Sunday, June 19, 2011
அவன் இவன்: ஏக வசனம்
சேது படத்தின் வெற்றிக்கு பிறகு சிவாஜி- அஜித்தை வைத்து எடுக்கப்படவிருந்து பின்னர் சூர்யா-ராஜ்கிரண் நடித்த நந்தா திரைப்படத்தின் திரைக்கதை போதும் பாலாவின் திறமையை பறைசாற்ற. படம் வந்த சமகாலத்தில் வெளிவந்த - தமிழ் அறிவுஜீவி இயக்குனர் மணிரத்னம் எடுத்த- கன்னத்தில் முத்தமிட்டால் போலவே அரைகுறை புரிதலுடன் இலங்கை தமிழர் வாழ்வை ஒரு துணைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தான் நேசிக்கும்(!) மனிதரின் இறப்பு தவிர உலகத்தில் வேறெந்த விஷயத்தாலும் பாதிக்கப்படாத தன்மையுடைய நாயகர்களை தமிழ் சினமாவில் உருவாக்கிய பெருமை பாலாவுக்கு தான் சேரும். அவரது பாதிப்பில் படம் எடுத்த பலர் இதை தான் தம் கதை நாயகர்களின் முக்கிய அடையாளமாக முன்வைத்தார்கள்.சூர்யா முதன்முதலாக 'நடித்த' அந்த படம் பாலாவின் வழக்கமான க்ளிஷேக்களை ஆரம்பித்து வைத்தது .தன் நெருங்கிய நண்பனை கூட அற்பமான விஷயங்களுக்கு முரட்டு தனமாக அடிப்பது; ,பெண்களை தலையில் ஓங்கி அடிப்பது; அடித்த கையோடு அடுத்த நொடியே தன் காதலியை நினைத்து உருகுவது (ஊரே கொண்டாடிய மைனா திரைப்படத்தில் ஒரு பெண்ணை தலையில் ஓங்கி ஓங்கி அடித்துவிட்டு உடனே ஒரு ரொமான்சு லுக்கு விடுவார் அந்த தலைசீவாத நாயகன்) ,பெண்களை தலையில் ஓங்கி அடிப்பது, ஆண் என்ற ஒரு தகுதி இருந்தாலே எந்த பெண்ணையும் 'காதலிக்கலாம்' என்ற தற்போதைய தமிழ் சினிமா (தலை) விதியை ஆரம்பித்து வைத்த காட்சிகள் என்று பாலா செய்த தவறுகள் கணக்கில் அடங்காதவை.
பிதாமகனில் கிட்டத்தட்ட ஓநாய் மனிதன் போல் பிணம் எரிப்பவராக நடித்த விக்ரம் பாத்திரத்தை சித்தரித்திருப்பார். ஒரு பாடல் காட்சியில் அவருக்கு சவரம் செய்ய வருபவரின் கையில் கத்தி பார்த்து திடுக்கிட்டு அவரை தள்ளி விட்டு ஓடுவார்.சுடுகாட்டிலேயே இருக்கும் மனிதனுக்கு சவரம் செய்வது பற்றி தெரியாதா என்ன?பாலாவிடம் அப்படியான ஒரு கதாபாத்திரம் நிஜத்தில் இருக்க முடியுமா என்று கேட்டபோது அது எனது கற்பனை மட்டுமே என்றார். அதே போல் கஞ்சா கேசில் உள்ளே போகும் விக்ரமை பொட்டி கேசில் ஜாமீன் வாங்குவது போல் வெளிக்கொண்டு வருவது; நான் கடவுள் படத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அகோரி சாதுவை கடவுள் ரேஞ்சுக்கு ஒரு நீதிபதி நடத்துவார். போலிஸ் அவர் கக்கா போய் கழுவும் வரை காத்திருக்கும்.
ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் அவர் சித்தரித்த விளிம்பு நிலை மனிதர்களின் இருட்டு உலகம் 'நான் கடவுளில்' ஓரளவுக்கு வெளிப்பட்டது எனினும், சம்பந்தமே இல்லாமல் அகோரி (அதிலும் சித்தர் பாடல் சொல்லும் அகோரி!) கதாபத்திரத்தை பிச்சைக்காரர்களின் வாழ்வோடு எந்த இடத்தில சேர்ப்பது என்பதில் மூன்றரை வருடம் குழம்பி ஒரு படமாய் தந்து நம்மை குழப்பினார்.பிச்சைக்காரர்களின் சோக வாழ்வில் பங்கெடுத்து அவர்களை காப்பாற்ற எதற்கு காசி போய் ஒரு காவியை (இதில் கருப்பு!) கூட்டி வரவேண்டும்? அதே ஊரில் இருக்கும் உடல் வலிவுள்ள மனிதர்கள் அல்லது மனம் உள்ள மனிதர்கள் போதாதா? ஒருவரை கொன்று தான் அவரை 'காப்பாற்ற' முடியும் என்ற புது தத்துவத்தை சொன்ன அந்த படம் பாலாவிடம் ஸ்டாக் தீர்ந்து போனதை அப்பட்டமாக சொன்னது. அதற்கும் தேசிய விருது கிடைத்தவுடன் பாலாவுக்கு அதீத நம்பிக்கை வந்து விட்டது போலும். அதன் விளைவு தான் அவன் இவன்.
ஒரு ஜமீந்தாருக்கு பாசமிகு அடிமையாக இருக்கும் கிராமம். திருட்டு பிராதன தொழில் என்று வாழும் அம்மக்களோடு கொஞ்சி குலவும் அந்த ஜமீந்தார் அடிக்கும் கூத்துகள் ஆபாசத்தின் உச்சம். முதல் காட்சியில் ஜமீந்தாருக்கு திருநங்கைகள் அலங்காரம் செய்து கூட்டி வருகின்றனர் . 'விலாவை சிறப்பிக்க' பெண்கள் மட்டுமே பங்கு பெறும் (ஆரம்பத்தில் பெண்கள் மட்டும் தான் பார்க்கவே முடிகின்ற நடனம் என்று நினைத்தேன்!) நடனம். "நாங்கள் மட்டும் தான் கலந்துக்குவோம்" என்று அந்த பெண்கள் பற்களை தேவையில்லாமல் கடித்துக்கொண்டு மிரட்டுவது எதற்கு என்று தெரியவில்லை. எரிச்சல் அப்போதே தொடங்கி விட்டது. பழைய எம்ஜியார் படங்களில் பொதுவாக எல்லா தமிழ் நாயகர்களின் படங்களிலும் பெண்கள் ஏதோ காரணத்துக்காக ஆண் வேஷத்தில் வருவார்கள். நம் நாயகர்கள் அவர்களை பெண்கள் என்று அறியாமல் (!?) தொட்டு தொட்டு பேசுவார்கள். கிட்டத்தட்ட ஓரின சேர்க்கை விருப்பம் உள்ளவர்கள் போல் தேவையில்லாமல் அந்த ஆணின் (!) அந்தரங்க அங்கங்கள் வரை தொட முயல அந்த பெண்கள் (!) அசடு வழிய விழிப்பார்கள். அதே போல் இந்த பெண்கள் கூட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு அந்த பெண்கள் ஆடும் அதே ஸ்டெப் போட்டு ஆடுகிறார். அவரை கடைசி வரை பெண் என்று நம்பி 'இந்த குத்து குத்துறாளே...யாருடி இவ ?" என பொருமுகிறார்கள். அவரோ வெறி வந்து ஆடும் பேய் போல் இருக்கிறார். கடைசியில் அவர் தலைமுடி கீழே விழும்போது தான் அவர் பெண்ணென்றே மற்ற பெண்கள் கண்டுபிடிக்கிறார்களாம்! எந்த காலத்தில் இருக்கிறீர்கள் பாலா? பாடல் காட்சிஎன்றோ நகைச்சுவை என்றோ இதை விட்டு விட முடியாது. பெரிய இயக்குனர் என்ற பேர் பெற்ற பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த அரிய காட்சியை வடிவமைத்தீர்கள்? முதல் கோணல் என்பது போல் படம் முழுவதும் அபத்தம். நகைச்சுவை என்ற பெயரில் மூன்றாம் தர கூத்துகள்.
