Monday, November 29, 2010
மூலம்: நகல்- ஒரு அலசல்
சில விஷயங்கள் நடக்கும்போது வியப்பாகவும் கோபமாகவும் ஆச்சர்யமாகவும் சம நேரத்தில் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் கூட இருக்கும். அப்படியான ஒரு சமீபத்திய நிகழ்வு நந்தலாலாவின் வருகை. மிஷ்கின் தனது சிறந்த படைப்பாக பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் இந்த படத்தை திரை உலகமும் இலக்கிய உலகமும் ( சாரு நிவேதிதா போன்ற 'ஒலக மேதைகள்' உட்பட) கொண்டாடுகின்றன. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. டெல்லியில் அது இன்னும் வெளியாகவில்லை. நான் ஆர்வத்துடன் கவனித்து வருவது படம் பற்றி பதிவர்களும் எழுத்தாளர்களும் எழுதும் விமர்சனங்களையும் இந்த படத்தின் 'திரை மூலம்' என்று Kikujiro படத்தை பற்றி பலர் சொல்லி வருவதையும் அது தொடர்பான விஷயங்களையும் தான்.
படத்தை பற்றி நல்லவிதமான விமர்சனங்களே படிக்க கிடைக்கின்றன. எல்லோரும் இந்த படம் நல்ல சினிமாவின் ஒரு தொடக்கம் என்றே சொல்கிறார்கள். உறுத்தும் ஒரே விஷயம் இந்த படத்தின் கதை ' Kikujiro' கதையின் தழுவலாக இருந்தாலும் ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்திருப்பதால் பாராட்டலாம் என்று பலர் சொல்வது. இது என்ன மாதிரியான மன நிலை என்று புரியவில்லை. இந்திய சினிமாவின் பல 'சாதனைகள்' வெளியில் சொல்லிக்கொளும்படியான 'உண்மை தன்மை' கொண்டவை அல்ல என்பதே உண்மை. டைம்ஸ் இதழ் தேர்ந்தெடுத்த சிறந்த நூறு படங்களில் ஒரு படமாக வந்த நாயகன் (காட்பாதர்) ஆகட்டும் பாலுமகேந்திராவின் மூடுபனி (சைக்கோ) ஆகட்டும் இங்கு கொண்டாடப்படும் கலைஞர்களின் சாதனைகள் வெளிநாட்டு வாசம் வீசுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? சினமாவின் சகல பிரிவிலும் இந்த 'எடுத்தாளுதல்' (திருட்டின் திருந்திய சொல்வடிவம்) நடக்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'மைனா'வில் இடம்பெற்ற 'கையப்புடி' பாடலின் இசையும் பாடல் வரிகளும் கூட ஒரு ஆங்கில பாடலில் ('take my hand' ) இருந்து 'எடுத்தாளப்பட்டது' என்று படிக்கும்போது சோர்வாகத்தான் இருக்கிறது. சில கலைஞர்கள் மட்டுமே தாங்கள் சுட்ட பழத்தின் கிளையை காட்டுகிறார்கள். பலர் அது தன சொந்த கதை என்று சொல்லியே சமாளித்து விடுகிறார்கள். மிஷ்கின் தனது சமீபத்திய பேட்டிகளில் இது தான் எழுதிய கதை என்றே சொல்லி வருகிறார். வேடிக்கை என்னவென்றால் 'நான் உலக சினிமா பார்ப்பதில்லை' என்று சொல்வதை தற்போதைய இயக்குனர்கள் பேஷனாக கருதுகிறார்கள். பருத்திவீரன் வெற்றி பெற்ற பிறகு தீராநதி நேர்காணலில் அமீர் 'நான் உலக சினிமா பார்ப்பதே இல்லை' என்று முழங்கிய பின் வந்தது தான் 'யோகி'. அதன் மூலம் என்னவென்று இப்போது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் .
மிஷ்கின் மிக தைரியமாக இது தன் கதை என்று சொன்னாலும் , சற்று முன் நான் கண்ட பேட்டி ஒன்றில் மேம்போக்காக அகிரா குரோசவா மற்றும் டகேஷி கிடானோ இயக்கிய ஒரு படத்தால் (அதே கிகுஜிரோ தான்!) உந்துதல் பெற்றதாக சொல்கிறார். அனால் இது தமிழ் கதை ..தானே எழுதியது என்றும் சாதிக்கிறார். இதை அவர் டைட்டில் கார்டில் போட்டாரா என்பதை படம் பார்த்தவர்கள் தான் சொல்ல வேண்டும். கதைகள் பொதுவாக எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கும் என்று 'சொல்லப்பட்டாலும்' பிரத்யேக ஐடியா என்பது நிச்சயம் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அப்படியே பலருக்கு ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான 'சிந்தனை' வந்தாலும் முதலில் வெளிவந்து பரவலாக வெற்றி பெற்ற அல்லது தெரியவந்த ஒரு படைப்பை அப்படியே பிரதிபலிக்கும் மற்றொரு படைப்பை நீங்கள் 'ஒரிஜினல்' என்று ஒத்துக்கொள்வீர்களா?
மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தில் ஒரு காட்சி: பிரசன்னா ஒரு alien போல் முழங்காலிட்டு நடந்து மூடிய கதவுக்கு பின் உடை மாற்றும் பெண்ணை கதவின் கீழ் உள்ள இடைவெளிக்கு அருகே ஒரு சிறு கண்ணாடி கொண்டு 'பார்க்கும்' காட்சி , மனோஜ் நைட் ஷ்யாமளனின் சைன்ஸ் (signs) படத்தில் மெல் கிப்சன் கதவுக்கு பின்னிருக்கும் ஒரு Alien ஐ தன கையில் இருக்கும் கத்தியை கதவின் கீழ் செலுத்தி அதில் தெரியும் பிம்பத்தை பார்க்கும் காட்சியின் அப்பட்ட நகல்.
நந்தலாலா தொடர்பான சிரிப்பூட்டும் 'கருத்து' ஒன்றை படிக்க 'நேர்ந்தது'. படம் ஒலக தரமாம். இசை மட்டும் ராமராஜன் பட இசையாம். இந்த மாதிரி ஒரு கருத்தை உலகத்தில் வேறு யார் தான் சொல்ல முடியும்?
சுரேஷ் கண்ணன் கிகுஜிரோ படத்தின் சிறப்பான விமர்சனம் ஒன்றை எழுதி இருக்கிறார். அடுத்த பதிவு இரு படங்களையும் ஒப்பிடப்போவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வெறுமே சூப்பர் (அ) சுமார் என்று சப்பை கட்டும் சிலரிடம் இருந்து விலகி எழுதும் சுரேஷின் அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
//மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தில் ஒரு காட்சி: பிரசன்னா ஒரு alien போல் முழங்காலிட்டு நடந்து மூடிய கதவுக்கு பின் உடை மற்றும் பெண்ணை கதவின் கீழ் உள்ள இடைவெளிக்கு அருகே ஒரு சிறு கண்ணாடி கொண்டு 'பார்க்கும்' காட்சி , மனோஜ் நைட் ஷ்யாமளனின் சைன்ஸ் (signs) படத்தில் மெல் கிப்சன் கதவுக்கு பின்னிருக்கும் ஒரு Alien ஐ தன கையில் இருக்கும் கத்தியை கதவின் கீழ் செலுத்தி அதில் தெரியும் பிம்பத்தை பார்க்கும் காட்சியின் அப்பட்ட நகல். ///
ReplyDeleteஇதில் கூறப்பட்டுள்ள கண்ணாடி சமாச்சாரம் மிலிடரியில் கமாண்டோ உத்தி . இதையும் இதில் சேர்க்கலாம்
நந்தலாலாவையும் பார்த்து எழுதுங்கள் சந்திரமோகன்...
ReplyDeleteகண்ணாடி சமாச்சாரம் 'ஆளவந்தானில்' கூட முதல் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
காப்பியடித்தது என்ற கருத்தை தவிர்த்தால்' நந்தலாலா' பாராட்டவேண்டிய முயற்சிதான்!
இசை விமர்சகர் சாருவின் கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் 'கேரளாவிலாவது' பொரிக்கப்படவேண்டியதுதான்!
நன்றி தினா
ReplyDeleteநன்றி ஜீவா சார்..
நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இந்த காட்சியின் பிரத்யேக ஐடியாவின் மூலம் சைன்ஸ் தான். பின்னணி இசையும் கூட அங்கிருந்தே எடுக்கப்பட்டது.
பல புத்தகங்கள், நாவல்கள் வேற்று மொழியிலிருந்து தமிழில் மொழியாக்கப்படுகின்றன. அவற்றை நாமும் விரும்பியே வாசிக்கிறோம். அதே எடுத்தாளுதல் சினிமாவில் இருந்தால் குறையென்ன.. தவிர, தமிழ் சினிமா ரசிகர்கள் உலகப்படக் கதையை அறியும் பொருட்டு அதைத் தமிழில் கொடுத்தல் நல்லது தானே.
ReplyDeleteவருக விக்னேஸ்வரி..
ReplyDeleteபிரச்னை ஒன்றே ஒன்று தான். 'அங்கிருந்து' இறக்குமதி செய்த படைப்புகளை தான் சொந்த படைப்பு என்று சாதித்துவிட்டு பெரிய அறிவு என புகழ் பெறுவது நேர்மையான செயலாகுமா? புத்தகங்கள் மொழி மாற்றம் செய்யப்படும்போது ஆசிரியரின் பெயர் மட்டும் மாறி மொழிபெயர்ப்பாளரே எழுதியது போல் பாவனை செய்வதற்கு ஒப்பானது இது. இதை சுட்டிக்காட்ட வேண்டியதும் முக்கியமே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
aviator படத்தில் டிகாப்ரியோ இப்படிதான் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு போஸ் கொடுப்பார். சந்தநார் காபி அடித்துவிட்டார் ... ஐயகோ!!!!!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் 'கருத்துக்கும்' நன்றி நண்பரே..
ReplyDelete