ஒவ்வொரு இரவும் ராஜாவின் ஏதாவொரு பாடலோடும் 'தேரே பினா ஜிந்தகி மே கோயி' போன்ற மனதை உருக்கும் ஹிந்தி பாடலோடும் தான் உறங்க செல்வேன். அதுவும் ராஜாவும் வைரமுத்துவும் தவமிருந்து செய்த பல பாடல்களை கேட்கும்போது மனம் இசையாலும் வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கும். அவர்கள் இருவரும் இணைவது சாத்தியமே இல்லை என்று விட்ட பிறகு அந்த பாடல்கள் இன்னும் முக்கியத்துவம் பெற்றுவிடும். தமிழ் சினிமா இசையின் முக்கிய கவிஞரான வைரமுத்துவை அகில இந்திய வானொலியின் 'திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்' சார்பாக நான் நேர்காணல் செய்த அனுபவம் மறக்க முடியாதது.
தனது புத்தக அறிமுக நிகழ்ச்சிக்காக டெல்லி தமிழ் சங்கம் வந்திருந்த அவரை முதல் நாள் காலை தமிழ் நாடு இல்லத்தில் சந்தித்தேன். என்னை தன காரில் அழைத்து சென்று எனக்கு உற்சாகமூட்டினார் அகில இந்திய வானொலியை சேர்ந்த குருமூர்த்தி. நேர்காணல் சிறப்பாக அமைய சில நுணுக்கங்களை எனக்கு சொல்லி கொண்டே வந்தார்.
முதல் தடவை சென்றபோது கவிஞர் சற்று பிஸியாக இருந்தார். 'நாளை காலையில் பார்க்கலாமே ' என்றார் மிடுக்குடன். அவர் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு சின்ன புத்தகத்தை தந்தார். அது எனக்கு தேவைப்படவில்லை என்றாலும் வாங்கிக்கொண்டேன். அவர் எழுதிய சினிமா பாடல்கள் மீதான மதிப்பு அவரின் தனி தொகுதிகள் மீது இல்லை என்றாலும் அவற்றை படிக்காமல் யாரும் எண்பதுகளை கடந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
எண்பதுகளின் மத்தியில் முடிவுக்கு வந்த ராஜா-வைரமுத்து சகாப்தம் இன்றுவரை யாராலும் கடக்க முடியாத ஒரு தொலைவாகவே தோன்றுகிறது.
எத்தனையோ பாடல்களை சொல்லலாம். நடுவில் ராஜா அவரை தவிர்த்து விட்ட பிறகு , ரஹ்மான் வருவதுற்கு முன்பு வரை வைரமுத்து தாக்கு பிடித்திருந்ததற்கு அவரது உண்மையான கவித்துவம் தான் காரணம் என்று நினைக்கிறேன். ரஹ்மான் இசையில் நல்ல பாடல்களை தர கவிஞர் தவறவில்லை.
இடைப்பட்ட காலத்தில் அவர் தனது தனி கவிதை தொகுப்புகள் நிறைய கொண்டுவந்தார். சரியான விமர்சகப்பார்வையில் அவை சற்று கீழிறங்கும் என்றாலும் அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கண்டிப்பாக உதவியாய் இருந்தன எனலாம். அப்போது வந்த தெலுங்கு டப்பிங் படங்களுக்கு பாடல்களும் , வசனமும் எழுதிகொண்டிருந்தார் கவிஞர். காரணம் எதுவாய் இருந்தாலும் ராஜா செய்த தவறு இது என்பேன் நான். ஏனெனில் அந்த தவறு ஒரு நல்ல சினிமா கவிஞனை ராஜாவின் மனம் தொடும் இசையில் கேட்டு ரசித்த ரசிகர்களை வெறுமையில் ஆழ்த்தியது. அதற்கு பிறகு ஒருவரை ஒருவர் இல்லாமல் தனிப்பட்ட முறையில் இருவரும் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த வெறுமை இன்னும் நிரப்பப்படாமல் தான் இருக்கிறது. நேரில் அவரை முதன் முதலாய் பார்க்கும்போதே நேர்காணல் எனும்போது மிகவும்சந்தோஷப்பட்டேன்.
