண்பகல் காட்சிகளாகவே இருக்கும். அதுவே இந்தப்படத்துக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம். //

    இரண்டும் மிக அருமையான அவதானிப்புகள்....!

    ReplyDelete
  3. அருமையான பிளாஷ்பாக். நான் இந்த படத்தை வெளியீட்டின்போது பார்க்கவில்லை..வெகு நாள் கழித்து டிவியில்தான் பார்த்தேன். இன்றும் பாக்யராஜ் படங்களில் எனக்கு பிடித்தது இதுதான். அவர் நண்பர்களாக வருபவர்கள், உண்மையிலேயே கோவையை சேர்ந்த அவரது நண்பர்கள் பழனிச்சாமியும், ராம்லியும். இந்தி வாத்தியாராக வரும் ஜான், உண்மையிலேயே எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர்....! கொஞ்சம் நாள் என் தந்தையிடம் , ஓவிய சிஷ்யனாகவும் இருந்தவர்!!!

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம் சார்...
    அந்தக்கால ஞாபகம் வந்தது..
    வாழ்த்துக்கள்... நன்றி...


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  5. மிக அருமையான விவரிப்பு . .

    இந்த படத்தைதான் " கண்ணா லட்டு தின்ன ஆசையா "

    என உருவாக்கி வருவதாக ஒரு தகவல்

    ReplyDelete