Friday, April 8, 2011

கிரிக்கெட்: நினைவில் பறக்கும் பந்துகள்


உலகக்கோப்பையை இந்தியா வென்ற நாளின் கொண்டாட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. அன்று எனது அறைநண்பர் டாக்டர். மணிகண்டனுக்கு பிறந்த நாள். எங்கள் குல வழக்கப்படி ஒவ்வொரு சனிக்கிழமையின் இரவை கொண்டாட்டமாய் அனுபவிப்பது ஒரு சடங்கு போல் மாறிவிட்டது. மணிகண்டனுக்கு புதன்கிழமை தான் பிறந்த நாள். எனினும் எங்கள் சட்ட நிபுணர்கள் கலந்தாலோசித்து அதை சனிக்கிழமை இரவு நாள்மாற்றம் செய்து விட்டார்கள். முநிர்காவில் தமிழர்கள் அதிகம். அதிலும் நான் தங்கியிருக்கும் கட்டிடத்தில் மட்டும் பதினைந்து தமிழ் நண்பர்கள். வெளியிலிருந்து வந்து செல்லும் நண்பர்களை கணக்கிட்டால் தொகை முப்பதை தொடும். அனைவரும் ஒரு சேர ஒரே அறையிலிருந்து சத்தம்போட்டபடி கீழ்வீட்டு காரர்கள் கூரை அவர்கள் தலை மீது விழுந்துவிடும் போல் 'தொம் தொம்மென்று' குதித்துக்கொண்டு மேட்சை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவின் ஒரே அமைதிப்புறாவான ராம் அடிக்கடி 'தடப் தப்பென்று' அமர்ந்திருப்பவர்களின் தலை கால் என்று எல்ல பாகங்களின் மீதும் கால்வைத்து தாவியபடி முன்னேறி டி.வி முன் நின்று இலங்கை வீரர்கள் (குறிப்பாக மலிங்கா!) ஐ பார்த்து 'யார்ரா நீ ..யார்ரா நீ ..' என்று சாத்வீக முறைப்படி கேட்டு சலம்பிக்கொண்டிருந்தான். வெற்றி நிச்சயம் என்ற போதே வெடி சத்தம் வெளியில் கிளம்பி விட்டது. தோனி பந்தை எல்லைக்கு அப்பால் அடித்து மட்டையை சுழற்றியதும் இந்தியா..இந்தியா என்று திடீர் தேசப்பற்று தொற்றிக்கொள்ள உற்சாகம் கரைபுரண்டு ஓடத்துவங்கியது. எத்தனை சந்தோஷம் அன்று இந்தியர்கள் முகங்களில்!

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பிறந்த பெரும்பாலோருக்கு இந்த விளையாட்டு பால்ய நாட்களின் பிரிதகற்ற முடியாத நினைவுகளை தந்து தானிருக்கிறது. பள்ளி நாட்களில் எங்கள் அறந்தாங்கி ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு என்ற நாமம் கொண்டு Atonomous Body அளவுக்கு தனி சுதந்திரம் பெற்று திகழ்ந்த கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில் நாங்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாட தொடங்குவோம். பந்து ஜன்னல் வழியாக வந்து விழாத வீடுகள் எனக்கு தெரிந்தவரை இல்லை என்றே சொல்வேன். அரசு ஊழியர் குடியிருப்பு என்பதால் மூடாத சாக்கடைகள் அதிகம். அங்கு விழும் பந்துகளை எந்த கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க்குழாயில் கழுவி டவுசரில் அழுந்த துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை கொலைவெறியுடன் பெற்றோர் பெருமக்கள் 'கவனிதுக்கொண்டிருப்பர்கள்'. இது தவிர சாலை வழியாக செல்லும் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பயந்து பயந்து எங்கள் 'பிட்சை' கடப்பார்கள். "சீக்கிரம் போங்க அண்ணே" என்று சிரித்தபடி சொல்லும் எங்கள் நன்னப்பா கடப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் " போடா டேய் சட்டிதலையா " என்று பொறுமை இழந்துவிடுவான். ரோட்டின் நடுவில் ஒரு முனையில் செங்கல்லை ஸ்டெம்ப் போல் அடுக்கி எதிர்முனையில் இருந்து எறியப்படும் பந்துகள் அவர்கள் முதுகிலோ மண்டையிலோ பட்டால் சங்கம் பொறுப்பேற்காது என்று அவர்களுக்கு தெரியும். பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடுக்கவே முடியாத இடங்களில் பந்து சென்று விழும் வரை எங்கள் அப்பழுக்கற்ற கிரிக்கெட் தொடரும்.

