Sunday, October 30, 2011

மீண்டு(ம்) வா ராஜா!


தொண்ணுத்தேழு என்று நினைக்கிறேன். விகடனில் ராஜாவை பற்றிய கட்டுரை வந்தது.ராஜா ரசிகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பிய அந்த கட்டுரையின் தலைப்பே ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று கடுமையாக இருந்தது. பல நேரடியான கேள்விகளைக்கொண்ட அந்த கட்டுரை எனக்கு அப்போது பெரும் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவ்வளவும் நியாயமான வாதங்கள். கோடம்பாக்கத்திலேயே பொழுதைக் கழிக்காமல் உலக அளவில் ராஜா பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அந்த கட்டுரை ராஜாவை கேட்டுக்கொண்டது. ரஹ்மானின் வருகையும் தன் மலிவுப்பதிப்பாக கோடம்பாக்கத்தில் வளர்ந்து வந்த தேவா போன்ற புதியவர்களின் வருகையும் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும் நிச்சயமாக ராஜாவை பாதித்திருக்க வேண்டும்.

விகடனின் மாணவப் பத்திரிக்கையாளர்கள் சிலர் ராஜாவை நேர்காணல் செய்தபோது ' தற்போது இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒருவரின் இசைப்பாணியே பின்பற்றப்படுகிறது..ஜனங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்று சொன்னார். அவதாரம் பாடலில் 'பாட்டுன்னு நெனப்பதேல்லாம் ..இங்கு பாட்டாக இருப்பதில்ல' என்ற வரிக்கு 'அது ஏம் பாட்டில்ல ' என்று அவசரமாக பதில் தருவார். ஆனால் உண்மையில் ராஜா தான் தன் இனிமை நிறைந்த இசைக்கோர்வைகளை நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு தர மறந்துவிட்டார். அதற்கு மிக முக்கியக் காரணம் அவரின் இசைப்பசிக்கு தீனி போட தகுந்த இயக்குனர்கள் இல்லாது போனது. பாரதிராஜா, பாலச்சந்தர்,மணிரத்னம் போன்ற தமிழ் சினிமாவின் மிக முக்கிய தலைகள் ராஜாவுக்கு மாற்றாக யாராவது கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருக்க ரஹ்மான் கிடைத்ததும் பிறகு ரஹ்மான் மிகப் பெரிய அளவில் வளர்ந்ததும் வரலாறு. ராஜாவுக்கு கிடைத்தவையோ உப்பு சப்பில்லாத படங்கள். அவரால் அதைத் தாண்டி எதுவும் புதுமையாய் செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமானப் படங்களே கிடைத்தன என்பதுவும் உண்மையே.

ராஜாவும் தன் பங்குக்கு தன் வழக்கமான பாணி இசையை முற்றிலும் தவிர்த்துவிட்டு விருப்பமில்லாமல் இசை அமைப்பது போல் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு உதாரணம் சொல்லலாம். பாலச்சந்தரின் சிந்துபைரவிக்கு கர்னாடக இசைப்பின்னணியில் இசை தந்திருந்தாலும் பட்டிதொட்டியெங்கும் கேட்கும்படியான, பாமர ரசிகர்களை சேரும் விதமான அதே சமயத்தில் தரத்தில் சமரசமில்லாத பாடல்களை தந்த ராஜா, பின்னாளில் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவல் படமாக்கப்பட்டபோது நல்ல பாடல்கள் தந்திருந்தாலும் அவற்றில் ராஜாவின் முத்திரை அறவே இல்லை.இன்றும் கர்நாடக இசை நன்கு தெரிந்த ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடல்கள் என்றபோதிலும் ராஜாவின் இசைச்சாரம் அதில் துளியும் இல்லை. இது போன்ற பல படங்கள்.பாடல்கள்.

