வடக்கு வாசல் மாத இதழில் தமிழ் சினிமாவின் 'பிரபலக் கலை' பற்றிய எனது கட்டுரை. இணையத்தில் அலசிக் காயப் போட்ட விஷயம் என்றாலும் பிரிண்ட் மீடியாவுக்கு இது போன்ற கட்டுரைகள் குறைவு என்பதால் இந்த கட்டுரையை எழுதினேன்.
அப்பாவி முகத்தோடு ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே 'தாலலே..தா லா லே' என்று பாடும் அந்த ஏழு நாட்கள் பாக்யராஜை அந்த ட்யூன் ஏற்கனவே 'ரூப் தேரா மஸ்தானா' என்று வந்து விட்டது என்று அம்பிகாவும் ஹாஜா ஷெரீபும் கிண்டல் செய்வார்கள். பாக்யராஜ் 'ஞான் கச்சேரி செய்கையில் ஒரு பாம்பேகாரன் வந்துட்டுண்டு. அவனாக்கும் என் பாட்டை ஹிந்தியிலே யூஸ் பண்ணிட்டது' என்று பதறுவார். தன் சொந்தப்படைப்பை வேறொருவர் கவர்ந்து புகழும் பெற்ற வருத்தம் தெரியும் அவர் முகத்தில்.நகைச்சுவைக்கு தான் என்றாலும் அந்த காட்சி சொல்லும் உண்மை மறுக்க முடியாதது .நாம் கேட்ட பாடல்கள், பார்த்து ரசித்த திரைப்படங்கள் எங்கோ யாராலோ உருவாக்கப்பட்டு வேறொருவரால் நகலெடுக்கப்பட்டது என்று அறியும்போது நமக்கு ஒருவித கசப்புணர்வும் சம்பத்தப்பட்ட கலைஞர்கள் மீதான மதிப்பு குறைவதும் நிகழ்கிறது. யாரோ ஒருவர் மண்டையை உடைத்துக்கொண்டு வெளிப்படுத்தும் படைப்பாற்றலை ஒருவர் குற்றவுணர்வே இல்லாமல் பிரதியெடுத்து பெரும் புகழும் பெறுவது கலையின் சாபக்கேடுகளில் ஒன்று. உலகெங்கும் இந்த பிரச்சனை ஆரம்பகாலம் தொட்டே இருந்து வருகிறது. மூலப் படைப்பாளியின் கவனத்துக்கு வந்து அவர் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் வரை இந்த கலைதிருடர்களுக்கு கவலையே இல்லை. அங்கிருந்து கொஞ்சம் இங்கிருந்து கொஞ்சம் எடுத்தாண்டு பாமர ரசிகர்களிடையில் மேதை என்ற பெயரை பெற்று வளமாக வாழ்கிறார்கள்.நாம் பார்த்து பிரமிக்கும் ஹாலிவுடும் கூட விதிவிலக்கில்லை என்றாலும்இந்திய சினிமாவில் இந்த போக்கு கொஞ்சம் அதீதமாகவே இருக்கிறது. இசை, கதை,காட்சிஅமைப்பு, திரைக்கதை தொடங்கி சிகையலங்காரம் உடல்மொழி இவற்றைக்கூட அப்பட்டமாக நகலெடுக்கும் கலைஞர்கள் இங்கு அதிகம். பலர் பேரும் விருதும் பெற்றவர்கள் என்பது தான் வேடிக்கை.
