Thursday, January 23, 2014

யங் அண்ட் பியூட்டிஃபுல் - இச்சை உலகில் இயங்கும் மனம்



இளம் வயதினரின் மனதுக்குள் ஆயிரம் கனவுகள் உண்டு. ஆனாலும் சமூகம், கலாச்சாரம் போன்ற கனமான விழுமியங்களின் போர்வைக்குள் இயங்கும் உலகம் அவர்களுக்கான சுதந்திரத்தை அத்தனை எளிதாக அளித்துவிடுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு அது கடுமையாக மறுக்கப்படுகிறது. எனினும் துணிச்சலுடன் அந்த போர்வையை விலக்கிவிட்டு தன்னிஷ்டம் போல் சுதந்திரமாக நடக்க முயலும் பெண்கள் உண்டு. ஆனால் அந்த சுதந்திரத்தைத் தவறாகக் கையாள முடிவு செய்தால் விளைவும் விபரீதமானதாகவே அமைகிறது.
பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஸூவா ஓஸோன் இயக்கியுள்ள ‘யங் அண்ட்பியூட்டிஃபுல்’ திரைப்படம் இது குறித்து பிரச்சார மொழியின்றிப் பேசுகிறது.
குடும்ப அமைப்பில் இருந்துகொண்டே சட்டம் மற்றும் சமூகத்தின் பார்வையில் குற்றம் என கருதப்படும் பாலியல் தொழிலில் இறங்குகிறாள் ஒரு இளம்பெண். பதின்ம வயதைப் பூர்த்தி செய்யாத அந்தப் பெண்ணின் இந்த செயலும், பொருளாதாரத் தேவைக்காகவோ, கட்டாயத்துக்காகவோ அன்றி சுய விருப்பத்தைச் சார்ந்தது என்பது தான் பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியூட்டும் விதமாக அமைகிறது. வீட்டுக்கும், கல்லூரிக்கும் தெரியாமல் இணையம் மூலம் வாடிக்கையாளர்களின் தொடர்பைப் பெற்று பாலியல் தொழிலைத் தொடர்கிறாள் அப்பெண். தனது பெயரை மாற்றி லியா என்ற புனைப்பெயருடன் (அது அவளது பாட்டியின் பெயர்) அவள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள். எதிர்பாராத விதமாக அவளது முதிய வாடிக்கையாளர் ஒருவர் உடலுறவின்போது மாரடைப்பால் மரணமடைகிறார். அங்கிருந்து பதட்டத்துடன் வெளியேறி விடுகிறாள் லியா. கசியும் புகையை கூடை போட்டு மூட முயல்வதுபோல் அந்த ரகசியம் அவளைத் துரத்துகிறது. அந்த பயங்கரத்தின் நிழல் அவளது வீடுவரை தொடர்கிறது.
போலீஸ் நடந்த உண்மைகளை அவளது தாயிடம் சொல்கிறது. மொத்தக் குடும்பமும் அதிர்வுக்குள்ளாகிறது. இளம் பெண் என்பதால் கவுன்சிலிங் தந்து அவளை அந்தப்பாதையிலிருந்து திசைதிருப்ப முயல்கின்றனர். இளம் வயது ஆணுடன் பழகவும் அவள் அனுமதிக்கப்படுகிறாள். எனினும், பாலியல் துணையில் மாற்றம் தேவைப்படும் அப்பெண் மீண்டும் பாலியல் தொழிலைத் தொடர முடிவு செய்கிறாள். மறைத்து வைத்திருந்த தனது சிம் கார்டை எடுத்து போனில் பொருத்தியவுடன் வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்திகள் வரிசையாக வந்து விழுகின்றன. ஒரு வாடிக்கையாளரை முடிவு செய்து ஒரு ஆடம்பர ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருக்கிறாள். அவளது முதிய வாடிக்கையாளர் இறந்தது அந்த ஹோட்டலின் ஒரு அறையில்தான்.
