Sunday, October 17, 2010
இளையராஜா : உயிரில் கலந்த இசை..
ராஜாவின் இசையுடனான உறவு எப்போது துவங்கியது தெரியவில்லை.பள்ளி செல்லும் நேரங்களில் விவிதபாரதி ஒலிபரப்பும் பாடல்கள் என்னை அறியாமலே என்னுள் கலக்க ஆரம்பித்த நேரம். பழைய பாடல்களை இனம்பிரிக்க தெரிந்து வைத்திருந்தேன். சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டும் இன்னதென்று சொல்ல முடியாத அளவு இனிமையாய் இருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன்.
அப்போது இசை அமைப்பாளர் யார் யார் என்றெல்லாம் தெரியாது. 'இளமை இதோ இதோ' என்ற மேற்கத்திய இசை சாயல் பாடலும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற துள்ள வைக்கும் நாட்டுப்புற இசை பாடலும் இந்த பாடல்களுக்கு பின் யார் தான் இருக்கிறார்கள் என்று தேட வைத்தன. வானொலியில் பாடல் பற்றி அறிவிப்பாளர் சொல்லும் விஷயங்களை கேட்க ஆரம்பித்தபோது ஒளிபரப்பாகும் பாடல்களில் எண்பது சதவீதம் உச்சரிக்கப்படும் பெயர் 'இளையராஜா'. இப்போது நினைத்து பார்த்தால் அந்த அறிவிப்பாளர் ராஜாவின் பெயரை ஒரு கனிவுடன் உச்சரித்து போல் தோன்றும். எத்தனை பாடல்கள்.
என் வீட்டில் என் சகோதரிகளும் அண்ணனும் ராஜாவின் மிக தீவிரமான ரசிகர்கள். அவர்கள் தான் ராஜாவின் பாடல்கள் இவை என எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள். மிக பிரபலமாய் இருந்த பாடல்கள் தவிர அவ்வப்போது திருச்சி வானொலி நிலையமும் இலங்கை வானொலி நிலையமும் ஒலிபரப்பும் அரிதான பாடல்கள் தான் என்னை மிகவும் கவர்ந்தன. 'மெட்டி ஒலி காற்றோடு' பாட்டுக்கு முன் ஜானகியும் ராஜாவும் பாடும் ஆலாபனை என்னை ஒரு மயக்க நிலைக்கு தள்ளியது என்றே சொல்வேன். அந்த படத்தில் அவ்வளவு பிரபலமாகாத இன்னொரு பாடல் 'சந்த கவிகள் பாடிடும் மனதினில்' . அந்த பாடலின் முன்னால் வரும் வயலின் இசை , ராஜா இன்று வரை அமைத்த வயலின் இசைக்கோர்வைகளில் மிக சிறந்தது என சொல்வேன். இசை வெள்ளம் என்று சொல்வார்களே.. அதை அந்த பாடலில் கேட்கலாம். அதே போல் மாலை நேரங்களில் எங்கிருந்தோ ஒலிக்கும் 'ஆசைய காத்துலே தூது விட்டு' பாடலின் முகப்பு இசை , அந்த புல்லாங்குழல் முணுமுணுப்பு.....இப்போதும் சிலிர்க்க வைக்கும் 'ராஜ கற்பனை'. ஜானியின் இன்னொரு மிக சிறந்த பாடலான 'காற்றில் எந்தன் கீதம்' இன்றும் பலர் இரவுகளில் இதயம் தொட்டு தூங்க வைக்கும் பாடல். அந்த பாடலின் இடைஇசையின் அற்புதமாக ஒரு புல்லாங்குழல் சற்று சிணுங்கி விட்டு பின்பு இசைக்க தொடங்கும்...ஆஹா என்ன ஒரு கற்பனை.