சில மாதங்களுக்கு முன் வெளியாகி தமிழகத்தில் கண்ணீர் வெள்ளம் பொங்க செய்த 'தெய்வ மகள்' ஷான் பென் நடித்த 'அயாம் ஸாம்' ( I am Sam) என்ற ஆங்கிலப்படத்தின் மலிவிலும் மலிவுப்பதிப்பு என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதே படம் ஹிந்தியிலும் அஜய் தேவ் கன் நடித்து Main Aisa Hi Hun என்று வந்தது..ஷான் பென்னின் சிகையலங்காரம் முதல் நடை உடை பாவனைகள் வரை டிவிடி பார்த்தே நகலெடுத்த நடிகர் விக்ரம் 'இதற்காக குழந்தைகளிடமே பழகி நடிப்பை மெருகேற்றிக்கொண்டேன்' என்று கூசாமல் சொன்னார். சக தமிழ் அறிவுஜீவி இயக்குனர்கள் வரிசையாக நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு படம் பார்த்து கண்ணீர் விட்டழுதேன் என்று மிகச் சிறந்த நடிப்பாற்றல் வெளிப்பட சேனல்களில் பேசினார்கள். அவரவர் எடுக்கும் நகல் படங்களை அடுத்தவர் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்ற ஒற்றுமையுணர்வு கொண்ட பெருந்தன்மை போலிருக்கிறது. இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். அகிரா குரோசோவின் Yojimbo திரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மறக்க முடியாத வெஸ்டெர்ன் க்ளாசிக்குகளில் ஒன்றான A Fistful of Dollars திரைப்பட தயாரிப்பாளர்கள் அகிரா குரோசாவுக்கு லாபத்தில் ஒரு பங்கை நகலெடுத்த குற்றத்துக்காக வழங்க வேண்டி வந்தது.படத்தின் வசனம் முதல் காட்சியமைப்பு வரை நகலெடுக்கப் பட்டதைக் கண்டு குரோசவா இப்படி எழுதினாராம் இயக்குனர் செர்ஜியோ லியோனிக்கு' படம் அருமையாக இருக்கிறது. ஆனால் இது என் படம்'.
இது போன்ற அறிவுத் திருட்டு செய்பவர்கள் அங்கும் உண்டு என்றாலும் அதற்கான தண்டனையை பெற்று விடுகிறார்கள். காலத்துக்கும் அந்த அவப்பெயர் தொடரத் தான் செய்கிறது. இங்கு அப்படி அல்ல. மிசஸ் டவுட்பயருக்கு மடிசார் கட்டி அவ்வை சண்முகியாக்கி புகழ்பெறும் கமல்ஹாசன் தான் சினிமாவில்சம்பாதித்த காசை சினிமாவிலேயே போடும் பெருந்தன்மைக் காரர் என்று புகழப்படுகிறார். ஆங்கிலப் படங்களை, காட்சி அமைப்பை நகலெடுத்த மணிரத்னம் இங்கு முக்கியமான இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் E.T The Extra-Terrestrial படத்தின் அடர்த்தியான சாயல்களை அஞ்சலியில் பார்க்கலாம்.காட்ஃபாதர் நாயகனான கதை பள்ளி மாணவர்களுக்கே தெரியும். விஷயம் என்னவென்றால் சம்பத்தப்பட்ட நகல் கலைஞர்கள் மூலப் படைப்பாளியின் பெயரை மறந்தும் எந்த இடத்திலும் உச்சரிக்கக் கூட மாட்டார்கள். அது சம்பந்தமான கேள்விகளை எப்படியும் தடுத்து விடுகிறார்கள். தேசிய விருது பெற்ற இளம் இயக்குனர் ஒருவரை நேர்காணல் செய்தபோது ஒரு இத்தாலியப் படத்தின் சாயல் உங்கள் படத்தில் தெரிக்றதே என்று கேட்கப் பட்டது . இயக்குனர்அந்தப் படத்தைப் பார்த்ததே இல்லை என்று மறுத்தார். இத்தனைக்கும் படத்தின் முக்கிய காட்சிகள் அந்த இத்தாலியப் படத்தில் இருந்து அப்பட்டமாக திருடப்பட்டது.படம் எந்த சினிமா கலைஞராலும் மறக்க முடியாத பார்க்காமல் இருந்திருக்கவே முடியாது எனுமளவுக்கு தாக்கம் உள்ள படம்.இயக்குனருக்கு மனசாட்சி எனும் வஸ்து இயல்பிலேயே இல்லை போலிருக்கிறது.