விடுமுறை நாட்களில் வருகை புரியும் பையன்களின் எண்ணிக்கையை பொறுத்து இருப்பவர்களை இரு பிரிவாகவோ அல்லது இருப்பதிலேயே சாதுவான பையனை குனியவைத்து அவன் முதுகுக்கு மேல் விரல்களை காட்டி எந்த நம்பர் வரும்போது அவன் யாரை கை காட்டுகிறானோ அதே வரிசைக்கிரமதிலோ விளையாட துவங்க்வோம். கடைசி நம்பர் பையன் பந்து வீசுவான். முதலாமவனுக்கு மட்டை பிடிக்கும் பாக்கியம் கிடைக்கும். பத்தே பத்து கட்டிடங்கள் கொண்ட அந்த சின்ன பிரதேசத்துக்குள் மட்டும் நாங்கள் ஐந்து விளையாட்டு 'மைதானங்களை' பராமரித்து வந்தோம். பம்ப்ரூம் தேவசங்கர் வீட்டு ஜன்னலுக்கு கீழ் நிறைய இடம் இருப்பதால் அந்த சுவற்றில் மூன்று கோடுகளை கரிக்கட்டையில் வரைந்து அதற்கு பத்து தப்படிகள் எதிர்முனையில் ஒரு செங்கல்லை அடையாளத்துக்கு வைத்துவிட்டு (ரன்னர் எண்ட்!) விளையாடுவோம். எங்கள் குழுவின் ஆஸ்தான Off Spinner ஜெகதீஷ் பாபு பெருமுயற்சியுடன் வீசும் சில பந்துகள் அதீத சுழற்சிக்குட்பட்டு சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே சென்று அங்கு இருக்கும் தட்டில் பட்டு மறுபடியும் சுழன்று கரண்டிகள் மாட்டியிருக்கும் ஸ்டாண்டை கிளீன் போல்டாக்கி கீழே விழும்போது நாங்கள் அவரவர் வீடுகளில் சாவகாசமாய் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்போம். அந்த இடத்தில் ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டி நிகழ்ந்ததற்கான தடயமே இருக்காது. அதே போல் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக வளர்ந்திருந்த இரு மரங்களின் இடைவெளியை பிட்சாக்கி ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்துக்கு (அதில் ஸ்டெம்ப் செதுக்கப்பட்டிருக்கும் !) எறிந்து விளையாடுவோம். மேல் நோக்கி அடிக்கபப்டும் பந்துகள் சில சமயம் மரங்களில் மாட்டிக்கொள்ள பீல்டிங் அணியினர் அந்த மரத்தின் கிளைகளைப்பிடித்து உலுக்கி அதகளம் பண்ணி பந்து கீழே விழும்போது பச்சக்கென்று பிடித்துவிடுவார்கள். அதுவரை இப்போதைய 'Review' முடிவு கேட்டு காத்திருக்கும் மட்டையாளர்கள் போல் பரிதவிப்புடன் மேல் நோக்கி பார்த்தபடி நின்றிருப்பார்கள். சில சமயம் பந்து நியூட்டனாவது ஒன்றாவது என்று அலட்சியமாக மாட்டிய திசைக்கு நேரெதிர் திசையில் வேறொரு கிளையிலிருந்து படக்கென கீழே தரையில் விழுந்து விடும். அப்போது களிப்பில் மட்டையாளன் கிரண் மோரேயை கிண்டல் செய்யும் ஜாவிட் மியாண்டட் போல் தவ்விக்குதிப்பான்.