ராஜாவின் மிக பெரும்பலம் வார்த்தைகளில் கூட வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை தனது இசை மூலம் தருவது தான். அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் அவரது ரசிகர்கள் இன்றும் அவரை ஆராதிப்பதே அதற்காக தான் என்று நம்புகிறேன். மெல்லிய இழை போன்ற உணர்வுகளை அவரது பெரும்பாலான பாடல்களில் , பின்னணி இசையில் கேட்கலாம். அந்த வகையில் எனக்கு பிடித்த பாடல்களை (இப்போது நினைவுக்கு வருபவை) : உறவுகள் தொடர்கதை (அவள் அப்படி தான்) , பனி விழும் பூ நிலவில் (தைப்பொங்கல்) , ஞான் ஞான் பாடணும் (பூந்தளிர்) , வசந்த கால கோலங்கள் (தியாகம்) , மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே (நண்டு) , வான் மீதிலே (ஜானகி பாடியது..) என்று அவரது பாடல்களை பட்டியலிட ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. என்னை பொறுத்தவரை ராஜா எண்பதுகளின் இறுதிவரை தந்த பாடல்களை இனி அவரால் கூட தரமுடியாது என்று தான் நினைக்கிறேன். குறிப்பாக '76 முதல் '86 வரை அவர் இசையில் உருவான பாடல்கள் நிகரற்றவை. இவை எல்லா இசை ரசிகரும் அறிந்த விஷயங்கள். தவிர இசை ரீதியாக ராஜாவின் படைப்பாற்றலை ஆராய்ந்து சொல்லும் இசை அறிந்த ரசிகர்களின் பதிவுகளுக்கு முன்னால் நான் சொல்வது எதுவும் இல்லை. இருந்தாலும் ஒரு கடைக்கோடி ரசிகனாக ராஜாவின் இசை பற்றி எழுத நீண்ட நாட்களாக இருந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஒரு சந்தோஷம்.
அவரை சந்தித்த அனுபவத்தை இந்த பதிவில் எழுதுகிறேன் . ராஜா தீபாவளி நாட்களில் தனது அம்மா சமாதி இருக்கும் கம்பம்-தேனி பகுதிக்கு வருவார் என்று என் இசை நண்பர்கள் புதுக்கோட்டையிலிருந்து ஒரு ஆன்மீக பயணம் போல் கிளம்பி ராஜாவை தரிசித்து விட்டு வருவார்கள். என்னையும் ஒரு முறை அழைத்து சென்றார்கள்.நிர்மல் என்ற ஒரு நண்பரின் வேனில் தான் பயணம். அவரிடம் மிக அரிதான ராஜ பாடல்களின் தொகுப்பு நிறைய இருக்கும். வழியெங்கும் ராஜாவின் இசையில் வந்த அற்புதங்கள் செவிகளை நிறைக்க ..அதிகாலையில் அந்த பகுதி சென்று சேர்ந்தோம். அங்கு ஒரு கண்மாயில் குளித்து விட்டு ராஜாவை பார்க்க அவர் அம்மா சமாதியை அடைந்தோம். அங்குள்ள தனது விருந்தினர் மாளிகையில் ராஜா ஒரு அரைக்கை சட்டையும் வேட்டியும் அணிந்து புதுக்கோட்டையை சேர்ந்த புலவர் வெண்ணரசுவுடன் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னாலேயே புலவர் அங்கு வந்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை . பேசிக்கொண்டே எங்களை திரும்பி பார்த்த ராஜா "எல்லோரும் டிபன் சாப்பிடுங்கள்' என்றார். அந்த நேரத்திலும் அங்கு வருபவர்களுக்காக அருமையான காலை உணவு தயாராய் இருந்தது. அருகில் கேமராவும் கையுமாக அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருந்த ஒருவரிடம் பேசியபோது அவர் ஆனந்த விகடன் நிருபர் பொன்ஸீ என்று தெரியவந்தது. அவரும் எங்களை போன்றே தீவிர ரசிகர். பிறகு ராஜா தன் அம்மா சமாதிக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியதை மெளனமாக பார்த்துகொண்டு நின்றோம். அவரது வெளிநாட்டு நண்பர்கள் இருவர் அந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்தனர்.
பிறகு ராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எல்லோரும் முண்டியடித்தார்கள். எனக்கென்னவோ அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. சில சமயம் அவர் இப்படி போய் நிற்கும் ரசிகர்களிடம் கடிந்து கொள்வார் என்று கேள்விபட்டிருந்ததால் நான் அவரை நெருங்கவில்லை. ஏதாவது நடந்து அவர் என் மனதில் நான் அவரை அமர வைத்திருக்கும் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி விடக்கூடாது என்ற பயம் தான் காரணம். என் மனதிற்கு பிடித்த ஒரு மனிதனை , இணையில்லா கலைஞனை தூரத்தில் இருந்தே தரிசித்துவிட்டு திரும்பினோம். வழி முழுவதும் ....அவர் இசை. 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்'.
Good post Chandramohan.But too short.