விளிம்பு நிலை மனிதர்கள் தங்கள் வாழ்வியல் கஷ்டங்களை நகைச்சுவை உணர்வுடன் கடக்க முயல்வார்கள் என்பது உண்மை தான். அதற்காக தம் வாழ்வில் எந்த விஷயத்தையும் நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு நகர்வார்களா என்ன? விஷால் - ஆர்யா இருவரின் அம்மாக்கள் செய்யும் அட்டூழியங்கள் பேசும் வசனங்கள் ஆபாசம் என்றால் அவர்களை டி போட்டு கூப்பிடும் மகன்கள் ஆபாசத்தின் உச்சம்.இயல்பில் இதை விட கேவலமாக பேசிக்கொள்ளும் விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாலா காட்டுவது வெற்று ஆபாசம். "குஞ்சுமணியை புடிச்சிக்கிட்டு ஒண்ணுக்கு கூட சரியா போக தெரியாத பயல்" என்று தன் சக்களத்தியின் மகனை ஒரு பெண் சொல்கிறாளாம். அதுவும் பீடி புகை வாயிடுக்கில் கசிய. இது தான் ஒரு படைப்பாளியின் படைப்பு சுதந்திரமா? கதைக்கு அது எந்த விதத்தில் தான் பயன்படுகிறது? "இப்பெல்லாம் ராத்திரி தண்ணியடிக்காம தூக்கம் வர மாட்டேங்குது" என்று தன் மகனிடம் புலம்பும் தாய் தான் தமிழ் சினிமா தற்போது முன்வைக்கும் தாய்-முகம்.
கரகாட்டக்காரன் என்றொரு மகத்தான வெற்றிப்படம் வந்தது. படத்தின் வெற்றிக்கு முப்பது சதவீதம் இசை,முப்பது சதவீதம் நகைச்சுவை காரணம் என்றால் மீதி நாற்பது சதவீதம் கதை-முக்கியமாக திரைக்கதை இருந்தது. பாலாவின் படங்களில் திரைக்கதை என்ற ஒரு அம்சமே கிடையாது. பிதாமகனில் சிம்ரன் கடத்தல் நடனம் என்ற படத்தின் கருவுக்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஒரு நீண்ட காட்சி. அதே போல் கமல் நடித்த 'அன்பே சிவம்' படத்தின் காட்சிகள் ஒரு அளவை மீறி அந்த படத்தில் காட்டப்படும். எல்லாம் நேரத்தை கடத்த தானே ஒழிய வேறெந்த 'வித்தியாச கண்ணோட்டமும்' இல்லை. நான் கடவுளில் அதே போல் ஆர்யாவின் கதாபாத்திரம் பிச்சைக்காரர்களின் வாழ்வோடு எப்படி பொருந்துகிறது என்ற கவலை சிறிதும் இல்லாமல், மிக சில வினாடிகளே காட்டப்பட வேண்டிய காவல் நிலைய நடன காட்சி பல ந்மிடங்களுக்கு நீள்கிறது . அதில் எந்த சம்பந்தமும் இல்லாமல் நடனமாடும் திருநங்கை ஒருவர் பயத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சி. அருவெறுப்பின் உச்சம்.