அங்கு வந்துசேரும் வாடிக்கையாளர் ஒரு பெண். வயதானவள். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அமைதியாக இருக்கிறாள் லியா. தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் அந்த முதிய பெண். இறந்த மனிதரின் மனைவி அவள். தனது கணவர் கடைசியாக உடலுறவு கொண்ட பெண்ணை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில் தனது கணவன் தன்னைத் தவிர வேறு பெண்களை நாடிவந்த விஷயம் தெரிந்தும் ஒரு கட்டத்தில் அதை ஜீரணித்துகொண்ட பெண் அவள். இருவரின் சந்திப்பு லியாவின் மனதில் என்னவோ ஒரு வலியைத் தருகிறது. படம் நிறைவடைகிறது.
குழந்தைகளுக்குத் தனி அறை, ஆண் - பெண் நண்பர்களுடன் தங்கள் பிள்ளைகளை இரவு நேரங்களிலும் வெளியில் அனுப்பும் இயல்பு என்று வாழும் மேற்கத்தியப் பெற்றோரும் தங்கள் குழந்தை பெரிய தவறுகள் செய்து பிரச்சினையில் உழலும்போது அதிர்ச்சியடைகின்றனர். தனது இளமைக் காலத்தில் பல காதல்கள் என்று கட்டற்ற சுதந்திரத்துடன் வளர்ந்த லியாவின் தாய் தனது மகளின் விபரீதமான இரட்டை வாழ்வு குறித்து அதிர்ச்சியடைந்தாலும், அவளை மாற்ற ஆக்கப்பூர்வமாக முயல்கிறாள். படம் அதீதமான பாலியல் இச்சை, தவறான குடும்ப உறவுகள், பெற்றோர்களின் போதிய கவனிப்பின்மையால் வழிதவறும் குழந்தைகள் என்று பல விஷயங்களைப் பேசினாலும் இது தவறு இது சரியென்று நியாயவாதம் பேசவில்லை.
எத்தனை பிரயத்தனங்களுக்குப் பிறகும் தனது மனம் விரும்பும் பாலியல் உறவை லியா நாடிச்செல்வது, அவளது மனநிலையில் பதிவாகிவிட்ட இச்சையால்தான் என்றாலும் தன் வயதையொத்த இளைஞர்களைவிட அதிக வயது கொண்ட முதியவர்களிடம் தான் அவள் தன்னை இழக்க ஒப்புக்கொள்கிறாள். இறந்துபோன ஜார்ஜஸ் பற்றி பெண் போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்லும் லியா ஒன்றைக் குறிப்பிடுகிறாள். “ஜார்ஜஸ் இனிமையான மனிதர். என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்”. குடும்ப உறவின் சிக்கல்கள் இளம் மனதில் ஏற்படுத்தும் வடு, வேறொரு தவறைத் தூண்டும் காரணியாக அமைகிறது என்ற விஷயம் பூடகமாகச் சொல்லப்படுகிறது.
கான் திரைப்பட விழாவில், பால்மே டி’ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம், உலகமெங்கும் விமர்சகர்களின் ஏகோபித்தப் பாராட்டைப் பெற்றுள்ளது.

