Sunday, October 30, 2011

மீண்டு(ம்) வா ராஜா!


தொண்ணுத்தேழு என்று நினைக்கிறேன். விகடனில் ராஜாவை பற்றிய கட்டுரை வந்தது.ராஜா ரசிகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பிய அந்த கட்டுரையின் தலைப்பே ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று கடுமையாக இருந்தது. பல நேரடியான கேள்விகளைக்கொண்ட அந்த கட்டுரை எனக்கு அப்போது பெரும் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவ்வளவும் நியாயமான வாதங்கள். கோடம்பாக்கத்திலேயே பொழுதைக் கழிக்காமல் உலக அளவில் ராஜா பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அந்த கட்டுரை ராஜாவை கேட்டுக்கொண்டது. ரஹ்மானின் வருகையும் தன் மலிவுப்பதிப்பாக கோடம்பாக்கத்தில் வளர்ந்து வந்த தேவா போன்ற புதியவர்களின் வருகையும் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும் நிச்சயமாக ராஜாவை பாதித்திருக்க வேண்டும்.

விகடனின் மாணவப் பத்திரிக்கையாளர்கள் சிலர் ராஜாவை நேர்காணல் செய்தபோது ' தற்போது இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒருவரின் இசைப்பாணியே பின்பற்றப்படுகிறது..ஜனங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்று சொன்னார். அவதாரம் பாடலில் 'பாட்டுன்னு நெனப்பதேல்லாம் ..இங்கு பாட்டாக இருப்பதில்ல' என்ற வரிக்கு 'அது ஏம் பாட்டில்ல ' என்று அவசரமாக பதில் தருவார். ஆனால் உண்மையில் ராஜா தான் தன் இனிமை நிறைந்த இசைக்கோர்வைகளை நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு தர மறந்துவிட்டார். அதற்கு மிக முக்கியக் காரணம் அவரின் இசைப்பசிக்கு தீனி போட தகுந்த இயக்குனர்கள் இல்லாது போனது. பாரதிராஜா, பாலச்சந்தர்,மணிரத்னம் போன்ற தமிழ் சினிமாவின் மிக முக்கிய தலைகள் ராஜாவுக்கு மாற்றாக யாராவது கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருக்க ரஹ்மான் கிடைத்ததும் பிறகு ரஹ்மான் மிகப் பெரிய அளவில் வளர்ந்ததும் வரலாறு. ராஜாவுக்கு கிடைத்தவையோ உப்பு சப்பில்லாத படங்கள். அவரால் அதைத் தாண்டி எதுவும் புதுமையாய் செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமானப் படங்களே கிடைத்தன என்பதுவும் உண்மையே.

ராஜாவும் தன் பங்குக்கு தன் வழக்கமான பாணி இசையை முற்றிலும் தவிர்த்துவிட்டு விருப்பமில்லாமல் இசை அமைப்பது போல் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு உதாரணம் சொல்லலாம். பாலச்சந்தரின் சிந்துபைரவிக்கு கர்னாடக இசைப்பின்னணியில் இசை தந்திருந்தாலும் பட்டிதொட்டியெங்கும் கேட்கும்படியான, பாமர ரசிகர்களை சேரும் விதமான அதே சமயத்தில் தரத்தில் சமரசமில்லாத பாடல்களை தந்த ராஜா, பின்னாளில் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவல் படமாக்கப்பட்டபோது நல்ல பாடல்கள் தந்திருந்தாலும் அவற்றில் ராஜாவின் முத்திரை அறவே இல்லை.இன்றும் கர்நாடக இசை நன்கு தெரிந்த ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடல்கள் என்றபோதிலும் ராஜாவின் இசைச்சாரம் அதில் துளியும் இல்லை. இது போன்ற பல படங்கள்.பாடல்கள்.