சினிமாவுக்காக என்று வைத்துக்கொண்டாலும் காவல்துறையை இத்தனை காமெடி துறையாக காட்டுவது எந்த வகை கண்ணோட்டம் என்று தெரியவில்லை. பல இடங்களில் எரிச்சல் தான் வருகிறது. போலீஸ் அதிகாரி குற்றவாளிகளிடம் கெஞ்சுவதும் குற்றவாளிகளோ உலகில் எந்த விஷயத்துக்கும் பயப்படாதவகள் போல் அவர்களை நக்கல் செய்து வெறுப்பேற்றுவதுமான காட்சிகளை நந்தா படத்திலிருந்து இந்த படம் வரை ஒரு கொள்கையாக கடைப்பிடித்தே வைக்கிறார் என்று நினைக்கிறேன். அதே போல் ஒரு பிராமண ஜட்ஜ். அவரை ஏமாற்றி தங்களுக்குள் அதை நகைச்சுவையாய் பேசிக்கொள்ளும் குற்றவாளிகள் என்று க்ளிஷேக்களின் தொகுப்பு. ஒரு காட்சியில் 'தேவையான' இடத்தில சதை குறைவான கதாநாயகி 'தான் அடித்துபிடித்து கோட்டாவில் இந்த வேலைக்கு சேர்ந்ததாக சொல்கிறார்'. என்ன தான் சொல் வருகிறீர்கள் பாலா? சத்தியமாக சாதிப்படி நிலைகளை கிண்டல் செய்யும் நோக்கு தங்களிடம் இருக்கவே முடியாது என்பது தெளிவு. அப்படி இருக்க இது போன்ற காட்சிகள், வசனங்கள் படத்தின் திரைக்கதைக்கு எந்த விதத்தில் தான் துணை புரிகின்றன?
அதே போல் பெண்களை மிரட்டி அவர்களிடம் பணம் நகையை பிடுங்கி அந்த பெண்ணை குட்டிக்கரணம் வேறு போட செய்கிறார் ஆர்யா. அந்த பெண்ணின் தலையில் பலமுறை ஓங்கி அடிக்கிறார். இருபது வருடங்களுக்கு முன் இப்படியெல்லாம் ஒருவன் பெண்களிடம் நடந்துகொண்டால் தமிழ் சினிமாவில் அவன் கொடூர வில்லன். இப்போது இப்படி நடந்துகொண்டால் தான் அவன் ஹீரோ. என்ன ஒரு பரிணாம வளர்ச்சி பாருங்கள். அதற்கும் திரையரங்கில் கைதட்டல், சிரிப்பு. தான் சொல்வதையெல்லாம் பயந்து கேட்டு அதன்படி நடந்து கொண்டால் நாயகனுக்கு நாயகி மேல் காதல் வேறு பிறக்கிறது.அதாவது 'பாறையிலும் நீர்க் கசிகிறதாம்'! அந்த பெண்ணும் இவரது 'குறும்புகளை' ரசித்து அவர் மீது மையல் கொள்கிறாராம். பெண்களை இவ்வளவு இழிவாக சித்தரிக்க பாலாவால் மட்டுமே முடியும். அந்த பெண் படிக்கும் டுட்டோரியல் காலேஜுக்கு சென்றும் அங்கும் பல பெண்களின் தலையில் தட்டி விளையாடுகிறார் ஆர்யா. நாம் இதை நகைச்சுவையாய் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஏனெனில் என்ன தான் முரடன் என்றாலும் நல்ல மனசுக்காரன் அல்லவா நாயகன்? பிதாமகனில் தன்னை சிறையில் சந்திக்கவரும் லைலாவிடம் 'பாவாடையை கழட்டி விடுவேன்' என்று சூர்யா மிரட்டியதும் அவருக்கு சூர்யா மீது வெட்கம் கலந்த காதல் பிறக்கிறது. இந்த படத்திலும் அந்த 'கோட்டா பெண் போலீசிடம்' அவர் அணிந்திருக்கும் பேண்டின் ஜிப் பற்றி அடிக்கடி விஷால் கேட்க வெட்கம் தாளாமல் அந்த பெண் இந்த மாண்புமிகு திருடரை காதலிக்க தொடங்குகிறார். எப்பேர்பட்ட புரட்சி பாருங்கள்.