அதே போல் புகழ்பெற்ற Bicycle Thieves படத்தை பைக் திருட்டு கதையாக்கி சினிமாவில் நுழைந்த ஒருவர் சென்ற வருடம் தன் வரலாற்று சிறப்பு மிக்க படத்துக்காக தேசிய விருது பெற்றார். அதே போல் தேசிய விருது பெற்ற அமீர் தனது அடுத்த படமான யோகியை தென்னப்ப்பிரிக்காவில் இருந்து (Tsotsi) இறக்குமதி செய்து வாங்கிக் கட்டிக்கொண்டார். சமீபத்தில் ஒரு ஆங்கில நாளேட்டில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் Assassins Creed என்ற வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டது என்ற பரபரப்பான கட்டுரை வந்தது. இயக்குனரின் முந்தைய படமான கஜினி கூட Memento என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் தான். கமல்ஹாசனின் மன்மதன் அம்பு ஐம்பதுகளில் வெளியான Romance on the high seas என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து உருவப்பட்டது. கௌதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் Derailed என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான நகல்..இப்படி ஏராளாமான சமீபத்தியப் படங்கள் வேற்று மொழிகளில் இருந்து திருடப்பட்டு தத்தம் பெயரில் நம்மூர் அறிவுஜீவி நாயகர்கள் இயக்குனர்களால் உருவாக்கப்பட்டவை.
கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தமிழ் சினிமாவில் ரோஷோமோன் ஸ்டைலில் எடுப்பட்ட அந்த நாள் போன்ற படங்கள் இவற்றுக்கு தொடக்கப்புள்ளி வைத்தன என்றாலும் முழுக்க முழுக்க அப்பட்டமாகப் பிரதி எடுத்தது குறைவு தான். என்றாலும் பாதிப்பில் விளைந்த படங்கள் பல. பிற்பாடு அழியாத கோலங்கள் மூலம் தமிழில் இயங்கத் தொடங்கிய பாலுமகேந்திரா உட்பட பலர் இந்த பட்டியில் வருவார்கள். Summer of 42 என்ற ஆங்கிலப் படத்தின் சாயலை அழியாத கோலங்களில் பார்க்கலாம். மூடுபனிக்கு ஹிட்ச்காக்கின் சைக்கோ பெரிய தாக்கம் தந்திருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரியும். பாலச்சந்தரின் பல படங்கள் ஹிட்ச்காக், ரித்விக் கட்டக் போன்றவர்களின் படங்களின் தாக்கத்தில் இங்கு உருவானவை. என்றாலும் யாரும் அது பற்றி இங்குபேசுவதில்லை.பாலச்சந்தரின் முதன்மை உதவியாளரான (அவர் தான் அவர் மூளை என்று சொல்பவர்கள் உண்டு) அனந்து எண்பதுகளில் இறுதியில் ஒரே ஒரு படம் எடுத்தார். ஒரு இசைக்கலைஞரின் தனிப்பட்ட பிரச்சனைகளையும் சமகால இசைக்கலைஞர் ஒருவர் அவரது இசைக் குறிப்பைத் திருடி விடுவதையும் அடிப்படையாகக் கொண்டது. இசைக் கலைஞர் மொசார்ட்டைப் பற்றிய Amedeus என்ற படத்தில் வரும் காட்சிகள் இந்தப் படத்தில் வரும். ஆனந்து தான் கமலுக்கு வழிகாட்டி என்று பேசப்பட்டவர். படத்தின் தோல்விக்கு ரசிகர்களின் 'ரசனைக் குறைவையும்' வேறொருவர் 'இயக்கிஇருந்தாலும்' வெற்றி பெற்றால் தன்னை மட்டுமே முன்னிறுத்தும் கமல்ஹாசனின் பல படங்கள், காட்சி அமைப்புகள், உடல்மொழி இவற்றில் ஆங்கிலப் படங்களின் தாக்கம் மிக அதிகம். இந்திரன் சந்திரன்- Moon Over Parador , தெனாலி-What about Bob, ராஜபார்வை- The Graduate .. என்று தொடரும் பட்டியல் அனுமார் வால் போல் நீளும் .ஏனோ அந்த காலகட்டத்தில் தமிழ் பத்திரிகைகளின் விமர்சனத்தில் இந்த விஷயம் கணக்கில் எடுத்க்கொள்ளப் படவே இல்லை. தொன்னூறுகளில் உலகப் படங்கள் பற்றிய பார்வை இங்கு பரவியவுடன் பிரதி எடுக்கப்படும் மாற்று மொழிப் படங்களின் பட்டியலில் ஃபிரெஞ்சு, இரானிய, மற்றும் சில ஐரோப்பிய மொழிப்படங்கள் சேர்க்கப் பட்டுவிட்டன.