தேவதை படத்தின் end credit title இசை மிக சிறப்பாக வந்திருப்பதாக விமர்சனத்தில் எழுதிய விகடன், படம் முடிந்தவுடன் எழுந்துசென்றுவிடாமல் ராஜாவின் அந்த டைட்டில் இசையைக் கேட்டுவிட்டு செல்லுமாறு எழுதியது. அதற்காகவே பலதடவை அந்தப் படத்தைப் பார்த்தேன். அற்புதமான இசை தந்திருந்தார். அப்போது சென்னையில் என் அண்ணன் வீட்டில் தாங்கி இருந்த நான் இந்த இசை ஆடியோ கேசட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு இரண்டு வெவ்வேறு கடைகளில் வாங்கி ஏமாந்தேன். கேசட்டில் குறிப்பிடப்பட்டும் அதில் அந்த இசை பதிவு செய்யப்படவில்லை. எனக்கோ பெருத்த ஏமாற்றம். அதற்கு முன்பே பல படங்களில் ராஜாவின் இசைக்காக என்றே சேகரிப்புக் காசுகளில் வாங்கிய கேசட்டுகள் எக்கச்சக்கமாய் ஏமாற்றி இருந்தன. ராசையா ,தேசியகீதம் போன்ற எத்தனையோ படங்களில் ராஜாவின் ஏமாற்றம் தரும் இசை கேட்டு வெறுத்துப் போனேன். ராஜாவின் இசைச்சுவடே அந்தப்பாடல்களில் பதியவில்லை. நிரவல் இசையில் இந்தியாவிலேயே சிறந்தவரான ராஜாவின் பிற்காலப் பாடல்களில் நிரவல் இசை என்னென்னவோ சத்தங்களால் நிரப்பபட்டிருந்தது பெரிய வருத்தம் தந்தது. என் எண்ணமெல்லாம் யார் என்ன செய்தால் என்ன.. ராஜா தன் மிகப் பெரும் பலமான அந்த ஆர்கெஸ்ட்ரேஷனை ஏன் கைவிட்டு சிந்தசைசரை மட்டும் நம்பத் தொடங்கினார் எனபது தான். என் நண்பர் ஒருவர் ராஜாவின் சம்பளம் மிக மிக குறைவு என்றும் அதனால் அவரது விருப்ப இசைக்கருவிகளான வயலின், செல்லோ போன்றவற்றை வாசிக்கும் பலருக்கு சம்பளம் தருவதில் சிக்கல்கள் இருப்பதால் எளிய முறையிலேயே இசை அமைக்கிறார் என்ற தகவலை சொன்னார். என்னால் அந்த தகவல் தந்த வருத்தத்தை தாங்க முடியவில்லை.

மேலும் எக்கச்சக்க சர்ச்சைகள் வேறு. தொன்னூத்தி ரெண்டில் லண்டன் ராயல் ஃபில்ஹார்மொனிக் குழு ராஜா எழுதிய சிம்பனியை லண்டனில் ரெகார்ட் செய்த போது தமிழகமே சந்தோஷத்தில் பூரித்தது.அதுவும் ரிலீசாகாமல் இருப்பது பற்றி இன்றும் யாராவது ஒருவராவது இணையத்தில் வருந்தி எழுதுவதை காண முடிகிறது. தொண்ணூறுகளின் மத்தியில் குமுதம் புதிய பாடலாசிரியர் தேர்வு என்று ஒரு போட்டி வைத்தது. ராஜாவின் ட்யூனுக்கு சிறந்த பாடல் வரிகளை எழுதுபவருக்கு தங்கப்பேனா பரிசளிக்கப்படும் என்றது அறிவிப்பு. அப்போது பிரஷாந்த் நடித்துக்கொண்டிருந்த 'ஜோக்கர்' என்ற படத்தில் அதே பாடல் உபயோகிப்படும் என்பதால் ராஜாவின் இசையில் பாடல் எழுத பலர் போட்டியிட்டனர்.முடிவில் எங்கள் ஊரை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஜெயித்து ராஜாவின் கையால் தங்கப்பேனா வாங்கினார். படம் மட்டும் வளரவே இல்லை. பிறகு கருணாநிதி அண்ணன் ராஜா சிம்பனி செய்ததற்கு நடந்த பாராட்டு விழா மலர் ஒன்றை எனக்கு படிக்கக் கொடுத்தார். அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தவிர மற்ற எல்லா தென் மாநில முதல்வர்களும் ஏன் கவர்னர்களும் கூட ராஜாவை வானளாவப் புகழ்ந்து வாழ்த்துக் கடிதம் எழுதி இருந்தார்கள். வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் பலரும் ராஜாவின் திறமையை வியந்து பாராட்டி இருந்தனர். ஆனால் மறைந்த சுப்புடு தவிர வேறு யாரும் ராஜாவின் சிம்பனியை இன்று வரை கேட்க முடியவில்லை.