மொகாலி போன்ற ஒரு முக்கிய 'மைதானம்' இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் இருந்தது. அதன் இடைவெளி சற்று அதிகம். எனவே பெரிய போட்டிகள் அங்கு தான் நடத்தப்பட்டன. அந்த மைதானத்தில் ரெண்டு சிக்கல்கள். ஒன்று லெக் சைடில் சற்று தள்ளி இருந்த ஹவுசிங் போர்டுக்கு தண்ணீர் சப்ளைக்கு முக்கியமான கிணறு. இன்னொன்று விக்கெட் கீப்பருக்கு பின்னால் இருந்த என் சக மாணவி கவிதா வசித்த வீட்டின் பால்கனி. பெரும்பாலும் அந்த பால்கனியில் அவள் பாட்டி அமர்ந்திருப்பாள்.எழுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும் அந்த பாட்டிக்கு. லெக் சைடில் தூக்கி அடிக்கப்படும் பந்துகள் அந்த கிணற்றில் போய் விழுந்துவிடும். எனவே அந்த கிணற்றில் விழும்படி அடித்தவன் அவுட் என்று அறிவிக்கப்படும். கிணற்றை தாண்டி தான் முருகேசன் வீடு. அவன் வீட்டு காம்பவுண்டை தொட்டால் Four! ஒருவேளை சிக்சர் அடித்தால்? பந்தே திரும்பவராது. முருகேசன் அம்மாவுக்கு இந்த 'கிரிக்கெட் எழவெல்லாம்' ஆகவே ஆகாது. எடுக்கப்போனவன் அர்ச்சனைகளுக்கு ஆளாக நேரும் என்பதால் ஆட்டம் பாதியில் முடிந்து விடும். அல்லது அடுத்த பந்து கிடைத்த பின்பு தொடரும். அந்த கிணற்றில் விழுந்த பந்தை யார் எடுப்பது? அது நல்ல பெரிய கிணறு. அதன் உட்புற சுவற்றில் பெரிய பாறைகள் சற்று இடைவெளியில் அமைக்கப்பட்டு படிகளாக கீழிறங்கும். கிணற்றில் ஒரு ஆமை ஒன்று இருக்கும். அவ்வப்போது அது படிகளில் படுத்து ஓய்வெடுக்கும். ஹவுசிங் போர்ட் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் என்பதால் எங்களில் யாரும் இறங்க மாட்டோம். பக்கத்துக்கு தெருவில் இருந்து வரும் செந்தில் தான் அதை எடுப்பான். படிகளில் அனாயாசமாக இறங்கி கையில் ஒரு நீண்ட கம்பொன்றை வைத்து தண்ணீரின் மேற்பரப்பை அடித்து அடித்து பந்தை தன்னருகில் வரவைத்து எடுத்துவிடுவான். அதை ஒரு சாகசம் போல் பார்த்துக்கொண்டிருப்போம். அவனுக்கு நீச்சல் தெரியும் தான் என்றாலும் அவனை பந்தை எடுக்க நாங்கள் பயன்படுத்திக்கொண்டது இன்னும் ஒரு குற்றவுணர்வாக எங்கள் நினைவுகளில் படிந்திருக்கிறது. இந்த சாகசத்துக்கு பரிசாக சில சலுகைகள் அவனுக்கு கிடைத்தன. ஒப்பனிங் ஓவர் அவன் தான் போடுவான். அவன் சேட்டன் ஷர்மாவின் தீவிர ரசிகன். ஆனால் பந்து வீசுமுறை பேட்ரிக் பேட்டர்சன் (நினைவிருக்கிறதா?) போல் தான் இருக்கும். அவன் போடும் பந்துகள் பேட்ஸ்மேனின் தொப்பியை கழற்றி விட்டு ஒரு முறை பூமியில் பட்டு எழுந்து கவிதா வீட்டு பலகணி வழியாக வீட்டு வரவேற்பறைக்குள் சென்று விடும். ஒருமுறை டி.வி.யில் கிரிக்கெட் ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது போல. எங்கள் சேட்டன் வீசிய பந்து அவர்கள் வீட்டு டி.வியில் பட்டு கீழே விழ, கவிதாவின் பாட்டி பந்து டி.வி.குள்ளிருந்து தான் வெளியே வந்து விட்டது என்று பயந்து அலறி சத்தமிட , 'சங்கம் ஒடனே' கலைக்கப்பட்டு அவனவன் அடுத்த தெருக்களில் தென்பட்ட திசைகளில் ஓடிக்கொண்டிருந்தான்.