தமிழ் சினிமா என்று இல்லை.பொதுவாக இந்திய சினிமாவே இப்படி தான். ஹிந்தியில் சமீபத்தில் வந்த பல படங்கள் ஆங்கிலப் படங்களின் அப்பட்டமான பிரத்கள். குறிப்பாக பாடல்கள் வடக்கதியர்களின் அதீத பகையுணர்வுக்கு ஆளாகும் பாகிஸ்தானில் உருவான பாடல்களின் நகல்கள். ஹிந்தியில் புகழ் பெற்ற பாடல்கள் பதிவேற்றப்பட்ட சமூக வலைதளங்களில் அவற்றின் மூலப் பாடல்களைப் போட்டு மானத்தை வாங்கி விடுகிறார்கள். பாகிஸ்தான் காரர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திருட்டு கும்பலாக நினைத்து கிண்டல் செய்கிறார்கள்.முக்கியமாக ஹிந்தியில் பெரும்பான்மையான இசை அமைப்பாளர்கள் எந்தவித மொழிப்பாகுபாடும் இல்லாமல் தேவா காரியம் செய்யும் புண்ணியர்கள். இலத்தீன் மொழிப் பாடல்களைக் கூட விட்டு வைக்காமல் நம் பாரத நாட்டுக்காக இறக்குமதி செய்து விடுவார்கள்.அனுமதி, காப்புரிமை போன்ற வார்த்தைகளை அவர்கள் வாழ்நாளில் கேட்டுக்கூட இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
கலை என்பது நிச்சயம் தாக்கத்தால் உருவாவது தான். ஏதோ ஒரு விஷயம் தரும் பாதிப்பு படைப்புத்திறன்மேலும் வளர்தெடுக்கப்பட்டு கலையாக பரிணமிக்கிறது. எனவே ஏதோ ஒரு மூலம் கலைக்கு தேவையாகிறது. உலகில் எல்லா கலைஞர்களுக்கும் அப்படி ஒரு உத்வேகம் தரும் மூலம் இருந்திருக்கிறது. ஆனால் ஒரு தனிப்பட்ட கலைஞனின் பிரத்யேக படைப்பாற்றல் மூலம் விளையும் கலையை எந்த உழைப்புமில்லாமல் இன்னொருவர் தன் பெயரில் பயன்படுத்திகொள்வதுவழிப்பறிக் கொள்ளைக்கு சமமானது. நிச்சயம் மன்னிக்க முடியாதது. தமிழில் வேதா தொடங்கி தேவா வரை பலரும் மற்றவர் இசை அமைத்தப் பாடல்களை தன் பெயரில் பயன்படுத்திக் கொள்வதுண்டு. எம்.எஸ்.வி , இளையராஜா போன்ற மேதைகள் கூட விதிவிலக்கில்லை. எண்ணிக்கையிலும் சாதனைகளிலும் அவர்களது தனித்தன்மை மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டிவிடுகிறது. அதே சமயத்தில் இளையராஜா, ரஹ்மான் போன்றோரின் பல பாடல்கள் வேற்று மொழிகளில் குறிப்பாக ஹிந்தியில் பயன்படுத்தப் படுவதுண்டு. இன்றைய இளம் இசை அமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் போன்றோர் தயங்காமல் ஆங்கிலப் பாடல்களைத் தமிழாக்கம் செய்து விடுகிறார்கள்.