அந்த இசையை கண்டக்ட் செய்த ஜான் ஸ்காட்டிடமே இது பற்றி ராஜா ரசிகர் இணையத்தில் கேட்டிருந்தார். விமர்சகர்களின் குருட்டுத்தனமான வார்த்தைகளுக்கு பயப்படாமல் ராஜா அதை ரிலீஸ் செய்யவேண்டும் என்பது தான் தனது ஆசையும் என்று பதில் தந்திருந்தார் ஸ்காட்.

இது போன்ற பல குறைகளுக்கு ராஜாவிடம் இருந்து பதில் வந்ததே இல்லை. மாறாக அவர் முன்பை விட அதிக உற்சாகத்துடன் மீடியா முன் வருகிறார். நிறைய நேர்காணல் தருகிறார். தன் இசைப்பதிவுகளை புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதிக்கிறார். ஹங்கேரி இசைக் கலைஞர்களை வைத்து மட்டும் பல படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அதில் முதல் படமான குரு (மலையாளம்) தவிர எந்தப் படத்தின் இசையும் சிறப்பாக அமையவில்லை என்பது தான் சோகம். நீண்ட நாட்களுக்குப் பின் 'பழசிராஜா' வில் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருந்தார்.ஒரே சந்தோஷம் தமிழ் தவிர ஏனைய மொழிகளில் கொஞ்சம் நல்ல இசையை தருகிறார். ஒரு மராத்தி மொழிப்படத்துக்கு இசை அமைக்கிறார். அந்த படத்தின் இயக்குனர் ராஜாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெறுவதைப் பார்க்கும்போது அவ்வளவுப் பெருமையாக இருந்தது. அதே போல் பங்கஜ் கபூர் நடிக்கும் ஹேப்பி படத்தின் ட்ரைலர் இசை உயிரை உருக்குகிறது. ஆனால் இதே போல் உயிரை உருக்கும் ட்ரைலர் இசை கொண்ட பா படத்தில் ஏனோ சிறந்த பின்னணி இசை அமையவில்லை. அதே போல் ஹங்கேரி இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை அமைத்த கமலின் ஹேராம் பின்னணி இசையில் மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற எங்கிலும் ராஜாவின் சிம்பனியைக் கேட்க முடியவில்லை. அதே போல் ராஜா இசை அமைத்ததாக நாம் நம்பிக்கொண்டிருந்த ஒரே ஆங்கிலப்படமான ரஜினி நடித்த ப்ளட் ஸ்டோன் படத்திலும் ஆங்கிலப் பதிப்பில் அவர் இசை இல்லை என்று நண்பர் தினா சொன்னார். ராஜாவின் பல மேற்கத்திய இசைக் கோர்வைகளைக் கேட்கும்போது நிச்சயம் அவர் இந்திய இசை உலகுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை என்று தோன்றும். அவர் இசை உலகின் மற்ற பாகங்களிலும் கேட்கவேண்டும் என்ற பேராசை இல்லாத ராஜா ரசிகன் உண்டா என்ன?