'தி இந்து' இதழில் வெளியான கட்டுரை 

Tuesday, January 21, 2014

மண் மணக்கும் புன்னகை மொழி

- வெ.சந்திரமோகன்




’என்னை புதுக்கோட்ட பார்ட்டியில கூப்புட்டாக..காரக்குடி பார்ட்டியில கூப்புட்டாக.. எல்லாத்தையும் விட்டுட்டு என் கெரகம் இந்தக் கரகாட்டக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ங்’ என்று கன்னத்தில் கைவத்து கேட்டுக்கொண்டிருக்கும் கவுண்டமணியிடம் கோவை சரளா சலித்துக்கொள்ளும் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.  மண் வாசம் வீசும் மொழியுடன் அசல் நாட்டுப்புறக் கலைஞரைக் கண்முன் கொண்டு வந்த அந்தப்பாத்திரம் வெற்றி பெற மிக முக்கியக் காரணம் வட்டார மொழிதான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, பொதுவான பேச்சுமொழியில் நாயகனும் நாயகியும் பேசுவது வழக்கமாகிவிட்ட நிலையில், வட்டார வழக்கு என்ற விஷயத்தை அதிக அளவில் இன்றும் கையாள்வது நகைச்சுவை நடிகர்கள் தான். பொதுவான கிராமம் அல்லது நகரம் என்றே கதை நடக்கும் பகுதியை சித்தரிக்கும் தமிழ் சினிமாவில், நகைச்சுவைக் கலைஞர்களின் தனித்திறனால் தான்   வெவ்வேறுப் பகுதிகளில் பேசப்படும் வட்டார மொழிகள் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கின்றன என்றும் சொல்லலாம்.

தொடக்கத்தில் தமிழ்சினிமாவில் ஒரே படத்தில் பல மொழிகள் பேசப்பட்ட வழக்கம் இருந்தது. நாயகனும் நாயகியும் தெலுங்கில் பேச, துணை நடிகர்கள் ஹிந்தியில் பேச நகைச்சுவை நடிகர்கள் மட்டும் தமிழில் பேசிய படங்கள் உண்டு. தமிழ் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவான்களான என்.எஸ்.கிருஷ்ணன் முதல் நாகேஷ் வரை பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மொழிக்குரல் என்ற தனித்துவம் பெரிதாகக் கையாளப்படவில்லை என்றே சொல்லலாம். அப்போது மன்னர் காலத்துக் கதை அல்லது சமூகக்கதை என்ற பாகுபாடு இருந்ததே தவிர, மதுரையில் நடக்கும் கதை அல்லது திருநெல்வேலியில் நடக்கும் கதை என்றெல்லாம் பிரத்யேகமான இடங்களை மையப்படுத்தும் படங்கள் அவ்வளவாக வரவில்லை. ’பட்டணம்’ என்றால் அது சென்னை. கிராமம் என்றால் அது பூஞ்சோலை தான். எனினும், நகைச்சுவை நடிகர்களோ துணை நடிகர்களோ சென்னையின் பிரத்யேக மொழியான ‘மெட்றாஸ் பாஷை’ பேசுவதை அவ்வப்போது பார்க்க முடியும். விளிம்புநிலை மனிதர்கள் பிராமணர்கள் பேசும் பாணியில் பேசியதும் தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் நடந்தது.

60-களின் இறுதிகளில் வெளியான படங்களில் தேங்காய் சீனிவாசன், சுருளி போன்ற நடிகர்கள் சென்னைத் தமிழை சற்று சிரமப்பட்டுப் பேசி நடித்தனர். ஜெய்சங்கர் நடித்த ‘சி.ஐ.டி. சங்கர்’ படத்தில் அலுவலகத்தில் பொதுமொழியில் பேசும் தேங்காய் சீனிவாசன், நகைச்சுவை நாயகி நடத்தும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடப் போகும்போது சென்னைத் தமிழில் பேசுவார். ’காசேதான் கடவுளடா’ படத்தில் சென்னை குப்பம் பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான அவர் முத்துராமன், ஸ்ரீகாந்த் போடும் திட்டப்படி  சாமியார் போல வேடமிட்டு மனோரமா வீட்டில் தங்குவார். பக்தர்களுக்கு அட்டகாசமாக அருள்மொழி வழங்கினாலும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ‘மெட்றாஸ் பாஷை’ ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும். பிறமொழி பேசுபவர்களாக துணை நகைச்சுவை நடிகர்கள் நடித்த  படங்கள் இன்று வரை வெளியாகின்றன. மலையாள சாயலுடன் தமிழ் பேசும் டீக்கடை நாயர்கள், தலையில் குல்லா, தங்க ஜரிகை, ஜிப்பா சகிதம் ‘நம்பள்கி பணத்த எப்போ திருப்பித் தரப்போறான்?’ என்று கேட்கும் ஈட்டிக்கார சேட்டுகள் போன்ற பாத்திரங்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளிலேயே பயன்படுத்தப்பட்டனர்.