தேவதை படத்தின் end credit title இசை மிக சிறப்பாக வந்திருப்பதாக விமர்சனத்தில் எழுதிய விகடன், படம் முடிந்தவுடன் எழுந்துசென்றுவிடாமல் ராஜாவின் அந்த டைட்டில் இசையைக் கேட்டுவிட்டு செல்லுமாறு எழுதியது. அதற்காகவே பலதடவை அந்தப் படத்தைப் பார்த்தேன். அற்புதமான இசை தந்திருந்தார். அப்போது சென்னையில் என் அண்ணன் வீட்டில் தாங்கி இருந்த நான் இந்த இசை ஆடியோ கேசட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு இரண்டு வெவ்வேறு கடைகளில் வாங்கி ஏமாந்தேன். கேசட்டில் குறிப்பிடப்பட்டும் அதில் அந்த இசை பதிவு செய்யப்படவில்லை. எனக்கோ பெருத்த ஏமாற்றம். அதற்கு முன்பே பல படங்களில் ராஜாவின் இசைக்காக என்றே சேகரிப்புக் காசுகளில் வாங்கிய கேசட்டுகள் எக்கச்சக்கமாய் ஏமாற்றி இருந்தன. ராசையா ,தேசியகீதம் போன்ற எத்தனையோ படங்களில் ராஜாவின் ஏமாற்றம் தரும் இசை கேட்டு வெறுத்துப் போனேன். ராஜாவின் இசைச்சுவடே அந்தப்பாடல்களில் பதியவில்லை. நிரவல் இசையில் இந்தியாவிலேயே சிறந்தவரான ராஜாவின் பிற்காலப் பாடல்களில் நிரவல் இசை என்னென்னவோ சத்தங்களால் நிரப்பபட்டிருந்தது பெரிய வருத்தம் தந்தது. என் எண்ணமெல்லாம் யார் என்ன செய்தால் என்ன.. ராஜா தன் மிகப் பெரும் பலமான அந்த ஆர்கெஸ்ட்ரேஷனை ஏன் கைவிட்டு சிந்தசைசரை மட்டும் நம்பத் தொடங்கினார் எனபது தான். என் நண்பர் ஒருவர் ராஜாவின் சம்பளம் மிக மிக குறைவு என்றும் அதனால் அவரது விருப்ப இசைக்கருவிகளான வயலின், செல்லோ போன்றவற்றை வாசிக்கும் பலருக்கு சம்பளம் தருவதில் சிக்கல்கள் இருப்பதால் எளிய முறையிலேயே இசை அமைக்கிறார் என்ற தகவலை சொன்னார். என்னால் அந்த தகவல் தந்த வருத்தத்தை தாங்க முடியவில்லை.

மேலும் எக்கச்சக்க சர்ச்சைகள் வேறு. தொன்னூத்தி ரெண்டில் லண்டன் ராயல் ஃபில்ஹார்மொனிக் குழு ராஜா எழுதிய சிம்பனியை லண்டனில் ரெகார்ட் செய்த போது தமிழகமே சந்தோஷத்தில் பூரித்தது.அதுவும் ரிலீசாகாமல் இருப்பது பற்றி இன்றும் யாராவது ஒருவராவது இணையத்தில் வருந்தி எழுதுவதை காண முடிகிறது. தொண்ணூறுகளின் மத்தியில் குமுதம் புதிய பாடலாசிரியர் தேர்வு என்று ஒரு போட்டி வைத்தது. ராஜாவின் ட்யூனுக்கு சிறந்த பாடல் வரிகளை எழுதுபவருக்கு தங்கப்பேனா பரிசளிக்கப்படும் என்றது அறிவிப்பு. அப்போது பிரஷாந்த் நடித்துக்கொண்டிருந்த 'ஜோக்கர்' என்ற படத்தில் அதே பாடல் உபயோகிப்படும் என்பதால் ராஜாவின் இசையில் பாடல் எழுத பலர் போட்டியிட்டனர்.முடிவில் எங்கள் ஊரை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஜெயித்து ராஜாவின் கையால் தங்கப்பேனா வாங்கினார். படம் மட்டும் வளரவே இல்லை. பிறகு கருணாநிதி அண்ணன் ராஜா சிம்பனி செய்ததற்கு நடந்த பாராட்டு விழா மலர் ஒன்றை எனக்கு படிக்கக் கொடுத்தார். அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தவிர மற்ற எல்லா தென் மாநில முதல்வர்களும் ஏன் கவர்னர்களும் கூட ராஜாவை வானளாவப் புகழ்ந்து வாழ்த்துக் கடிதம் எழுதி இருந்தார்கள். வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் பலரும் ராஜாவின் திறமையை வியந்து பாராட்டி இருந்தனர். ஆனால் மறைந்த சுப்புடு தவிர வேறு யாரும் ராஜாவின் சிம்பனியை இன்று வரை கேட்க முடியவில்லை.