அதே போல் எந்த வாழ்வியல் ஒழுக்கங்களிலும் தேறாத விஷால் , ஒரு கிறிஸ்துவ பெண்ணிடம் நகையை திருடிக்கொண்டு வர, அவரிடம் 'விசாரணை' செய்யும் அந்த பெண் போலீஸ் அந்த கிறிஸ்துவ பெண் ஒழுக்கம் தவறியவள் என்று சொல்லி 'அந்த நாத்தம் புடிச்சவளோட நகை நமக்கெதுக்கு' என்று கேட்கிறாள். தன் அம்மாக்களின் ஒழுக்கம் பற்றி நன்கு தெரிந்த விஷால் 'ஆமாமா அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாலேயே நிறைய பேரை கரெக்ட் பண்ணியவள்' என்கிறார். இந்த காட்சிக்கும் வசனத்துக்கும் என்ன அர்த்தம் திருவாளர்கள் பாலா-எஸ்.ரா அவர்களே? வேற்று மதத்தை சேர்ந்தவள் செய்யும் செயல்கள் அசிங்கம். குடித்துவிட்டு கெட்ட வார்த்தை பேசி மகனுடனே ஆபாச நடனம் ஆடும் இந்து (அவர்கள் தலித் என்ற போர்வையில் காட்டப்பட்டிருந்தாலும்) பெண்கள் உத்தமமானவர்கள் என்று சொல்கிறீர்களா நீங்கள் இருவரும்?
கிடைக்கும் இரண்டரை மணி நேரத்தில் முக்கால் பகுதியை இப்படி வீணாகவும் விஷமாகவும் கழித்து விட்டு படம் முடிய அரை மணிநேரம் இருக்குபோது தான் 'கதைக்கே' வருகிறார் பாலா. அடிமாட்டு விற்பனை செய்யும் ஆர்.கே தான் வில்லன். பாருங்கள் கார்ப்பரேட் கனவான்கள், நீதி துறை கறுப்பாடுகள் செய்யும் அத்துமீறல்கள் எல்லாம் கணக்கில்லை.வாழ்வின் அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் வில்லன். வில்லன்களை வித்தியாசமாக கட்ட வேண்டும் என்ற பெரும் முனைப்பு தான் இந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருக்க வேண்டும். இத்தனைக்கும் அவர் இந்த உத்தம கூட்டாளிகளிடமோ ஊர்க்காரர்கள் யாரிடமோ எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருப்பவர். ஆனால் அடிமாடுகளை மாட்டுக்கறி பிரதான உணவாக விற்கப்படும் கேரளாவுக்கு 'கடத்தும்' கொடூர வில்லன்.(சட்ட விரோதமாக என்று பல முறை அழுத்தி சொல்லி (அ)நியாயம் வேறு கற்பிக்கிறார்கள்). நம் ஜமீன் தன் சமஸ்தானத்தில் இப்படி ஒரு கெட்ட காரியமா என்று கொதித்து ஜனநாயத்தின் தற்போதைய ஒரே தூணான டி.வி. மீடியாக்கள், ப்ளூ க்ராஸ் சேவகர்கள் போன்றோரை அந்த அடிமாட்டு பண்ணைக்கு கூட்டி வந்து சமூகத்துக்கு இந்த கொடூர செயலை எக்ஸ்போஸ் செய்கிறாராம். அந்த காட்சியின் பின்னணி இசையின் சோகம் நிச்சயம் வில்லன் என்று இவர்கள் காட்டும் ஆர்.கேவுக்கானது என்றே தோன்றியது. சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றி வெறித்து பார்க்கும் அவரை காட்டிக்கொடுத்த சந்தோஷத்தில் இவர்கள் வெற்றியுடன் வெளியேறுகிறார்கள்.
பரம்பரை பரம்பரையாய் ஆண்டானாக இருந்த ஜமீன் இப்படி செய்வதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் குற்ற பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஆர்யா-விஷால் சகோதரர்கள் ஊழலுடன் படுத்து ஒழுங்கீனத்தில் திளைத்து வளர்ந்த கும்பல் அன்னா ஹசாரே கும்பலுடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் உத்தமத்துடன் - தம்மை விட உத்தமமான செயல் செய்யும் வில்லனை காட்டிக்கொடுக்க துடிப்புடன் துள்ளி வருகிறார்கள். ஒரு முறை தன் வெளி நாட்டு நண்பர்கள் முன்னிலையில் வெற்று ஜம்பம் அடிக்க காட்டிலாகா அதிகாரி ஒருவரிடம் காட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று அதிகாரத்துடன் சொல்ல அவர் ஹைனசின் அருமை தெரியாமல் - சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காட்டுக்குள்ளே அனுப்ப மாட்டேன் என்று மறுக்கிறார். உடனே உத்தம சிகரமான நம் ஜமீன் தன் அடியாட்கள் விஷால்-ஆர்யாவை ஏவி அந்த அதிகாரியை அடித்து துவைப்பதோடு கதைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தமான மரங்களை விஷால் கடத்தியது அறிந்தும் மௌனம் காக்கிறார். (இந்த காட்சி ஒரு மகா ஓட்டை என்பதும் படத்தில் அதை பற்றி வேறு யாருமே பேசவில்லை என்பதும் வேறு விஷயம்!)