சினிமாவுலகில் இது போன்ற செயல்களைத்தவிர வேறு வகையில் மூலப் படைப்பாளிகள் ஏமாற்றப்படுவது உண்டு. ஒருவர் சொன்ன கதையை அவர் பெயர் போடாமலேயே படமெடுத்து புகழ்பெறுவது முக்கிய குற்றச்சாட்டு. ஒருதலைராகத்தில் முழுக்க முழுக்க கதை,இயக்கத்துக்கு சொந்தக்காரரான த.ராஜேந்தரின் பெயர் மறைக்கப்பட்டு படத்தின் தயாரிப்பாளரே இயக்கியது என்ற பெயரில் படம் வெளியானது. தன்னை நிரூபிக்க ராஜேந்தர் பிற்காலத்தில் கதை,திரைக்கதை,வசனம் இத்யாதி இத்தியாதி என்று ஒரு தாண்டவமே ஆட வேண்டி வந்தது. அகத்தியனின் காதல் கோட்டை தன் கதை என்று சொன்ன ஆர்.பாலுவுக்கு பிற்பாடு அவரே சொந்தமாக படம் இயக்க வாய்ப்பு கொடுத்தது படத் தயாரிப்பு நிறுவனம். அதே போல் புகழ் பெரும் படங்களின் கதை தன்னுடையது என்று பலர் வழக்கு தொடுக்கும் வரை செல்வதுண்டு. சமீப உதாரணம் எந்திரன். இரண்டு மூன்று பேர் இவ்வாறு சொன்னது தான் வேடிக்கை. உண்மையில் படம் பல ஆங்கிலப் படங்களின் காட்சிகளை ஒன்றாக்கி இந்தியத்தனம் செய்யப்பட்டது என்று இணையத்தில் வீடியோவுடன் செய்திகள் வெளியாயின. 'மூலப்படைப்பாளிகள்' பிறகு ஏனோ பேசவே இல்லை.
மிக சமீபத்தில் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'டிப்பார்ட்மென்ட்' என்ற ஹிந்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று ஒருவர் புகார் அளித்திருக்கிறார். அலட்டிக்கொள்ளாத வர்மா 'என் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு பல கதையாசிரியர்கள் வருகிறார்கள்.இவர் யாரென்றே எனக்குத் தெரியாது' என்று சொல்லிவிட்டார்.இன்னொரு வகை இருக்கிறது தமிழிலேயே எப்போதோ வெளியானப் படங்களை தூசு தட்டி சில நகாசு வேலைகள் செய்து வேறு பெயரில் படமாகத் தயாரிப்பது. நிறைய உதாரங்கள் சொல்லலாம். எண்பதுகளில் வெளியான ஆனந்த ராகம் என்ற படம் அதே கதையுடன் செவ்வந்தி என்ற பெயரில் தொன்னூறுகளில் வெளியானது. பாலம் புகழ் கார்வண்ணனின் 'புதிய காற்று' மற்றும் சிவாஜி, கமல் நடித்த பழைய படமான 'நாம் பிறந்த மண்' ஆகியப் படங்களை ரஹ்மான் இசையுடன் கலந்து ஷங்கர் தந்த படம் தான் கமலுக்கு தேசிய விருது வாங்கித்தந்த இந்தியன்.
இது போன்ற விஷயங்களில் பல உள்ளரசியலும் தனிப்பட்ட நியாயங்களும் உண்டு என்பதால் எதையும் வெளியில் இருந்து உறுதியாக சொல்ல முடியாது எனபதும் உண்மை தான். அது சம்பந்தப்பட்ட ஆட்கள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம். ஆனால் வேறு மொழியில் இருந்து அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் கலைப்படைப்புகள் அவற்றின் வியாபார வெற்றி போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவேண்டும். ஏனென்றால் வியாபார உலகில் ஒருவரின் ஐடியாவை தயாரிப்பு உத்தியை வேறொருவர் நகலாக்கம் செய்தால் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவது சாதாரணம். அதே போல் ஹாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு தகவல் தெரிந்து அவர்கள் நஷ்ட ஈடு என்று கிளம்பினால் இந்திய தயாரிப்பாளர்களில் பலர் நிலைமை அதோகதி தான். யானைக்கு தெரியாமல் அதன் உணவில் சிறுபகுதியை கவர்ந்துசெல்லும் எறும்புகள் போல் பல நகல் இயக்குனர்களின் செயல்பாடுகள் ஹாலிவுட் போன்ற நம்மிருந்து எல்லா வகையிலும் தொலைவில் இருக்கும் நிறுவனங்கள் பார்வைக்கு பெரும்பாலும் சென்றடைவதில்லை. அது இங்கிருக்கும் பலருக்கு