அணியின் முக்கிய வீரர்கள் என்றால் நாகராஜ் , அவன் தம்பி தேனிமலை, யோகானந்த் அவன் தம்பி கௌதமன்.. நான் என் தம்பி சிவா என்று ஸ்டீவ் - மார்க் வாவ் சகோதரர்கள் போல் எக்கச்சக்கமாய் இருந்தோம். எனவே எங்கள் டீம் A மற்றும் B என இரு அணிகளாக பிரிக்கப்பட்டது. எங்கள் டீம் பிரசத்தி பெற்றது என்று சொன்னேனே! உண்மையில் சில மேட்சுகளில் ஜெயித்திருந்தாலும் பல மேட்சுகளில் மண்ணைக்கவ்விக்கொண்டு வரும் சிறப்பணி அது. எனவே உள்ளூரில் டோர்னமென்ட் நடத்துபவர்கள் தங்கள் சொந்த அணிக்கு எதிராக லீக் மேட்சுகளில் விளையாட எங்களை தான் அழைப்பார்கள். அப்போது தானே அவர்களால் அடுத்த சுற்றுக்கு போக முடியும். ஒரு முறை நாங்களே டோர்னமென்ட் நடத்த வேண்டும் என்று அரந்தாங்கியின் புகழ்பெற்ற அரசியல்வாதி திருநாவுக்கரசுவிடம் சென்று நிதி வாங்கி போட்டி நடத்தினோம்.அப்போது தான் முதன் முறையாக கிரிக்கெட் பால் வாங்கி விளையாடினோம். அதுவரை ரப்பர் அல்லது டென்னிஸ் பந்துகள் தான். கிரிக்கெட் பால் என்பதால் 'பாதுகாப்புக்கு' அப்டமன் கார்டு , ஹெல்மெட் என்று அமர்க்களப்படுத்தியது இன்னும் நினைவிருக்கிறது. சில சமயம் B டீமில் இருந்து சிலரை சேர்த்துக்கொண்டு நாங்கள் எதிர்கொண்ட மேட்சுகளில் தம்பிகள் அணி தளராமல் விளையாடி ஜெயிக்க வைத்தது மறக்க முடியாதது. சிவா , கௌதமன் , தேனிமலை போன்றோர் எதிரணியின் மலிங்கா மண்டையர்கள் கொலைவெறியோடு வீசும் அதிவேக பந்துகளை எதிர்கொண்டு தரையோடு தரையாக படுத்தபடி பேட்டிங்கில் பின்னியெடுத்து பிழைக்க வைத்தார்கள்.