அந்த இசையை கண்டக்ட் செய்த ஜான் ஸ்காட்டிடமே இது பற்றி ராஜா ரசிகர் இணையத்தில் கேட்டிருந்தார். விமர்சகர்களின் குருட்டுத்தனமான வார்த்தைகளுக்கு பயப்படாமல் ராஜா அதை ரிலீஸ் செய்யவேண்டும் என்பது தான் தனது ஆசையும் என்று பதில் தந்திருந்தார் ஸ்காட்.

இது போன்ற பல குறைகளுக்கு ராஜாவிடம் இருந்து பதில் வந்ததே இல்லை. மாறாக அவர் முன்பை விட அதிக உற்சாகத்துடன் மீடியா முன் வருகிறார். நிறைய நேர்காணல் தருகிறார். தன் இசைப்பதிவுகளை புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதிக்கிறார். ஹங்கேரி இசைக் கலைஞர்களை வைத்து மட்டும் பல படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அதில் முதல் படமான குரு (மலையாளம்) தவிர எந்தப் படத்தின் இசையும் சிறப்பாக அமையவில்லை என்பது தான் சோகம். நீண்ட நாட்களுக்குப் பின் 'பழசிராஜா' வில் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருந்தார்.ஒரே சந்தோஷம் தமிழ் தவிர ஏனைய மொழிகளில் கொஞ்சம் நல்ல இசையை தருகிறார். ஒரு மராத்தி மொழிப்படத்துக்கு இசை அமைக்கிறார். அந்த படத்தின் இயக்குனர் ராஜாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெறுவதைப் பார்க்கும்போது அவ்வளவுப் பெருமையாக இருந்தது. அதே போல் பங்கஜ் கபூர் நடிக்கும் ஹேப்பி படத்தின் ட்ரைலர் இசை உயிரை உருக்குகிறது. ஆனால் இதே போல் உயிரை உருக்கும் ட்ரைலர் இசை கொண்ட பா படத்தில் ஏனோ சிறந்த பின்னணி இசை அமையவில்லை. அதே போல் ஹங்கேரி இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை அமைத்த கமலின் ஹேராம் பின்னணி இசையில் மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற எங்கிலும் ராஜாவின் சிம்பனியைக் கேட்க முடியவில்லை. அதே போல் ராஜா இசை அமைத்ததாக நாம் நம்பிக்கொண்டிருந்த ஒரே ஆங்கிலப்படமான ரஜினி நடித்த ப்ளட் ஸ்டோன் படத்திலும் ஆங்கிலப் பதிப்பில் அவர் இசை இல்லை என்று நண்பர் தினா சொன்னார். ராஜாவின் பல மேற்கத்திய இசைக் கோர்வைகளைக் கேட்கும்போது நிச்சயம் அவர் இந்திய இசை உலகுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை என்று தோன்றும். அவர் இசை உலகின் மற்ற பாகங்களிலும் கேட்கவேண்டும் என்ற பேராசை இல்லாத ராஜா ரசிகன் உண்டா என்ன?