இத்தனை உத்தமமான கும்பல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ஒரு தொழிலை செய்யும் ஒருவனை சிறைக்கு அனுப்புகிறது. பிறகு பழிவாங்குவானா மாட்டானா? ஆனால் அதிலும் தனது கொடூர எண்ணங்களை பதிவு செய்கிறார், பாலா. ஹைனசை வீட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து நிர்வாணமாக்கி சவுக்கால் அடித்து கொல்கிறார் ஆர்.கே. பின்பு அத்தனை பெரிய உருவமுள்ள அந்த உடலை வேலையற்று உயர்ந்த மரத்தில் தொங்கவிட்டு வேறு போகிறார்களாம். கோபத்தில் ஒருவன் கொலை செய்வான் என்றே காட்டினாலும் இப்படி ஒரு செயலை அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் செய்வானா? அதன் தேவை தான் என்ன அவனுக்கு? சத்தம்போடாமல் காரியத்தை முடித்து உடலை மறைத்திருக்க மாட்டனா என்ன? காட்சிகளை விதவிதமாக சிந்தித்து வைக்கலாம் என்ற எண்ணம் இன்றி இது போன்ற அதிர்ச்சி தரும் கொடூரங்களை மட்டும் ரூம் போட்டு யோசித்து வைப்பார் போலும் பாலா. நான் கடவுளில் நாயகனின் பராக்கிரமத்தை சொல்லும் 'ஓம் சிவோகம்' பாடலில் ஒருவனை அடித்து கீழே தள்ளி அவன் மேல் குதித்து சம்மணமிட்டு அமரும் ஆர்யா, கழிவறையில் ஒருவனின் ஆண் குறியை அறுத்து கொலை செய்யும் சூர்யா(நந்தா),தன்னால் கடுமையாக தாக்கப்பட்டும் சிறிது உயிர் மிச்சமிருக்கும் வில்லனின் குரல்வளையை கடித்து குதறும் விக்ரம்(பிதாமகன்) என்று பாலா காட்டும் உக்கிர காட்சிகள் உண்மையில் வக்கிரமானவை. வெறும் அதிர்ச்சி மதிப்பு தருபவை ; கதைக்கு எந்த விதத்திலும் அவசியமில்லாதவை. பிறகு எப்படி நாம் மற்ற இயக்குனர்கள் மத்தியில் தனித்து அறியப்பட முடியும் என்ற தாகம் ஒரு வேளை காரணமாய் இருக்கலாம்.
அதே போல் விஷாலின் முரட்டு தாக்குதலுக்கு ஆளாகி வலி தாளாமல் தன்னை கொன்று விட சொல்லி கதறும் ஆர்.கேயை இந்த சகோதரர்கள் வித்தியாசமாய் கொன்று பழி தீர்க்கிறார்களாம். இந்த கொடூரங்களுக்கு பின் அழுதுகொண்டே சில்-அவுட் ஷாட்டில் நாயகர்கள் நடந்து போனால் நாம் எழுந்து நின்று கைதட்டுவோம் என்று நினைத்து விட்டார் போலும் பாலா. இதில் விஷாலுக்கு பெண்போன்ற நளினம், மாறு கண் போன்ற அவசியமற்ற அலட்டல்கள் வேறு. விஷாலுக்கு விருது நிச்சயம் என்று பத்திரிக்கைகள் புகழாரம் வேறு செய்யும். தனுஷ் போன்ற மகா நடிகர்களே தேசிய விருது வாங்கும்போது விஷாலுக்கு என்ன குறைச்சல்? பல இடங்களில் ஆபாசமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும் வசனங்களை எழுத 'நெடுங்குருதி' போன்ற நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் தேவையா? அவரும் சினிமாவுக்கு வந்து எந்த சாதனையும் இது வரை செய்யவில்லை. சண்டைக்கோழி, உன்னாலே உன்னாலே போன்ற கமர்ஷியல் படங்களே தேவலாம் என்றிருக்கிறது.
இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தவோ நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவோ கிஞ்சித்தேனும் உதவப்போவதில்லை. மாறாக மேலும் மேலும் வன்முறையை,ஆதிக்க வெறி,சாதிவெறியை மட்டுமல்லாமல் கொலைவெறியையும் தூண்டும் இந்த படங்கள் ஒரு வேளை வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ் சினிமா இனி என்ன ஆகும் என்ற கவலை மட்டும் மிஞ்சுகிறது.
ayya sami ungala pola vimarsanam saiya ale kedayathu......!!!!! Arivujeevi enru matravarai kindal saiya muyarsikkum neengal, ungalai velikattikolla muyarsippathum athuve....... valka valarka....
ReplyDeletehi chandru
ReplyDeleteur review is wonderful. yes,bala's characters are always mentals. I thought of watching this film .Thanks for saving time and money.
guru
நல்ல விமர்சனம்.
ReplyDeleteபாலா ஒருவகையான morbid கிளிஷேவில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. இதிலிருந்து அவர் வெளியே வரவேண்டும். தமிழ் சினிமாவின் வரலாற்றில் சேது ஒரு முக்கியமான மைல்கல் படம். அதற்குப் பிறகு பாலுமகேந்திராவின் சிஷ்யர்கள் அதை இன்னும் மேலெடுத்துச் சென்றார்கள். ஆனால் ஒரு நிலையில் தேங்கி நீர்த்துப் போவது துரதிர்ஷ்டம். பருத்தி வீரன் என்கிற சிறந்த படத்தைத் தந்த அமீர் இன்று என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. முதற் புள்ளியான பாலாவும் இந்த வரிசையில் சேர்ந்திருப்பது வருந்தத்தக்ககது.
ReplyDeleteபாலாவிற்க்கு வந்திருப்பது கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை என்ற நோய்.அதற்க்கு தினம் இரண்டு உலகசினிமா பார்க்க வேண்டும்
ReplyDeleteதமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகளை படிக்க வேண்டும்.
இப்படம் என்னை ஏமாற்றிய கோபத்தில்...
அவன் இவன்-இயக்கியது எவன்?என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன்.
நல்ல
ReplyDeleteஆழ
அகல
ஆராய்ந்து
அலசிய விதம்
அருமை
அன்பரே
nalla vimarsanam vaalththukkal
ReplyDeleteநல்ல விமர்சனம்.. இப்போதெல்லாம் நான் சினிமாவே பார்ப்பதில்லை மோஹன். பிதாமகன் பார்க்கும்போதே ஒரு சில காட்சிகள் பார்க்க முடியா வண்ணம் இருந்தது....
ReplyDeleteSir neenga intha padatha mattum vimarasanam panniruntha ok....neenga balavin ella padathaiyum review panrelae....appa neenga oru gay daan..poi paasamazhar paarunga....pithamagan national award....unga sootha just saathunga...If ua gonna disable dis comment.U r a gay afraid of society
ReplyDeleteகெட்ட வார்த்தை எழுதும் திருவாளர்கள் தமிழிலேயே எழுதினால் படித்து ரசித்து சிரிக்க வசதியாக இருக்கும். அன்பரே உங்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete‘அவன் இவன்’ படத்தை விமர்சிக்கின்றீர்களா இல்லை பாலாவை விமர்சிக்கின்றீர்களா என்று தெரியவில்லை. அவரின் மற்ற படங்களையும் ‘அவன் இவன்’ கொண்டு அலசுவதன் அவசியம் என்ன?