நாங்கள் விளையாட வெளியிலிருந்து கிடைத்த தொந்தரவுகளை விட அணியின் 'நெஹ்ராக்கள்' பண்ணிய சேட்டைகள் மறக்க முடியாதவை. நாகராஜிடம் சொந்தமான பேட் ஒட்ன்று இருந்தது. அவன் தான் அதை அப்படி அழைத்தானே ஒழிய அது எங்களை பொறுத்தவரை ஆப்பை(அகப்பை) தான். அதை பிடித்துக்கொண்டு அவன் பேட்டிங் செய்தான் என்றால் ஷெர்லக் ஹோம்ஸ் வந்தாலும் ஸ்டெம்ப் இருக்குமிடத்தை கண்டு பிடிக்க முடியாது. எனவே நாகராஜை அவுட் செய்வதென்பது வேர்ல்ட் கப்பில் ஹாட்ரிக் எடுப்பது போல் பெரும் சாதனை தான். அதையும் மீறி பந்து ஸ்டெம்ப் (சுவற்றில் வரையப்பட்ட கரிக்கோடுகள்) மீது மிக துல்லியமாக பட்டாலும் அவன் ஒத்துக்கொள்ளவே மாட்டான். துக்க நாளன்று துலாபாரம் படம் பார்த்தவன் போல் கண்ணீர் அருவியாக ஓட அழுது புலம்பிவிடுவான். பந்து அவன் தலைக்கு மேல் பத்தடி உயரத்தில் பறந்து சுவற்றில் பட்டதாக சொல்லி அவன் நடத்தும் 'சீரியலை' சகிக்காமலேயே நாட் -அவுட் என்று அறிவித்து நொந்து போய் விளையாடுவோம். அதே போல் நன்னப்பன் பேட்டிங் செய்து விட்டு பில்டிங் செய்ய லாங் ஆனுக்கு அனுப்பினால் சில பல நிமிடங்களில் காணாமல் போய் விடுவான். அங்கு தான் அவன் வீடு இருக்கிறது. அவனை அவன் குகையிலேயே சந்தித்து திரும்ப கொண்டு வருவது என்பது இயலாத காரியம். அவன் அம்மா ' கொதிக்கிற வெயில்லே அவனை ஏண்டா விளையாட கூப்புடுறீங்க.. போங்கடா ' என்று விரட்டி விடுவார். 'அவன் இவ்வளவு நேரம் பேட்டிங் செய்தான் அம்மா .. பீல்டிங் செய்யும் முறை வரும்போது இப்படி வீட்டுக்குள் புகுந்து வரமறுப்பது தர்மமாகுமா?' என்று நெடுநேரம் கெஞ்சி அவனை திரும்ப பெறுவதற்குள் மாலை மங்கி விடும். சண்முகவேல் என்றொரு நண்பன் இருந்தான். பெரிய தலைக்கு கீழ் காற்றிலாடும் சட்டையும் தொங்கும் கால்சட்டையும் தான் இருக்கும். அவ்வளவு ஒல்லியாக இருப்பான். ஆனால் காற்றோடு காற்றாக அவன் ஓடிவந்து வீசும் பந்துகள் உய்ரதரமானவை. அறந்தாங்கியின் பெரிய கிரிக்கெட் வீரர்களே அவனை பாராட்டி பேசுவார்கள். அவர்களோடு சேர்ந்து விளையாடவும் செய்தான், சில மேட்சுகளில்.