முன்பு கூட அதற்கான வாய்ப்புகளில் சிக்கல் இருந்திருக்கலாம். இப்போது எவ்வளவு வாய்ப்புகள் இருக்கும். அவரை தேடி வரும் வாய்ப்புகளை கூட மறுத்துவிடுகிறார் என்று கேள்விப்பட்டேன். திருவாசகம் போன்ற ஒரு எல்லை கொண்ட விஷயங்கள் தவிர உலகிலேயே இயற்கையை இசையாக மொழிபெயர்க்க தகுதியான ராஜா, இயற்கை சார்ந்த சிம்பனிகளை எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. வெளிநாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து நிறைய ஆல்பங்கள் செய்யலாம். ஆனால் ராஜா அவற்றில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஒரு நேர்காணலில் நீங்கள் மற்ற மொழிகளில் ஆல்பங்கள் செய்யலாமே என்று கேட்கப்பட்ட போது 'நீங்கள் எல்லாம் டவுன்லோட் செய்தே கேட்கிறீர்கள்' என்ற நேரடியாக கேட்டார். இணைய உலகில் அது நிஜம் தான் என்றாலும் மகத்தான இசைத் திறமையைக் கொண்ட ஒரு மாபெரும் இசைஅமைப்பாளர் இது போன்ற காரணங்களுக்காக தன் எல்லையை சுருக்கிக்கொள்வதா என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. அதே போல் கி.ராஜநாரயணன் தமிழின் வர்ணமெட்டுகளை ராஜா நிறைய எழுத வேண்டும் என்ற விருப்பத்தை முன்பு தினமணியில் எழுதி இருந்தார். ராஜா அவற்றை எல்லாம் எங்கே படிக்கப் போகிறார்.

சமீபத்தில் ராஜா ஒரு பிராட்வே நாடகம் ஒன்றுக்கு (Who's afraid of Virginia Woolf) இசை அமைத்தார். அது பற்றிய செய்தி படித்தவர்களுக்கு அது மிகப்பெரும் சந்தோஷத்தை தந்தது. ஆனால் அதிலும் ராஜா தன் முத்திரையை பதிக்கவில்லை என்று அதைப்பார்த்தவர்கள் எழுதுவதைப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. அவரது இசையில் உருவான பல படங்கள் இன்னும் ரிலீசாகாமலே இருக்கின்றன. பல படங்களுக்கு ஏனோதானோ என்று தான் இசை தருகிறார். அப்படி இருக்க அவர் சினிமாவை கொஞ்ச நாள் ஒதுக்கி விட்டு உலகளாவிய இசைப்பயணங்கள், உலக சினிமா- ஹாலிவுட் சினிமா போன்றவைகளுக்கு தன் இசைப்பங்களிப்பை தருதல், மேற்கத்திய இசை ஆல்பங்களுக்கு இசை அமைப்பது போன்ற விஷயங்களையும், நம் கிராமிய இசைக்கு சினிமாவில் புத்துணர்ச்சி தந்தவர் என்ற வகையில் நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்து கிராமிய கலைஞர்களுடன் இணைந்து ஆல்பங்கள் போன்றவற்றை செய்யலாமே. ராஜாவிடம் இன்னும் எதிர்பார்க்கும் ரசிகர்களை நான் இணையத்திலும் நேரிலும் நிறையப் பார்க்கிறேன். பலரும் அவரது இசை இன்னும் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தான் இருக்கிறார்கள்.

ஆனால் அவ்வப்போது ராஜாவிடம் எதிர்பார்த்து ஏமாறுகையில் அவரது பொற்காலமான எண்பதுகளின் இசைக்கோர்வைகள் அவர் மீதான பிரமிப்பை நொடிக்கு நொடி ஏற்றிக்கொண்டே தான் செல்கின்றன. ராஜா நிச்சயம் ஒரு மாயக்க்காரர் தான்.

எனவே தான் அவரிடம் இன்னும் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.