முன்பு கூட அதற்கான வாய்ப்புகளில் சிக்கல் இருந்திருக்கலாம். இப்போது எவ்வளவு வாய்ப்புகள் இருக்கும். அவரை தேடி வரும் வாய்ப்புகளை கூட மறுத்துவிடுகிறார் என்று கேள்விப்பட்டேன். திருவாசகம் போன்ற ஒரு எல்லை கொண்ட விஷயங்கள் தவிர உலகிலேயே இயற்கையை இசையாக மொழிபெயர்க்க தகுதியான ராஜா, இயற்கை சார்ந்த சிம்பனிகளை எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. வெளிநாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து நிறைய ஆல்பங்கள் செய்யலாம். ஆனால் ராஜா அவற்றில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஒரு நேர்காணலில் நீங்கள் மற்ற மொழிகளில் ஆல்பங்கள் செய்யலாமே என்று கேட்கப்பட்ட போது 'நீங்கள் எல்லாம் டவுன்லோட் செய்தே கேட்கிறீர்கள்' என்ற நேரடியாக கேட்டார். இணைய உலகில் அது நிஜம் தான் என்றாலும் மகத்தான இசைத் திறமையைக் கொண்ட ஒரு மாபெரும் இசைஅமைப்பாளர் இது போன்ற காரணங்களுக்காக தன் எல்லையை சுருக்கிக்கொள்வதா என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. அதே போல் கி.ராஜநாரயணன் தமிழின் வர்ணமெட்டுகளை ராஜா நிறைய எழுத வேண்டும் என்ற விருப்பத்தை முன்பு தினமணியில் எழுதி இருந்தார். ராஜா அவற்றை எல்லாம் எங்கே படிக்கப் போகிறார்.

சமீபத்தில் ராஜா ஒரு பிராட்வே நாடகம் ஒன்றுக்கு (Who's afraid of Virginia Woolf) இசை அமைத்தார். அது பற்றிய செய்தி படித்தவர்களுக்கு அது மிகப்பெரும் சந்தோஷத்தை தந்தது. ஆனால் அதிலும் ராஜா தன் முத்திரையை பதிக்கவில்லை என்று அதைப்பார்த்தவர்கள் எழுதுவதைப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. அவரது இசையில் உருவான பல படங்கள் இன்னும் ரிலீசாகாமலே இருக்கின்றன. பல படங்களுக்கு ஏனோதானோ என்று தான் இசை தருகிறார். அப்படி இருக்க அவர் சினிமாவை கொஞ்ச நாள் ஒதுக்கி விட்டு உலகளாவிய இசைப்பயணங்கள், உலக சினிமா- ஹாலிவுட் சினிமா போன்றவைகளுக்கு தன் இசைப்பங்களிப்பை தருதல், மேற்கத்திய இசை ஆல்பங்களுக்கு இசை அமைப்பது போன்ற விஷயங்களையும், நம் கிராமிய இசைக்கு சினிமாவில் புத்துணர்ச்சி தந்தவர் என்ற வகையில் நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்து கிராமிய கலைஞர்களுடன் இணைந்து ஆல்பங்கள் போன்றவற்றை செய்யலாமே. ராஜாவிடம் இன்னும் எதிர்பார்க்கும் ரசிகர்களை நான் இணையத்திலும் நேரிலும் நிறையப் பார்க்கிறேன். பலரும் அவரது இசை இன்னும் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தான் இருக்கிறார்கள்.

ஆனால் அவ்வப்போது ராஜாவிடம் எதிர்பார்த்து ஏமாறுகையில் அவரது பொற்காலமான எண்பதுகளின் இசைக்கோர்வைகள் அவர் மீதான பிரமிப்பை நொடிக்கு நொடி ஏற்றிக்கொண்டே தான் செல்கின்றன. ராஜா நிச்சயம் ஒரு மாயக்க்காரர் தான்.

எனவே தான் அவரிடம் இன்னும் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

18 comments:

  1. எல்லாப் படைப்பாளிகளிடமும் சில நேரங்களில் உருவாகும் ஒரு இடைவெளி... அது அவர்களே போட்டுக்கொண்ட வேலியாகக் கூட இருக்கலாம்..

    அதிலிருந்து வெளிவருவது அவர்கள் ம்னதால் மட்டுமே முடியும் !

    ReplyDelete
  2. //எனவே தான் அவரிடம் இன்னும் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது//
    ஆம் உண்மைதான்

    ReplyDelete
  3. நியாயமான கட்டுரை. ராஜாவிடம் எதிர்பார்க்கிறோம் இன்னும் நிறைய!!!!!!!