எப்போதும் ஆச்சர்யங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் குறைச்சலில்லாத கிரிக்கெட் இடையில் சூதாட்டம் -மேட்ச் பிக்சிங் என்று மலிந்து விட அதன் மீதான ஈர்ப்பு சற்று குறைந்தது என்னவோ உண்மை தான். நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சவால் விட்டுக்கொண்டு விரல் நகங்களை பல்லுக்கு கொடுத்து பார்த்த பல மேட்சுகள் அரங்கேற்றப்பட்டவை என்ற தகவல்கள் வந்த பின்பு நான் கிரிக்கெட் அவ்வளவாக பார்ப்பதில்லை. சமீப காலமாக குதிரை ஏலம் போல் வீரர்களை விலைக்கு வாங்கி , பணம் கொழித்தவர்கள் நடத்திக்கொள்ளும் ஐ. பி. எல் போட்டிகள் ஏனோ என்னை கவரவில்லை. எனவே சில ஆண்டுகளாக அணியில் யார் விளையாடுகிறார்கள் என்றெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இந்த உலகக்கோப்பையில் முதற்கட்ட மேட்ச் ஒன்றை பார்க்கும்போது டி.வி.யில் கோட் போட்ட படி பிட்சின் நடுவில் நின்று பேசிக்கொண்டிருந்த கங்குலியை பார்த்ததும் ' ஏன்டா தம்பிகளா ..நம்ம தாதா என்ன கோட் போட்டு நிக்கிறான்.. ஒபெனிங் அவன் இல்லையா ? " என்று கேட்டு தொலைத்துவிட்டேன். சற்று நேரம் அமைதி நிலவியது. திரும்பி நம் தமிழ் நண்பர்களின் முகங்களை பார்த்தேன். பல முகங்களில் பளீரென்று எரிந்து கொண்டிருந்தது ... ரத்த வெறி!!

13 comments:

  1. சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள் சந்திரமோகன். நானும் கடந்து ஐந்து வருடமாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. (ஆமாம். இந்த உலககோப்பை அணியில் கபில்தேவ் ஏன் இல்லை?) :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி சுரேஷ்..அந்த காலத்தில் எனக்கு பிடித்த விளையாட்டு வீரர்களில் 'இயான் போதம்' மறக்க முடியாதவர். நிறைய எழுதலாம்..ஹ்ம்ம் ..எல்லாம் அந்த காலம்.!
    ஆமா கபில் தேவ் டீம்லே இல்லையாம்.. விடுங்க ஐ.பி.எல் லே ஆடாமலா இருக்க போறார்?!

    ReplyDelete
  3. கிரிக்கெட் சுத்தமா பிடிக்காத, பார்க்காத எனக்கும் பிடித்திருக்கு இந்த சுவாரசியமான நடை!!!! இளமை கோலங்கள்!

    ReplyDelete
  4. நல்ல நடையில் சுவாரசியம் எங்குமே குறையாமல் எழுதப்பட்டு இருக்கிறது இந்த கட்டுரை. பாராட்டுகள் மோகன்.

    ReplyDelete
  5. @ஜீவா சார்
    @வெங்கட் மிக்க நன்றி...இளம்பிராயத்து நினைவுகள் தரும் சுகமே அலாதி தானே! அது தான் சுவாரசியத்துக்கு காரணம்

    ReplyDelete
  6. Good one boss. Relived my younger days.