வசதியாகப் போய் விடுகிறது. என்றாலும் இணையத்தில் இயங்கும் பலர் தற்போது சம்பத்தப்பட்ட ஹாலிவுட் நிறுவனங்களை தொடர்புகொண்டு இங்கு வெளியாகும் நகல் படங்களைப் பற்றி புகார் அளிக்கத் துவங்கி இருகிறார்கள். நிச்சயம் அது ஒரு நல்ல மாற்றம் தரும் என்று நம்பலாம். இணையத்தில் பல முறை குரல்கள் எழுப்பிய பின் நந்தலாலா ஜப்பானிய மொழித்திரைப்படமான கிகிஜூரோவின் தாக்கத்தால் உருவானது என்று ஒத்துக்கொள்ள வேண்டி வந்தது இயக்குனர் மிஷ்கினுக்கு. தற்போதுஆங்கிலப்படங்களின் போஸ்டர்களைக் கூட விடாமல் பிரதிஎடுத்து கதாநாயகனின் தலையை மட்டும் மாற்றி சூப்பர் மற்றும் பவர் போன்ற அடைமொழியைக் கொண்ட நம்மூர் நட்சத்திரங்களின் தலைகள் ஒட்டப்பட்டு பிரமாதமாக வெளியிட்டு அசத்துகின்றனர் இங்குள்ள படைப்பாளிகள். உதவி இயக்குனர்களின் பணியே உலகப் படங்களை சேகரித்து காட்சிகளை உருவி எடுத்து வைப்பது தான் என்று கிண்டலாகக் குறிப்பிடப்படுவதுண்டு.
சினிமா போன்ற வெற்றியை மூலதனமாக வைத்து முன்னேறவேண்டிய அவசியம் இருக்கும் தொழிலில் எப்படியாவது கவனம் பெறவேண்டும்; பின்பு அதை வைத்து வளர்ந்து தன் படைப்புத்திறனை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று முனைப்புடன் இயங்கும் புதியவர்கள் இவ்வாறு செயல்பட்டாலே அது விமர்சனத்துக்கு உரிய விஷயம் தான். நன்கு அங்கீகாரம் பெற்ற பின் உள்ளூரில் மேதை என்று பெயர் எடுத்தப் பின்னரும் திரைகடல் ஓடி திரைப்படம் தேடி இங்கு பிரதி எடுத்துப் புகழ்பெறுவது அயோக்கியத்தனத்தின் உச்சம். துரதிருஷ்டமாக அதைத் தான் இங்குள்ள பல புகழ்பெற்றத் திரைக்கலைஞர்கள் செய்து வருகின்றனர்.இது போன்ற விஷயங்கள் பெரும்பாலும் பாமர ரசிகர்கள், பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் திரைப்படத்தை அணுகும் மேம்போக்குக்காரர்களுக்கு சென்றடைவதே இல்லை. தெரிய வந்தாலும் 'அதற்கென்ன' என்ற மனோபாவத்துடன் நகர்ந்து விடுவதால் இங்கு பல கலைக்கள்ளர்கள் மேதைகளாக உருவெடுத்து விடுகிறார்கள்.
இணைய எழுத்தாளர்கள் வாசகர்கள் மற்றும் சில சிறுபத்திரிகைகாரர்கள் மத்தியில் இந்த விஷயம் விவாதிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவை பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ளும் தனியார் தொலைக்காட்சிகள் வணிகக் காரணங்களுக்காக இந்த விஷயத்தில்மௌனம் காக்கின்றன. ரசிகர்கள் இது போன்ற கலை வணிக ஏமாற்றுக்காரர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும். அசல் படைப்பை தரும் கலைஞர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் போலி படைப்பளிககுக்கும் தரப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.அதே சமயம் தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறைப் பக்கமான கேபிள் டி.வி, தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் திருட்டு விசிடி போன்ற விஷயங்களால் வியாபார ரீதியாக பாதிக்கப்படும்போதேல்லாம் கண்டனக் குரல் எழுப்பி போராடும் சினிமா கலைஞர்கள் தங்கள் நடுவில் நடக்கும் இதுபோன்ற விஷயங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஏனென்றால் முறைப்படி அனுமதி வாங்கி படமாக்கப்பட வேண்டிய பல படைப்புகள் யாரும் தொடாத இருட்டு மூலையில் பரிதாபமாகக் கிடக்கின்றன.

தகவல் உதவி : விக்கிபீடியா, youtube.com, http://www. karundhel.com.