    ReplyDelete
  4. எனது நீண்ட நாள் எண்ணங்களை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது உங்கள் பதிவு.பீத்தோவன் போல, ஒரு செபாஸ்டியன் பாக - ஐப்போல அவர் இசைக்கோவைகளை வியாபார நோக்கமின்றி உருவாக்கலாம். வெளியிலிருந்து பார்த்துக்கொண் டிருக்கும் நமக்கென்ன தெரியப்போகிறது.. அதுபோன்ற கோவைகளை அவர் உருவாக்கி வைத்திருக்கலாம்.என்றேனும் ஒரு நாள் அவை வெளிவரும்.அப்போது நாமிருந்து கேட்போமா எனபதே என் ஐயம்....

    ReplyDelete
  5. ராஜாவிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  6. அருமையான கட்டுரை...

    ReplyDelete
  7. நம்மையெல்லாம் இன்பசிறையிட்ட இளையராஜா, தனக்கு தானே விதித்துக்கொண்ட சுய சிறையிலிருந்து மீண்டு(ம்) வர விழையும் எண்ணற்றோரில் எளியேனும் ஒருவன்!

    ReplyDelete
  8. நம்மையெல்லாம் இன்பசிறையிட்ட இளையராஜா, தனக்கு தானே விதித்துக்கொண்ட சுய சிறையிலிருந்து மீண்டு(ம்) வர விழையும் எண்ணற்றோரில் எளியேனும் ஒருவன்! - suresh seenu

    ReplyDelete
  9. First my apologies for commenting in English. But this way I will be able to express myself better.

    There are certain details in the article which I don't agree with.

    "The music of Mogamul does not have Raja's stamp unlike Sindhu Bhairavi". I am surprised to find this statement here, that too from someone who is a fan of Raja. It can be argued, and very effectively, that 'Mogamul' score was as good as 'Sindhu Bhairavi' in its conception and execution. For Raja chose two ragas which are rarely used in films, Natakapriya and Ramapriya. To the Ramapriya song, 'charanam paada charanam' he gave a classical touch, a la, 'Kalaivaaniye'. Secondly for the Natakapriya song he gave a pathos touch. I fail to understand how this song is said not to have Raja's touch. Other than him no other MD would even have dared to tune in this raga, leave alone create such a melody. The other song in the movie 'sollayo vaai thirandhu' is tuned in 'Shanmukhapriya'. Now in the history of Tamil music no one as far as I know has used Shanmukapriya to depict 'viraham' the pangs of separation. Raja changes the color of 'Shanmukhapriya' completely and that can happen only when a genius is in full form. So I complete reject the argument that 'Mogamul' was not as great as 'Sindhu Bhairavi'. It is just that Raja had moved to a different plane while the Rasikas were waiting in the same platform.

    Coming to the claim that Budapest Orchestra was never effective, again a claim which at best is laughable. He used it in 'Kalapani' where music was the only saving grace. 'Guru' is easily the best film album in all of Indian film history. Budapest orchestra was used in it. I have not seen 'Hey Ram' to comment on the BGM but I have known many friends who didn't like the movie but yet bought the DVD just for music. Lot of people were moved by the background score of 'Nandalala' and I can personally can vouch for the terrific score of the orchestra from 'Azhagarsamiyin Kudhirai'.

    'Tiruvasagam' is the best creation ever of ANY Indian music director. Period. Please show me one creation of any music director which can match. I have heard and keep hearing the music of all the masters but no, they don't have anything which can measure up to 'Thiruvasagam'. So I don't understand 'Tiruvasagam' being constrained. In what sense?

    More to write but some work calls. Will get back and write more about Raja's recent works.

    ReplyDelete
  10. இராஜா இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறார் போலும் ஏனென்றால் அவரிடம் நல்ல இசை இப்பொழுது வருவதில்லை சில பாடல்களை தவிர 1995கு பின்! அவர் மிகவும் பிஸியாக இருந்த பொழுது மிக நல்ல மாஸ்டர் பீஸ்களை தந்தவர்.