ReplyDelete-Ramesh.PC
//ராஜாவின் மிக பெரும்பலம் வார்த்தைகளில் கூட வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை தனது இசை மூலம் தருவது தான். அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் அவரது ரசிகர்கள் இன்றும் அவரை ஆராதிப்பதே அதற்காக தான் என்று நம்புகிறேன்.// thanks for sharing. good post.
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்.. ராஜாவின் பல பாடல்களில் அந்த அதியற்புதம் உள்ளது. ராஜாவின் பலமே மற்றவர்கள் வலிந்து செய்யும் விஷயங்களை எந்த பெருமுயற்சியும் இல்லாமல் , சுவாசிப்பது எப்படி அனிச்சையானதோ அவ்வளவு இயல்பாக, எளிதாக செய்வது தான்.
ReplyDeleteஅன்புள்ள சந்திரமோகன்,
ReplyDeleteநான் கல்லூரியில் முதலாண்டு படிக்கும் போது வருடாந்திர விடுமுறையில் வெளி வந்தது 'அன்னக்கிளி'. படம் ரிலீசாகிப் பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு நண்பன் சொன்னான் ' அன்னக்கிளி என்று ஒரு படம் வந்திருக்குடா. Black & White தான். ஆனாலும் பாட்டெல்லாம் பிரமாதம். ('சூப்பர்' என்ற வார்த்தை தமிழர்களிடையே புழங்கத் துவங்காத நாட்கள் அவை!). மியூசிக் யாரோ புதுசா ஒருத்தர், பேர் இளையராஜாவாம். நான் கேட்டேன் ' யாரு? ஏ .எம். ராஜாவா?' 'இல்லை, இது வேறு யாரோ, புது இசை அமைப்பாளர்.' 'மச்சானப் பாத்தீங்களா'வைக் கேட்டுப் பைத்தியம் பிடித்துக் கிடந்தவர்களில் நானும் ஒருவன். பாடல்கள் மெதுவாகப் பிரபலமாகிப் படம் சூடு பிடிக்க ஆரம்பித்த பிறகு இன்னொரு பாடலைச் சேர்த்தார்கள். 'பச்சச் சம்பா குத்தத்தான் வேணும், இது நம்ம வீட்டுக் கல்யாணம்...' 1976 May இல் இப்படி ஆரம்பித்த இளையராஜா அடுத்ததாக ' கொல கொலயா முந்திரிக்கா ' என்று ஒரு அச்சு அசலான கிராமியப் பாடலைத் தந்தார். பின்னாட்களில் இசையில் மிகப் பெரும் சிகரங்களை அநாயாசமாகத் தொட்டார் என்பது வரலாறு!
அன்புடன்
சினிமா விரும்பி
//பின்னாட்களில் இசையில் மிகப் பெரும் சிகரங்களை அநாயாசமாகத் தொட்டார் என்பது வரலாறு! //
ReplyDeleteஆஹா.. மிக அருமையான வார்த்தைகள் சினிமா விரும்பி சார்..ராஜா தன் தளத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார். இருக்கிறார். அவர் இசையின் மூன்று முக்கிய தளங்களில் மிக உறுதியாக காலூன்றினார். கிராமியம், கர்நாடக இசை, மேற்கத்திய இசை - இவற்றில் ராஜா படைப்பு ரீதியாக மட்டுமல்லாமல் வணிகரீதியாகவும் பெற்ற வெற்றியின் அடையாளங்களாய் இந்த உதாரணங்கள்: கரகாட்டக்காரன், சிந்து பைரவி, அக்னி நட்சத்திரம். என்ன ஒரு உழைப்பு .. சாதனை.
//அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் //
ReplyDeleteநண்பர் சந்திரமோகன்... இளையராஜாவின் எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் இசைக்கு நான் அடிமை.. அவரது அக்காலத்திய பாடல்களில் அவர் செய்திருந்த பரிசோதனைகள், அட்டகாசமாக இருக்கும். இந்த வகையில் எனக்குப் பிடித்த பாடல்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை போன்ற படங்களின் பாடல்கள் (இவை அனைத்திலும் பாரதிராஜா சம்பந்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்).. இந்தக் கூட்டணியின் பாடல்கள், இன்றும் அருமையாக இருக்கும்..
நீங்கள் மேலே சொல்லியுள்ளபடி, அவரது சகாப்தம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் இப்பாடல்கள் இன்னமும் அவரை நினைக்க வைக்கின்றன ..
////அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் ///
ReplyDeleteஇன்னுமா இதற்கு ஆட்சேபம் வரவில்லை? சே! எந்த மாதிரியான பதிவுலகத்தில் நாம் இருக்கிறோம்? :-))
சந்திரமோகன்: நாம் அவ்வப்போது ஒரே அலைவரிசையில் சந்தித்து விலகுவது ஆறுதலாக இருக்கிறது. இப்படியெல்லாம் நாம் உணர்ந்ததை பிரத்யேகமாக வெளிப்படுத்துவதற்கான சூழல் இல்லாதிருப்பது இருப்பது துரதிர்ஷ்டம். சிலர் இந்த மாதிரியான 'தனிநபர் பார்வையை' பொதுவானதாக எடுத்துக் கொண்டு பலத்த ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். அவரவர்களின் தருக்க சட்டகங்கள் வேறு வேறு மாதிரி இருக்கக்கூடிய சாத்தியத்தை இவர்கள் மறுப்பதுதான் துரதிர்ஷ்டம்.
மற்றபடி ராஜாவின் இசையைப் பற்றி யார் எழுதினாலும் பின்னணயில் அவருடைய இசை ஓடிக் கொண்டிருக்க வாசித்துக் கொண்டே இருக்கலாம்தான். உங்களுடைய கட்டுரை சிறப்பாக இருக்கிறது.
நல்லதொரு பகிர்வு நண்பரே. இளையராஜாவின் இசை இன்பத்தை உணராதவர்கள் இருக்க முடியாது என்பது உண்மை.
ReplyDeleteஅன்புள்ள ராஜேஷ்...
ReplyDeleteராஜா கடுமையான பரிசோதனைகள் செய்திருக்கிறார் என்று இசை அறிந்த நண்பர்கள் சொல்கையில் ஆச்சர்யமாக இருக்கும். அதுவும் ராஜா தனது படைப்புலகின் உச்சத்தில் இருந்தபோது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் படங்களுக்கு இசைஅமைத்த போது செய்தார் என்பது என்னை இன்னும் வியக்கவைக்கிறது. பாரதிராஜா , பாலுமகேந்திரா, மகேந்திரன் .. பின்னாட்களில் மணிரத்தினம் போன்றோரோடு இணைந்து அவர் தந்த பாடல்கள் மிக சிறப்பானவை.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புள்ள சுரேஷ்கண்ணன்,
ReplyDeleteஎனது நெருங்கிய நண்பர்கள் (ராஜா ரசிகர்கள்) இன்னும் ராஜாவின் இசை தனது படைப்பாற்றலை இழக்கவில்லை என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு ராஜா தனது இசை மூலம் ரசிகர்களை பெற்றிருக்கிறார். இசையில் உணர்வுகளை தர தெரிந்த மிக அபூர்வமான கலைஞர்களில் ஒருவர் ராஜா.
விவாதங்களை தனிமனித தாக்குதலாக எடுத்துக்கொள்பவர்களையும் மாற்றிக்கொள்பவர்களையும் புறக்கணிப்பதே சிறந்தது.
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
அன்புள்ள வெங்கட்..
ReplyDeleteராஜாவின் இசை இன்பத்தை உணராத தென்னிந்தியர்கள் இருக்கவே முடியாது. பாவம் நம் வடக்கத்தியர்கள் .. அவர்களுக்கு நம் ராஜாவின் இசை வீச்சு புரியாதது அவர்களுக்கு பெரும் இழப்பே.
மிக்க நன்றி.
//நான் அவரை நெருங்கவில்லை. ஏதாவது நடந்து அவர் என் மனதில் நான் அவரை அமர வைத்திருக்கும் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி விடக்கூடாது என்ற பயம் தான் காரணம்//
ReplyDeleteஇதே வகையான அச்சம் நான் விரும்பும் மனிதர்களிடம் எனக்கும் உண்டு சந்திரமோகன்.அகலாமல் அணுகாமல் தீக்காய்வது போல அப்படிப்பட்டவர்களை எட்டியிருந்து பார்த்து விட்டு என் உள்மன பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டு விடுவேன்.அதே குணம் உங்களிடமும் என்பது வியப்பான ஓர் ஒற்றுமைதான்.
ராஜாவின் ரசிகையான எனக்கு உங்கள் கட்டுரை மிகுந்த மன நிறைவை அளித்தது.பாராட்டுக்கள்.