முதன்முறையாக தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குரலாக சத்தமாக ஒலித்தது கவுண்டமணியிடமிருந்து என்றே சொல்லலாம். நாடகப் பின்புலம் கொண்ட கவுண்டமணி, திரைப்படங்களில் பிறர் போல பொதுமொழியில் பேசாமல் தான் சார்ந்த கொங்கு நாட்டுப் பகுதியில் பேசப்படும் பாணியில் பேசியதாலேயே தனித்து அறியப்பட்டார்.   கிராமப் பின்னணி கொண்ட திரைப்படங்கள் என்றாலும் பொதுவான மொழி பேசும் பாத்திரங்கள் என்பதால் அவரது கொங்கு மொழி தொடக்ககாலப் படங்களில் தனித்துவம் பெறவில்லை. அதேசமயம், வித்தியாசமான முறையில் எதிராளியை (பெரும்பாலும் செந்தில்!) கிண்டல் செய்வதன் மூலம் அவரது நகைச்சுவைக்கு ஒரு பிரத்யேக பாணி அமைந்திருந்தது. 


கோவையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைப் பின்னணியாகக் கொண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தாள்’ கவுண்டமணிக்கு  பெரிய வாய்ப்பாக அமைந்தது. படத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டு வீடுகள் கொங்குப் பகுதியைக் கண்முன் கொண்டுவர,  சைக்கிள் கடை வைத்திருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாக வரும் கவுண்டமணி பேசும் வசனங்கள் கொங்கு மண்ணின் அசல் மணத்தை ரசிகர்களுக்குத் தந்தன. ”அழகுராஜா ஒரு வல்லவரு..அவர் ஒரு .....நல்லவரு..அப்பிடீன்னு ஊருக்குள்ள இருக்கிற அம்மிணி அக்காகிட்டேயெல்லாம் போய் சொல்லோணும்” என்று செந்திலுக்கு அன்புக் கட்டளையிடும் காட்சியில் கொங்குப் பகுதியின் குறும்பு அழகாக வெளிப்படும். பின்னர் நகர்ப்புற பின்னணி கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் கவுண்டமணி பேசும் பாணியில் பெரிய மாற்றமிருக்கவில்லை. அவரது குரலும் பேசும் முறையும் அவரது அடையாளங்களாகவே மாறின. 

90-களின் தொடக்கத்தில் கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கதைகளுடன் தமிழுக்கு அறிமுகமான கே.எஸ்.ரவிகுமாரின் படங்களில் கவுண்டமணி பேசும் கொங்குமொழி இன்னும் பொருத்தமானதாக அமைந்தது. பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை போன்ற இடங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட ’சேரன் - பாண்டியன்’ திரைப்படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதற்கு முன்னர், மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கதை என்றபோதிலும் கவுண்டமணி கொங்கு மொழியில் தான் பேசுவார். ‘சேரன் - பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ரவிகுமார் இயக்கிய ‘நாட்டாமை’ படத்தில் கவுண்டமணியின் கொங்கு மொழி அற்புதமாக வெளிப்பட்டது. தனது தாய் யாரென்று தெரியாமல் சொல்லாமல் மறைத்துவைத்து இளம்பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் தனது தந்தை (செந்தில்) மீது கொலைவெறியுடன் அலையும் கவுண்டமணி கடைசியில் தனது தாயைக் கண்டுகொள்வார். அம்மா வேடத்தில் வரும் கவுண்டமணி ”யேங்கோ.. நம்ம ரெண்டுபேருக்கும் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?” என்று கேட்கும் காட்சியில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘திருமதி பழனிச்சாமி’ படமும் கொங்கு பாஷையில் கவுண்டமணி பேசிய முக்கியமான படம். இதுபோன்ற பல படங்களில் அவரது நடிப்பு சிறக்க அவரது மொழி முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. 

