Monday, July 13, 2009

நிழல்களின் உலகம்

கரிய நிறத்தில் உங்கள் காலடியில்
தவழ்ந்து வரும் நிழலை
கவனித்ததுண்டா நீங்கள் ?

நீங்கள் நினைத்திருப்பதைப் போல்
நிழல்கள் வெறும் நிழல்களல்ல
பலர் நினைத்திருந்ததைப் போல்
இறந்தவர்களின் உயிர்களல்ல பேய்கள்
அவை இருப்பவர்களின் நிழல்கள்

பகல் முழுவதும்
உங்கள் ரொட்டி தின்ற நாய்போல்
உங்களைத் தொடர்ந்து அலையும் நிழல்கள்
உங்கள் இளைப்பாரலுக்குப்பின்
இருளில் அலைந்து திரிகின்றன
ரத்தம் குடிக்கும் பேய்களாய்.

என்னுடைய - உங்களின்
நண்பர்களின் - காதலிகளின் நிழல்கள்
ரகசியமாய் சந்தித்துக் கொள்கின்றன
ராத்திரிகளின் மெளனக் காட்டில்

அவை சந்திக்கும் இடங்களுக்கு
ஒருபோதும் சென்று விடாதீர்கள்
சங்கடமாய் இருக்கும்

உங்கள் சகோதரியின் நிழலுக்கு
நெருங்கிய நட்பு நிழல்
முத்தமிடுவதையும்
என் மனைவியின் நிழலுக்கு
முதிய நிழல் ஒன்று
முத்தமிடுவதையும்
நேரில் கண்டதால் சொல்கிறேன்
அவை பயங்கரமானவை
உடல்களுக்குத்தான் உடைகள்
நிழல்கள் என்றும் நிர்வாணமாய்த்
திரிகின்றன
இரவில் விளக்கொளிகளைக் கொன்று
இருளைக் குடித்து அலையும் நிழல்கள்
பகலில் உங்கள் காலடியில் பயத்துடன்
அலைகின்றன
பாலைவன இரவொன்றில்
நிலவின் கீழ் நெடுநேரம் நின்றிருந்தேன்
மரணம் என் கால்களை
மெளனமாய் பற்றுவதாய்ப் பட்டது
நீண்டு நெளிந்திருந்த என்
நிழலைப் பார்த்தேன்
யாதுமறியாக் குழந்தையின் பாவனையுடன்
சொட்டுச் சொட்டாய் என் உயிரை
உறிஞ்சத் தொடங்கியிருந்தது
அது.

--வெ. சந்திரமோகன்
( வடக்கு வாசல் ஆகஸ்ட் 2007 ல் வெளியான கவிதை )

Saturday, July 11, 2009

நெளியும் நிறக்கோடுகள்

சாத்தியப் புள்ளிகள்
ஏதுமற்ற
கோலங்களை
உன் வாசலில்
வரைகிறாய்.
நிறப்பிரிகை விரலிடுக்குகளின் வழி
கோடாகி நெளியும்
கோல நிறமிகளில்
அகச்சிவப்பு கதிர்கள்.
என் கண்களை ஊடுருவி பின்
அங்கேயே தங்கிவிடுகின்றன.
உன் கோலமயில்கள்
வான்கோழிகளாய் ஓடுகின்றன
என் பாலைவனங்களில்
உன் சித்திரமுயல்கள்
நாய்களை வேட்டையாடின.
பொங்கல் பானையில்
வெந்து கொதிக்கிறது
என் மாமிசம்.
நல்வரவுப் பெண்ணின்
நகங்கள் நீள்கின்றன
பேய் போல்.
ஒரு முறை நீ வரைந்திருந்த
மானொன்று
குடல் சரிய
குத்திக் கிழித்தது
என் வனம் புகுந்து.
உன் கோலக் கோடுகளில்
நெளியும் சர்ப்பங்களின்
தீண்டல்களில் நீலம் பூத்தது
என் நிழல்.

உன் தெருவைக் கடக்கவே
பயமாயிருக்கிறது.

---வெ.சந்திரமோகன்
பிப்ரவரி 2006
வடக்கு வாசல்

கவிதை

சுதந்திரத்தின்

முதல் காற்றை நுகர்ந்தபடி

பசித்தவனுக்கு

கனிகளை கொடுத்திருந்தேன்

தூவி பழக்கப்பட்டவன்

விதைகளை விட்டுச்சென்றான்

நிறைந்த கனிகளுடன்

கல்லடிகளை

வாங்கும்

என்னிடம்

உயிர்நீர் வேண்டி நிற்கின்றன

விதைகள்...

இன்னும் நிரம்பி

வழிகிறது

ஏவாளின்

அட்சய பாத்திரம்.

--- ஜே.எஸ். அனார்கலி

Friday, July 10, 2009

காலம்

காலம்
கண்கொட்டாமல்
பார்த்து கொண்டிருக்கிறது.
பகல் விழித்திருப்பது பற்றியோ
இரவு விழித்திருப்பது பற்றியோ
கவலை இல்லை அதற்கு
யுகயுகங்களாக
கணம் கணமாக
காலம்
கண்கொட்டாமல்
கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.
----ஜே. எஸ். அனார்கலி


கவிதை

நிகழ்வின் பிரதிஎதுமற்ற
சந்தோஷத்தில்
குன்டியாட்டியபடி
நடக்கிறார்கள்
மனிதர்கள்.

- வெ. சந்திரமோகன்