அவர் அறிமுகம் செய்யவிருந்த புத்தகம் குமுதம் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் தந்திருந்த பதில்களின் தொகுப்பு. அவற்றை முன்பே குமுதத்தில் படித்திருந்ததால் அது பற்றிய பிரதான கேள்விகளை தயாரித்துக்கொண்டு அவரை சந்தித்தேன்.
வெள்ளை குர்தா, பைஜாமாவில் முகத்தில் பளீரிடும் சிரிப்புடனும் சற்று ஏகாந்தமான கண்களோடும் கவிஞர் வரவேற்பறையில் அமர்ந்தார். முதல் நாள் இருந்த உற்சாகம் இப்பொழுது பதட்டமாக மாறியிருந்தது. எனது குரலின் பலவீனத்தை என்னால் உணர முடிந்தது. ஆனாலும் கேள்விகளை தொடர்ந்தேன். எந்த ஒரு கேள்வியையும் உள்வாங்கி விரிவாக பதில் சொல்லும் அவர் திறனை மனதுக்குள் வியந்தேன். 'நேனோ டெக்னாலஜி' பற்றி ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு அவர் சொல்லியிருந்த பதில் எனக்கு பிடித்திருந்தது. அதை வைத்து முதல் கேள்வியை துவங்கினேன். கவிஞர் உற்சாகமாகி விட்டார். அது என்னையும் தொற்றியது. நிறைய கேள்விகள். அழகான பதில்கள்.
திடீரென்று ஒரு கேள்வியை வீசினேன். "நீங்கள் எழுதிய பாடல்களை இசையோடு கேட்கும் ரசிகனுக்கு மனதில் காட்சிகள் அற்புதமாய் விரிகின்றன. ஆனால் அவை படமாக்கப்படும் போது அவை எங்கேயோ தொலைந்து விடுகின்றன. ஒரு படைப்பாளியாக உங்கள் கவிதை வரிகள் படமாக்கப்படுவதில் உங்களுக்கு திருப்தி இருக்கிறதா? " கவிஞர் என்னை நிமிர்ந்து பார்த்தார். சற்று நிதானித்து விட்டு " இது ஒரு நல்ல கேள்வி உங்களுக்கு. தர்மசங்கடமான கேள்வி எனக்கு " என்று வெடித்து சிரித்தார். தன பாடல் வரிகள் காட்சியமைப்புகளில்வீணாக்கபடுவதில் அவருக்குள் இருந்த வருத்தம் எனக்கு துல்லியமாக தெரிந்தது. ராஜாவின் பல பாடல்களுக்கும் நிகழ்ந்த துயரம் இது. ராஜாவின் ஒற்றை வயலின் உயிரை அறுக்கும் இசைக்கு கதாநாயகியின் இடுப்பு நெளிந்து கொண்டிருக்கும். "இருந்தாலும் நான் நினைத்ததை விட சிறப்பாக படமாக்கப்பட்ட பாடல்களில் எனக்கு பிடித்தவை 'ஆயிரம் தாமரை மொட்டுகளே',' உயிரே உயிரே (பாம்பே) ' போன்ற பாடல்கள் .." என்றார்.
தொடர்ந்து என் மனதுள் பல வருடமாய் சுழன்று கொண்டிருக்கும் ஒரு கேள்வியை கேட்டேன். " நீங்களும் இளையராஜாவும் இணைந்து செய்த பல பாடல்கள் மறக்க முடியாதவை ..மீண்டும் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? " கவிஞர் சற்று நிதானமாய் யோசித்து விட்டு சொன்னார்.
"காலம் தான் பதில் சொல்ல வேண்டும் " .
அந்த காலத்திற்காக காத்திருக்கிறோம் நாம், நம்பிக்கை குறைவுதான் என்றாலும்.