அதேபோல கோவை சரளாவின் கொங்கு பாஷை பிரசித்திப் பெற்றது. கோவையில் பிறந்திருந்தாலும்  மலையாளம் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். எனினும் கவுண்டமணிக்கு இணையான கொங்குக் குரல் அவருடையது. இளம்வயதிலேயே வயதான வேடங்களில் நடித்துவந்த சரளாவுக்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ ஒரு பெரிய திறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கவுண்டமணி சொல்லும் யோசனையை சென் தவறாகப் புரிந்துகொண்டு அவரது மனைவி கோவை சரளாவிடம் மல்லிகைபூ வாங்கித் தரும் காட்சி உச்சகட்ட நகைச்சுவை. செந்திலை துடைப்பத்தால் வெளுத்துக்கொண்டே கவுண்டமணியிடம் சரளா சொல்வார் “இவெங் கூட சகவாசம் வச்சதுக்கு ஒங்களத்தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோணும்”. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமல் நடித்த ‘சதிலீலாவதி’ படத்தில் அவரது மனைவியாக நடித்தது கோவை சரளாவின் வாழ்நாள் சாதனை. அதற்கு அவரது கொங்கு மொழி தான் காரணமாக அமைந்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தினார் சரளா. தனது கணவனின் தவறான உறவு குறித்து கமல்-சரளா தம்பதியிடம் புகார் சொல்லும் கல்பனாவைக் கமல் சமாதானப்படுத்தும் காட்சி ஒன்றைச் சொல்லலாம். “ஒரு ஆம்புளைக்கி இதுவா அதுவான்னு சாய்ஸ் கொடுக்கக் கூடாது. ரெண்டையும் பொறுக்கிப்புடுவானுங்க” என்று கமல் சொல்லும்போது ”கண்டிசனா செஞ்சிப்போடுவானுங்கோ..கெரகம் புடிச்சவனுங்கோ” என்று ஒரு அறச்சீற்றக் குரல் கொடுப்பார் சரளா. கமலுக்கு சப்தநாடியும் அடங்கிவிடும். 