    இராஜாவின் முத்திரையே / விலாசமே அவர் இசையில் ஒரு ஜீவன் / உயிர் ஓட்டம் இருக்கும் அதற்கு காரணம் Live Orchestra என்கிற மனித இசை வல்லுனர்களின் உயிர் ஒட்டமான இசை பங்களிர்ப்பு இருந்தது ! எப்பொழுது அவர் அதை விட்டுவிட்டு செயற்கை இசை கோர்ப்பை நடினரோ அன்றே அவரின் இசை மடிந்து விட்டது. இடையில் சில படங்களைத் தவிர ! என்னைப்போல் ஒரு Die Hard இராஜா fanatic னாலேயே தற்போதிய அவரின் இசையை இது ராஜாவின் இசை என்று அருதியுடன் செப்ப முடியவில்லை. மேலும், தமிழைத் தவிர பிற மொழிகளில் அவரின் இசை எந்த வித மற்றம்மும் இன்றி முன் போலவே உள்ளது ஆனால் தமிழில் மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை ?

    இதை படித்து விட்டு என்னை வசவு செய்கிறவர்கள் தயவு செய்து அவர்கள் மனதில் எனது கூற்றுகள் சரியா என்பதை நன்கு பகுத்தறிந்து அலசி பின் விமர்சிக்கவும் / வசவு செய்யவும் !

    ReplyDelete
  11. மேலுள்ள எனது கூற்று உண்மை என்பதை அறிய இந்த ஒளிப் படத்தை நோக்கவும்!

    http://www.youtube.com/watch?v=5WVGcQr_Eh8

    ReplyDelete
  12. தல ஒரு பகிர்வு
    http://raviaditya.blogspot.com/2011/10/king-of-heavenly-hummings-3.html?authuser=0

    ;-)

    ReplyDelete
  13. I had run a Rare Raja series which focused on Raja songs in the 90s and 2000s. Here is the link. This was compiled by my friend @mayilsenthil: http://www.paadal.com/playlist/mail2vsenthil/RareRajaSeries I do not understand how these songs can be called inferior to what he did in the 80s. Infact many of the well knows Raja songs of the era are not even mentioned here. I still have with me a list of more than 120 songs which are superb and will match to lot of what he did in the 80s.

    Reg synth usage: Yes, lot of fans don't like it but the usage and recording quality have improved tremendously. Have you heard the songs of 'Valmiki' or 'Madhiya Chennai' or 'Kannukkule'? So many outstanding songs in these movies. It is unfortunate that the movies didn't do well but 'unnai patri sonnal' (Madhiya Chennai) is as good a female solo as any that Raja has composed. What superb piano usage. Almost every song of'Valmiki' was a gem. What energy he brings to 'rekka katti parakudhu'. Or what about 'Pudhu Pournami Nilavu' from 'Kannukkulle'. I totally fail to understand your argument that the Tamil songs are not good. If you are telling that they are not getting popular then that is a different point. But musically I have not found songs from these movies any inferior to his earlier work. Infact there is a sense of perfection in these works. Even in 'Thandavakone', he has given a superb 'Sambho Siva Siva' and an outstanding atmospheric piece, 'neeraal udal kazhuvi'. Each of them has his imprint. I am ofcourse not even talking of 'Sneha Veedu' which has probably the best music of this year, across all languages.

    And kindly read the article that Kana Praba has posted about Minimini and the songs she sang under Raja. All these were in the 90s timeframe only. http://radiospathy.blogspot.com/2011/10/blog-post_30.html

    ReplyDelete
  14. சந்துரு

    ‘மாயா பஜார்’ என்ற் மிக மறக்கக்கூடிய திரைப்படம், ராஜாவின் மிக சோர்வான காலத்தில் (1995) வெளியானது. அதில் இடம்பெற்ற ‘நான் பொறந்து வந்தது’ என்ற பாடலைக் கேளுங்கள். 1980 கதை பேசுவதை விட்டு விடுவீர்கள். முற்றிலும் குரல்களாலேயே உருவாக்கப் பட்ட பாடல். எந்த ஒரு இசையமைப்பாளரும் இந்தியாவில் இதை செய்ததில்லை. ஏன், உலகில் தீவிரமாகத் தேடினால்தான் கிடைக்கும். தான் சோர்ந்த காலத்தில் ஒருவரால் இப்படிப்பட்ட இசையை உருவாக்க முடியுமென்றால் அது அவரது மேதமையைத் தான் காட்டுகிறது.