ReplyDelete-லியோமேடி
நான் பாலாவின் எல்லா படங்களையும் இங்கு குறிப்பிட்டதற்கு ஒரே காரணம் அவர் தன் எல்லையை தன் இரண்டாம் படத்தில் இருந்தே குறுக்க துவங்கி விட்ட ஆதங்கத்தால் தான். நான்கைந்து விளிம்பு நிலை மனிதர்கள் (அப்படி கூட சொல்ல முடியாது. பல கதாபாத்திரங்கள் இயல்பை வெகுவாக மீறியவை!) படம் முடிய கொஞ்ச நேரம் இருக்கம்போது இவர்களில் ஒருவரின் மரணம், பின் கோரமான பழிவாங்கல் என்பதை தாண்டி பாலா வரவில்லை என்பதை சுட்டிக்காட்ட தான் முந்தைய படங்களையும் அவன் இவனோடு ஒப்பிட்டேன்.
ReplyDelete\\படம் முடிய கொஞ்ச நேரம் இருக்கம்போது இவர்களில் ஒருவரின் மரணம், பின் கோரமான பழிவாங்கல் என்பதை தாண்டி பாலா வரவில்லை என்பதை சுட்டிக்காட்ட தான் முந்தைய படங்களையும் அவன் இவனோடு ஒப்பிட்டேன்.//
ReplyDeleteஆகா நீங்கள் படைப்பை விமர்சிக்கவில்லை. பாலாவைத்தான் விமர்சனம் செய்துள்ளீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
-லியோமேடி
@லியோ மேடி ... :)
ReplyDeleteநல்ல விமர்சனம் சந்துரு. பாலாவின் முதல் படமான சேதுவும் ஒரு சுமார் படம்தான். ஆனால் தமிழ் சினிமாவை, அந்த ஒரு படத்தின்மூலம்,"வேறு தளத்துக்கு" கொண்டு போனவர் என்று ஊடகங்கள் மூலமாக project செய்யப்பட்டவர். இதுபோல் பலர் முன்னிருத்தப்பட்டிருக்கிறார்கள் (ரா.பார்த்திபன்). பாலா தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் மூலமாக தன்னுடைய தரத்தை நிரூபித்தார். இவரை போன்றவர்கள் முதல் வரிசை இயக்குனர்களாக முன்நிருத்தப்படுவது தமிழ் சினிமாவின் சாபக்கேடு.
ReplyDeleteசரியான முறையில் அவரைப்பற்றி விமர்சித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
முழுமையான மிகச் சிறந்த விமரிசனம் சந்துரு.
ReplyDeleteவிளிம்புநிலை மனிதர்களைக் காட்டுவதான பம்மாத்தில் அவர்களின் வாழ்வியலைத் தன் படங்களின் மூலம் சுரண்டல் செய்து கொண்டுதான் இருக்கிறார் பாலா.
(ஈழப் பிரச்சினையின் அடிவேர் தொடாமல் அதை ஊறுகாயாக்கும் சிலர் போலத்தான் இதுவும்.)
அந்தப் போலித்தனத்தை உங்கள் விமரிசனம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.தன் படங்களைத் தானே காப்பியடிக்கத் தொடங்கி விடும் தருணத்திலேயே அந்த இயக்குநரின் படைப்பூக்கம் வற்றிப் போகத் தொடங்கி விட்டிருப்பதைப் புரிந்து கொண்டு விட முடியும்.பாலச்சந்தர் இதற்குச் சரியான உதாரணம்.அவர் பல படங்களுக்குப் பிறகு செய்ததை பாலா ஒரு சில படங்களுக்குள்ளேயே செய்யத் தொடங்கி விட்டார்.
என்ன சொல்வதென புரியவில்லை. ஆனால் இது ஒரு நல்ல விமர்சனம்.
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteWhat to say? Great review. Though Bala's movies were sick to death, people are still watching right?
ReplyDeleteமிக்க நன்றி அன்பு நண்பர்களே..
ReplyDeletemiguntha mathippumikka vimarsanam.
ReplyDeleteSaravanan R. Murthy
oru muraya iru nuraya pala murai ore mokkai pottu vaiththai
ReplyDelete