நகைச்சுவை உலகில் கவுண்டமணிக்குப் பின்னர் கவனம் ஈர்த்த முக்கியக் குரல் மதுரையிலிருந்து ஒலித்தது. வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு மதுரை மண்ணின் மணத்தை திரை ரசிகர்களுக்கு அசலாகத் தந்தார். “யேப்பா..எங்க ஏரியா பக்கம் வம்பு சொல்றது?” “ஆத்தீ..விட்டாக் கொல பண்ணிடுவாய்ங்க போலருக்கே!” என்று மதுரை கிராமப் பகுதிகளில் சலம்பித் திரியும் இளைஞர்களின் பிரதிநிதியாக தமிழ்சினிமாவுக்குள் வடிவேலு நுழைந்தார். உள்ளுக்குள் உதறெடுத்தாலும் எதிராளியை வம்புக்கிழுக்கும் குறும்பு நிறைந்த பாத்திரங்கள் அவரது அடையாளமாக மாறின. ராஜ்கிரணின் கண்டுபிடிப்பு என்றாலும் அவரது முதல் வெற்றி பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ தான். அதில், சைக்கிளில் தன்னை இடித்துவிட்டு செல்லும் உள்ளூர் ரவுடி சற்று தொலைவுக்கு சென்று விட்ட தைரியத்தில் வடிவேலு தனது மிரட்டலைத் தொடங்குவார். “ஏண்ணே..பாத்துப் போனா என்னண்ணே?”. ரவுடி இன்னும் தொலைவு சென்ற பின்னர் ”பெல்லடிச்சி பிரேக் புடிச்சி போனா கொறஞ்சா போய்டுவ?” என்று குரல் கொடுப்பார். பின்னர் தைரியம் உச்சமடைந்த நிலையில், “ஜெயில் பறவை டா நாங்க!” என்று குரலை உயர்த்தி எச்சரிப்பார். ரவுடி சைக்கிளை நிறுத்தி திரும்பி ‘ஆயுதத்தை’ எடுத்த பின்னர் உடலெங்கும் உதறிப்பதற நடுங்கிக்கொண்டே வடிவேலு சொல்வார்” இந்த மம்பட்டியக் கூட நீங்களே வச்சிக்குங்க. நா எப்புடி ஓடுறேங்கிறத மட்டும் பாருங்க”. அந்த காட்சி அவரைப் பெரிய அளவில் அடையாளப்படுத்தியது . அதுவரை அத்தனை அசலான மதுரை வட்டார மொழியைத் திரையுலகம் கண்டதில்லை. 
கவுண்டமணி எல்லா படங்களிலும் கொங்கு பாஷை பேசியது போலவே, வடிவேலுவும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கதைக் களமாகக் கொண்ட படங்களிலும் மதுரை பாஷை தான் பேசினார். பொதுவாகவே கிராமங்களில் பேசும் மொழி கொச்சையானதாக இருக்கும் என்ற பொதுக்கருத்து கொண்ட ரசிகர்கள்,   வட்டார வழக்குகள் குறித்து அதீத கவனம் செலுத்தத் தேவையில்லை என்று பெருந்தன்மையாக விட்டுவிடுவதால் இது சாத்தியமாயிற்று என்று சொல்லலாம். வடிவேலுவின் உடல்மொழி பற்றிப் பேசுவதென்றால் அதற்கு இக்கட்டுரையில் இடமிருக்காது. தமிழுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியக் கலைஞர் அவர். அவருக்குப் பின்னர் கஞ்சா கருப்பு, ’பரோட்டா’ சூரி போன்ற நடிகர்களிடம் மதுரை வட்டார வழக்கு காணப்படுகிறது.  எனினும், வடிவேலு அளவுக்கு அவர்கள் மொழியில் பெரிய ஈர்ப்பு இல்லை.

சென்னையில் பரவலாகப் பேசப்படும் ’மெட்றாஸ் பாஷை’ தமிழ் சினிமாவில் பலமாக ஒலிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் லூஸ் மோகன். ‘இன்னாம்மா.. எத்க்கு என்னாண்ட ராங்கு காட்டுற. அப்பால பேஜாரா பூடும் பாத்துக்க..” என்று கண்ணைச் சுருக்கிக் கொண்டு நின்ற இடத்திலிருந்தே உடலை உயர்த்தி விஸ்வரூபம் காட்டும் குடிகாரப் போக்கிரி பாத்திரங்கள் என்றால் நம் கண்முன் வருவது அவர் தான். அதேசமயம், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் போன்ற ’அரசுப்பணிகளும்’ தமிழ் சினிமாவில் அவருக்குக் கிடைத்தன. பிரதான நகைச்சுவை நடிகர்களின் துணை நடிகராகவே வாய்ப்புகள் அமைந்தாலும் தனது பிரத்யேக மொழி பலத்தின் மூலம் அவருக்கு தனி இடம் கிடைத்தது. ’சட்டம் என் கையில்’ படத்தில் சென்னை குப்பத்து இளைஞர் வேடத்தில் நடித்த கமல்ஹாஸன் லூஸ்மோகனிடம் சென்னை தமிழ் கற்றார் என்ற செய்தி இன்றும் சினிமாவுலகில் நிலவுகிறது. ’படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ் பேசும் ”தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..” என்ற புகழ்பெற்ற வசனமும் சென்னைத் தமிழ் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணம். 
நெல்லைத் தமிழைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்கும் இறுதியில் ‘லே’ போட்டால் போதும் எனும் அளவுக்குத் தான் தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. மணி ரத்னம் இயக்கும் படங்களில் நெல்லைத் தமிழ் ஸ்பஷ்டமாக ஒலிக்கும். சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படம் நெல்லைத் தமிழை மிக மோசமான முறையில் கையாண்ட படம் எனலாம். நெல்லை வட்டார வழக்கு பேசும் நகைச்சுவை நடிகர்களில் நெல்லை சிவா முக்கியமானவர். ”எ.. கட்டபொம்மன் தினெவேலிக்காரன் தானே. அவென் நம்ம மாதிரி தானே பேசியிருப்பான்” என்றபடி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனங்களை நெல்லைத் தமிழில் பேசிக்காட்டும் காட்சி, தமிழ்சினிமாவில் பொதுமொழியை மட்டும் பயன்படுத்தும் படைப்பாளிகளை யோசிக்க வைத்திருக்கும்.