    அவருடைய தமிழிசையில் ஆதங்கம் இருப்பவர்களுக்கு அவருடைய மற்ற பொழிப் படங்கள் நிச்சயமாக ஆறுதல் தரும். பாலசந்தர், பரதிராஜா மற்றும் மணிரத்னம் அவரால் பயணடைந்தவர்கள். அவ்வளவுதான். ராஜா, மலையாளத்தில் சத்யனுடன் சக்கை போடு போட்டு வருகிறார். இசைதான் முக்கியம், மொழியல்ல.
    தமிழ் சினிமாவில் அவரை உதட்டளவில் புகழ்ந்து விட்டு வேறு இசையமைப்பாளர்களிடம் சென்று விடுபவர்கள் அதிகம். அவரை மதிக்கும் மற்ற மெஒழிகளில் அவர் அருமையான இசை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

    நண்பர் சுரேஷ் சொல்வதை நானும் ஒப்புக் கொள்கிறேன். BSO வுடன் அவரது இசை பயணங்கள் நன்றாகவே அமைந்துள்ளன.

    ராஜா ரசிகர்கள் பெரும்பாலானோர் இன்னும் 80 களிலிருந்து வெளியே வரவில்லை. அவருடைய 1990 களில் வந்த இசை இன்னும் சரியாக ஆராயப் படவில்லை. அவரோ 21 நூற்றாண்டில் பல இசை சோதனைகளோடு என்கோ இருக்கிறார்.

    அதென்ன அவர் ஸிந்த்தஸைசர் உபயோகித்தால் ஒரு நியாயம், மற்றவர்கள் உபயோகித்தால் இன்னொரு நியாயம்? அவருடைய கடந்த கால 10 வருடங்களில் வெளிவந்த மலையாளப் படங்களின் இசையைக் கேளுங்கள். ஸிந்த்தசைஸரில் அவர் உருவாக்கியுள்ள புதிய இசை நுணுக்கங்கள் நல்ல மெட்டுக்களுடன் புரிய வைக்கும்.

    நீங்கள் எழுதியுள்ளதைப் போல சில வருடங்களுக்கு முன் நானும் ஏன் ராஜா தனது மேற்கத்திய இசைப் புலமையை பலவாறு மேற்குலகிற்கு பறை சாற்றக் கூடாது என்று நினைத்ததுண்டு. இன்று அப்படி சிந்திப்பதில்லை. அதென்ன மேற்குலகிற்கு நமது திறமையை பறைசாற்றுவது? அது மிக அடிமைத்தனமான எண்ணம். Bryan Adams ம், Paul McCartney யும் நம்முடைய கீரவாணியைக் கற்றுக் கொண்டு நம்மிடம் வந்து பறை சாற்றுகிறார்களா என்ன?

    1,000 திரைப்படங்களுக்கு இசை என்ற ஒரே மைல்கல்தான் இவருக்கு இன்னும் பாக்கி. அவரது இசையை சரியாக புரிந்து கொள்ள இன்னும் ஒரு 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அவரது மானசீக குருவான Bach ன் பல இசை கண்டுபிடிப்புகள் மேற்கத்திய செவ்வியல் இசையில் 150 ஆண்டுகள் ஒதுக்கப்பட்டு அப்புறம் மேல் எழுந்தவை. யார் கண்டார்கள்? இசை ஜீனியஸ்களுக்கே இப்படி ஒரு பிரச்சனை வரலாற்றிலே முன்னமே இருந்திருக்கிறது.

    மார்கெட் போன்ற விஷயங்களுக்கு அப்பற்பட்டவர் ராஜா. இன்றும் அவரது இசையில் மிக மிக குறைவான compromise களைப் பார்கிறேன். அவரைப் போல உலகின் பல்வேறு இசைகளை fuse செய்யக்கூடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவரை சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளாதது உலகளவில் நம்முடைய குறை. அவ்வளவுதான்.