    Saravanan

    ReplyDelete
  7. பால்யகால கிரிக்கெட்: இன்றும் கூட இந்தியா வென்றுவிட்டது என்று சொன்னால் நான் அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்று சற்று சிரிப்பேன். மற்றபடி எனக்கு லியண்டர் பீஸ், மஹேஷ் பூபதி, சானியா மிர்ஸா, அபினவ் பிண்ட்ரா, சமீப குத்துச்சண்டை வீரர்கள் வென்றால் கிடைக்கும் மகிழ்ச்சி/புல்லரிப்பு கிரிக்கெட் வீரர்கள் பெயரில் கிடைப்பதில்லை.ஏனென்று யோசித்தபோது கிடைத்ததிந்த நதிமூலம். நான் அப்போது St. Xaviers High School, Tuticorin ல் படித்துக் கொண்டிருந்தேன். 1979-80. அங்கு football team, volleyball team, strong basket ball team எல்லாம் இருந்தது எனக்குத் தெரியும். Even Navy, NCC, NSS, etc. க்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அந்த அந்த வாத்தியார்கள் அலைவதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். Cricket Team பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சூசை மாணிக்கம், என் தமிழ் வாத்தியார், முதல் வகுப்பு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். 1 மணிநேரம் சென்றிருக்கும். வகுப்பறை வாசலில் நின்று உட்புறமும் வெளிப்புறமும் பார்த்தபடி பாடம் எடுத்துக்கொண்டிருந்தவர், அய்யா, எல்லாரும் சத்தமின்றி எட்டிபாருங்கள் என்றார். பார்த்தோம். எங்களது சரித்திர வாத்தியார், பெயர் சொன்னால் உங்களுக்கு விஷயம் புரிந்துவிடும், ஒரு கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்தபடி தலை குனிந்தபடி ஸ்கூல் சுவரையொட்டி நடந்தபடி உள்ளேவர, அவர் பின்னே சுமார் 10 மாணவர்கள் தலை குனிந்தபடி வந்துகொண்டிருந்தனர். அத்தனை மாணவர்களூம் சின்னவர்களாக, நன்றாக டெரிகாட்டன் சட்டை டவுசர் போட்டவர்களாக இருந்தனர் (அப்போது தான் டெரிகாட்டன் துணிகள் தூத்துக்குடிக்கு வந்திருந்தன. பாலியெஸ்டர் வரவில்லை) மட்டை, பந்து, பேட் என்று ஒவ்வொருவரும் ஏதேதோ தூக்கியபடி, ஒரு போலித்தனமான துக்கத்துடன் சுவர் ஓரமாக நடந்து ஸ்கூலுக்குள் நுழைந்தனர். ’நேற்றைக்கே தோத்திட்டாங்கடா. காலைலே வந்திருக்கலாம். என்னமோ விளையாண்டு களைச்சமாதிரி இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்கான்வ. வாங்கிட்டுப்போன துட்டை கொஞ்சமாவது செலவு பண்ணனும்னு உடிப்பி ஹொட்டல்லெ காலைலே சாப்பிட்டு வந்திருக்கான்வ (உடுப்பி ஹோட்டல் ஸ்கூல் வாசல்லெ இருந்தது)என்றவர் சட்டென்று கோபத்துடன் நேராக அந்த சரித்திர வாத்தியாரை சுட்டியபடி (எங்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில்) ஐயா, உன்னைத்தான் கேட்கேன், ஜேம்ஸ், விக்டர், ஜெரொம், கிரியெல்லாம் பாத்தா உனக்கு எப்படித் தோணுது? (இவர்களெல்லாம் என் சக மாணவர்கள். அப்போதே 5 அடிக்கு மேலிருப்பார்கள்) விளையாடமாட்டங்கனான்னா. போய்யா, போ. பேட் உயரம்கூட இல்லை இந்த சிறுசுகள் தான் கிடைச்சதா என்று புலம்பியபடி பாடம் நடத்த ஆரம்பித்தார். சுமார் 3 வருடமாக அந்த சரித்திர வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுத்திருக்கின்றார். ஒருமுறை கூட cricket என்ற வார்த்தை அவரது வாயிலிருந்து வந்ததில்லை. உயரமான மாணவனை வேறு யாரும் கொத்துமுன் கொத்திக்கொள்ளும் Basketball Master மாதிரியோ, கிட்டத்தட்ட 50 மாணவர்களை மாறி மாறி விளையாடவிட்டு 5 மாணவர்களை வாலிபாலுக்குத் தேர்ந்தெடுக்கும் PT Master Xavier மாதிரியோ இல்லை. மற்ற எல்லா விளையாட்டும் PT Masters கையிலிருக்க, இவர் எப்படி இந்த விளையாட்டை மட்டும் கையிலெடுத்துக்கொண்டார் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று. அதுவும் சர்வ வல்லமையுடன், கிரிஸ்தவ பாதிரிகள் ஆட்சி செய்யும், சேவியர்ஸ் ஸ்கூலில்.

    அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய கிரிக்கெட் டீம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டின் புனிதத்தைக் காப்பற்றுவது அதைவிட முக்கியமானது என்று.

    இருக்கலாம். ஆனால் என்னால் அந்த நினைப்பைக் கழற்றிவுட்டு அந்த ஒரு விளையாட்டை மட்டும் பார்க்க முடியவில்லை.