மதுரை வட்டார வழக்கைப் பயன்படுத்தி வடிவேலு பேசிய வசனங்கள் பிற்பாடு தமிழ் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறின. ‘வந்துட்டா(ன்)யா...வந்துட்டான்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம்(!) கொஞ்சம் வீக்கு’ போன்ற சொல்லாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் தாக்கம் தந்தவை. ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற கவுண்டமணியின் பொன்மொழி இந்திய அரசியல் குறித்த நுட்பமான கிண்டல். பொதுவாக நாயக நடிகர்கள் பேசும் ’பஞ்ச்’ வசனங்களை அந்தந்த படங்களுடன் ரசிகர்கள் மறந்துவிடுகின்றனர். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதற்கான முக்கியக் காரணம் அவர்கள் மக்களின் மொழியில் பேசுவது தானன்றி வேறென்ன!
-'தி இந்து' பொங்கல் மலரில் வெளியான கட்டுரை.

Friday, January 10, 2014

கலையின்மீது குவியும் மன வெளிச்சம்

இன்று மாலை மயிலாப்பூருக்கு வேறெதோ வேலைக்காக சென்றபோது கபாலீஸ்வரர் கோயில் பக்கம் போகலாமே என்று தோன்றியது. உள்ளே மஞ்சள் விளக்கொளியில் கடவுளர்களின் சந்நிதிக்கு முன்னால் சின்ன சின்ன கூட்டம். அதிக கூட்டமில்லாத கோயில்கள் தான் ஆன்மாவுக்கு மிக நெருக்கமானவை. ஒவ்வொரு பிரகாரத்திலும் கொஞ்ச நேரம் நின்று நகர்ந்தபோது கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் இருந்து ஒரு குரல் தமிழில் பாடிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லாமல் நடைபாதையிலேயே நின்றுகொண்டு அதைக் கேட்க கேட்க மனம் லேசானது.  அந்தக் குரல் தந்த அமைதியுடன் உயர்த்திய பார்வையில் ஓங்கி நின்ற கோபுரம் பட்டது. மேகங்களற்ற மெல்லிய நீல நிற வானத்தின் பின்னணியில் கோபுரத்தில் உறைந்திருந்த சிற்பங்களின் அடர்த்தி மனதை அள்ளியது. 
கோயிலுக்குள் நுழைந்த போதே வலது புற மூலையில் சின்னதாக மேடை  அமைத்து அதில் சில இளம்பெண்கள்  பரதம் ஆடிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இப்போது அதை நோக்கி சென்றோம். ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடனக் கலைஞர் தனது அடுத்த நடனத்தின் பின்னணி பற்றி ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டிருந்தார். இங்கே எதற்கு  ஆங்கிலம் என்று லேசான எரிச்சல் வந்தது. அப்போது தான் கவனித்தேன். இந்திய உடைகளில் பத்து பதினைந்து வெளிநாட்டுப் பெண்கள் காலை மடக்கி கழுத்தை உயர்த்தி மேடை மீது பார்வையைப் பதித்துக் காத்திருந்தனர்.