    ரவி நடராஜன்
    http://geniusraja.blogspot.com

    ReplyDelete
  15. லோகேஷ் அரவிந்தன்October 31, 2011 at 3:00 AM

    திரு.சுரேஷ், மிக நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். மோகமுள்ளில் வரும் பாடல், கமலம் பாத கமலம் என்று வரும்.ராஜா மாறியிருக்கிறார்,ரசிகர்கள் மாறவில்லை. 80களில் இருந்து ரசிகர்கள் இன்னும் வெளியே வர மறுக்கிறார்கள். எழுதப்படாத slate போன்று மனதை வைத்து கொண்டு ராஜாவின் இசையைக் கேட்டுப் பாருங்கள், அவருடைய இசையின் உன்னதம் புரியும்.

    ReplyDelete
  16. இன்று ராஜாவிடம் அந்த பழைய Orchestra இல்லை என்பது எனக்கு வந்த செய்தி. விஜி மனுவேல் , சதா சுந்தரம் போன்றோர்களின் பங்களிப்பு இப்பொழுது இல்லை! என்று அவர் செயற்கை இசை பக்கம் சென்றாரோ அன்றே அவர் Troupe கலைஞர்கள் அவரை விட்டு பிரிய ஆரம்பித்துவிட்டனர் இது நிதர்சனமான உண்மை!

    Many I interacted, all had same feeling in mind although they haven't posted comments here! They interacted in chat. Some where part of raja's troupe but now working with other music composers!

    ReplyDelete
  17. இந்த அறிவுபூர்வமான இசை விவாதத்தில் பங்கு கொண்டு கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு இசை ஞானம், ரசனை, அனுபவம் எதுவுமே இல்லை.

    ஆனால் ராஜாவிடம் விஜி மானுவேல், சதா போன்றோர் இன்று வாசிப்பது இல்லை என்று தினகர் சொல்வது அப்பட்டமான அவதூறு.

    விஜி மானுவேல் உடல்நிலை சரியில்லாமல் ராஜாவுக்கு மட்டுமில்லாமல் யாருக்குமே வாசிப்பதில்லை. ஆனால் இன்றும் தினமும் ராஜாவிடமிருந்து விஜிக்கு சம்பளம் சென்றுகொண்டிருக்கிறது. சதா இன்று காலை கூட ராஜா வேலை செய்யும் மராத்தி படத்தின் ரீ-ரெக்கார்டிங்கில் வாசித்தார். சமீபத்தில் வெளியான ஸ்நேகவீடு படத்தின் அத்தனை கிடார் பகுதிகளுமே சதா வாசித்ததுதான். இவர்கள் போக, ஷெனாய் பாலேஷ், ஃப்ளூட் நெப்போலியன், வயலின்ஸ்ட் ராமசுப்பு போன்ற அத்தனை பழைய கலைஞர்களுமே இன்றும் வாசித்து வருகிறார்கள்.

    இவர்கள் போக, புதிய கலைஞர்களான கர்நாடக சங்கீத வித்வான் எம்பார் கண்ணன், கர்நாடக சங்கீத மேதைகளில் ஒருவரான கணேஷ் (கணேஷ்-குமரேஷ் புகழ்) போன்ற புதிய பெரும் இசைக்கலைஞர்களும் வாசித்துவருகிறார்கள். நாட்டுப்புற இசைக்கலைஞர்களான கணியான்கூத்து கலைஞர்களை படித்துறை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

    இப்படிப்பட்ட அவதூறுகளை உண்மை போல் அடித்துச் சொல்லும் தினகர் என்ற நபரின் கருத்துகளை நம்பித்தான் சந்திரமோகன் இந்தக் கட்டுரையை எழுதினார் என்றால்... பாவம் சந்திரமோகன்.

    ReplyDelete
  18. Very impressive writing about Isaignani...and I am also expecting more great music like symphony(when it will release..??)from our Maestro...Thanks for your nice sharing...Chandru...

    ReplyDelete