    செல்வக்குமார்/தூத்துக்குடி.

    ReplyDelete
  8. சுவாரஸ்யமான பதிவு

    ReplyDelete
  9. இனிய நண்பா,

    அற்புதமான கட்டுரை, எளிமையான நடை……

    சென்னை - 600002 படம் பார்த்தபோது நமது அணியின் நினைவுகள் நெஞ்சிலாடியது, நாமும் அப்படிதான், யாரிடம் வீழ்வோம், யாரை வெல்வோம் யாருக்கும் புரியாத புதிர்.... வலுவான அணியை வீழ்த்துவோம் எளிதான அணியிடம் வீழ்வோம்....

    பால்யம் உற்சாகத்தை அள்ளி தரும் அட்சய பாத்திரம்...அள்ளி தந்த உனக்கு நன்றிகள் பல....அணி தலைவரை பற்றியும் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் மகிழ்ந்துருப்பேன்... ஹா ஹா ஹா........

    உன்னுடன் பகிர்ந்து இன்னும் நிறைய இருக்கிறது... நேரம்தான் இல்லை ....நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்

    என்றும் நட்புடன்
    சேக்

    ReplyDelete
  10. இனிய நண்பா,

    அற்புதமான கட்டுரை, எளிமையான நடை……

    சென்னை - 600002 படம் பார்த்தபோது நமது அணியின் நினைவுகள் நெஞ்சிலாடியது, நாமும் அப்படிதான், யாரிடம் வீழ்வோம், யாரை வெல்வோம் யாருக்கும் புரியாத புதிர்.... வலுவான அணியை வீழ்த்துவோம் எளிதான அணியிடம் வீழ்வோம்....

    பால்யம் உற்சாகத்தை அள்ளி தரும் அட்சய பாத்திரம்...அள்ளி தந்த உனக்கு நன்றிகள் பல....அணி தலைவரை பற்றியும் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் மகிழ்ந்துருப்பேன்... ஹா ஹா ஹா........

    உன்னுடன் பகிர்ந்து இன்னும் நிறைய இருக்கிறது... நேரம்தான் இல்லை ....நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்

    என்றும் நட்புடன்
    சேக்

    ReplyDelete
  11. இனிய நண்பா,

    அற்புதமான கட்டுரை, எளிமையான நடை……

    சென்னை - 600002 படம் பார்த்தபோது நமது அணியின் நினைவுகள் நெஞ்சிலாடியது, நாமும் அப்படிதான், யாரிடம் வீழ்வோம், யாரை வெல்வோம் யாருக்கும் புரியாத புதிர்.... வலுவான அணியை வீழ்த்துவோம் எளிதான அணியிடம் வீழ்வோம்....

    பால்யம் உற்சாகத்தை அள்ளி தரும் அட்சய பாத்திரம்...அள்ளி தந்த உனக்கு நன்றிகள் பல....அணி தலைவரை பற்றியும் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் மகிழ்ந்துருப்பேன்... ஹா ஹா ஹா........

    உன்னுடன் பகிர்ந்து இன்னும் நிறைய இருக்கிறது... நேரம்தான் இல்லை ....நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்

    என்றும் நட்புடன்
    சேக்

    ReplyDelete
  12. இதை விட சிறப்பாக அறந்தை HBCC அணியை பற்றி எழுத முடியாது. A,B & C ன்னு மூன்று ஆணிகள் இருந்தது. மூன்றாவது அணியில் கூட என்னால் விளையாட முடியவில்லை. அவ்வளவு பசங்க இருந்தோம். இதை படிக்கும் போது 10 வருட ஹவுசிங் போர்டு கிரிக்கெட் வாழ்க்கை படமாக கண்களில் விருந்தளிகிறது. நன்றி அண்ணே.

    ReplyDelete
  13. I know each one. It's true.

    ReplyDelete