நடனக் கலைஞரின் தலைமுடி  போலியானது என்று தெரிந்தது. பேசும் பாணியிலும்  உடல்மொழியிலும் பெண்மை மிளிர்ந்தது. பின்னர் அவர் மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினார். பின்னணியில் ஒருவர் ஜதி சொல்ல, அழகான குரலில் ஒரு பெண் பாடினார். வீணை, மிருதங்கத்துடன் அவ்வப்போது உடுக்கையும் ஒலித்தது. அதை வாசித்தவர் சங்கு மற்றும் மணி போன்ற ஒலிக்கருவிகளையும் இசைத்தார். நடனக் கலைஞர் நல்ல தேர்ச்சி பெற்றவர். சிவ நடனத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். இசையும், நடனமும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் தானாக உருக்கொண்டு வளர வளர அங்கே கலையின் ஆன்மா மேடையிலும் அதைச் சுற்றிலும் சூல்கொண்டது. நடனம் முடிவுபெறும் தருணம் யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் விளங்கியது. நடனக் கலைஞர் தனது கடைசி முத்திரையைக் காட்டியபடி நடனத்தை முடிக்கும் தருணத்தில் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் நடனக்கலைஞர் மேடையிறங்கினார்.
அடுத்து நான்கு இளம்பெண்கள் மேடைக்கு வந்தனர். கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும். அவர்களது நண்பர் குழாம் கையில் விலை உயர்ந்த கேமரா, புத்தக அளவிலான டேப்லேட்டுகளுடன் நடனத்தைப் பதிவு செய்துகொண்டும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆர்வ மிகுதியில் நண்பர் குழாம் பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பெண்மணி செல்லக் கண்டிப்புடன் கைகளை மேலும் கீழும் ஆட்டி அமைதியாக இருக்குமாறு புன்னகையுடன் சைகை காட்டினார். தலையாட்டியபடி மவுனமாக கவனிக்க ஆரம்பித்தனர் இளைஞர்கள். ஆடிய நால்வரில் ஒரு பெண்ணிடம் மட்டும் பாவம் சிறப்பாக வெளிப்பட்டது. பச்சை நிற பட்டு ஜொலிக்க புன்முறுவலான முகத்தில் பாவனைகள் மிளிர அழகாக ஆடினார். அதன் பின்னர் அந்த ஆண் நடனக் கலைஞர் சிவ-பார்வதியின் காஸ்மிக் நடனமான தாண்டவம் ஆடத் துவங்கினார். பார்வதியாக அனுபவம் வாய்ந்த ஒரு பெண்மணியும் ஆடினார். கூடவே கல்லூரி மாணவிகளும் ஆடினர். உடுக்கை ஒலிக்க உச்சபட்ச உத்வேகத்துடன் ஆடிய இருவரும் பார்வையாளர்களுக்கு கடவுளர் தம்பதிகளாகவே பட்டிருக்க வேண்டும். அவ்வப்போது கைதட்டல் எழுந்து அடங்கியது. அதன் பின்னரும் நடன நிகழ்ச்சி தொடர்ந்தது. எனினும் நிறைந்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினோம்.  
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த மேடையாக இருந்தாலும் கலைஞர்கள் அர்ப்பணிப்பான கலைவெளிப்பாட்டுடன் இயங்கினால் அந்தக் கலை  எத்தகைய பார்வையாளரையும் சென்றடையும், அதன் தாத்பரியம் தானே நிலைபெறும்  என்று நினைத்துக்கொண்டேன். மனிதர்களுக்கிடையில் கலை என்ற அம்சம் தோன்றியதன் நோக்கம் அது தானே!