மிக்க நன்றி அம்மா..
ReplyDeleteநமக்கு பிடித்த மனிதர்களிடம் இருந்து சற்று விலகி நிற்பது இரு தரப்புக்கும் நல்லது. நீங்களும் என்னை போன்றே இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.
உயர்வான ரசனை உள்ள அனைவருக்கும் பிடித்த கலைஞர்களில் ராஜாவுக்கு தனி இடம் உண்டு என்று நீங்களும் அவரது ரசிகையாய் இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாகிறது.
எவ்வளவு தைரியம்?
ReplyDeleteஎடுத்த எடுப்பில் தலைப்பில் இளையராஜா என்று எழுத எப்படி மனம் துணிந்தது? ராஜா என்றல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும்?
ஷா(ஜஹான்)
மதிப்புக்குரிய ஷாஜஹான் சார்..
ReplyDeleteதலைப்பிலாவது அவர் முழுப்பெயரை சொல்லலாம் என்று நினைத்தேன்.
எப்போதும் ராஜா ராஜா தான்.
ஒரு முறை நண்பரின் மூலம் அவரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து, பின் கைநழுவிப் போனது... என்றாவது ஒருநாள் நிச்சயம் பார்க்க வேண்டும்.
ReplyDeleteநண்பரே
ReplyDeleteராஜா சார் போல தொலைநோக்கு இசையை இந்திய சினிமாவுக்கு எந்த விதமான திருட்டும் இன்றி அளித்தவர்கள் எவருமேயில்லை, வட நாட்டு திருட்டு இசை அமைப்பாளர்களுடன் இசைஞானியை கம்பேர் செய்வது உண்மையான கலைஞனுக்கு இழுக்கு என்பேன்.இசைஞானி ஒரு சுயம்பு.எத்தனையோ முன் மாதிரிகள்,தாக்கங்கள் விதையாக இவருள் விழுந்திருந்தாலும்,போட்டது ஒன்று முளைத்தது வேறொன்று என்னும் விதமாக 30 வருடம் இசையமைத்தார்,இவர் போல எக்ஸ்பெரிமெண்டலாக இசையமைத்தவர்கள் இனி வருவாரா?சான்சே இல்லை,அவருடைய இசையை கேட்டு வளர்ந்தேன் வாழ்ந்தோம் என்பதை நினைப்பதே பெருமையாக கருதுகிறேன்.வாழ்வின் எந்த சூழலுக்கும் பொருத்திப்பார்க்க கூடிய ஒரு இசை.இப்போது கொஞ்ச காலம் பல கவனச்சிதறலகளால் தடுமாறினாலும் பழசிராஜா போன்ற காலத்தால் அழியாப்படைப்புகளில் மிளிர்ந்துள்ளார்.அழகர்சாமிகுதிரையில் இவரை சுதந்திரமாக பணியாற்றவிட்டால் என்ன மாதிரி ஒரு அதிசயம் நடத்துவாரோ?
தவிர எத்தனை பேர் நந்தலாலாவை கேட்டிருப்பார்கள்,அதை கேட்டு விட்டு பேசவேண்டும்,இன்றைய உலகில் ஒருவருக்கு பொறுமைக்கு பதிலாக பொறாமையே இருக்கிறது,பேனாவை எடுத்து கிழித்துவிடுகின்றனர்.இல்லை கீபோர்டு வழியே வாந்திஎடுத்துவிடுகின்றனர்.ஒருவரை குறை சொல்வதற்கு முன்னர் அதற்கான தகுதி தமக்கு இருக்கிறதா?என்று யோசிப்பதே இல்லை.இது எல்லோருக்குமே பொருந்தும்.நல்ல கட்டுரை,நன்றி
நண்பர் சந்திரமோகன்,
ReplyDeleteராஜாவின் இசை கதையுடன் சேர்ந்து பயணித்த போதும் பல வித பரிசோதனைகளையும் செய்து கொண்டே இருக்கிறது,மேலும் உணர்வுகளை மிக கச்சிதமாக வெளிப்படுத்துகிறது . நான் அனுமானித்த பல பாடல்களில் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் ஏ மரிகொழுந்து ஒரு உதாரணம்.
தோழியர்கள் இருவர் கிராமத்து குளத்தடியில் துவைக்க வருகிறார்கள். இரு தோழியர்களுக்கு இடையேயான உரையாடல் அந்த இருவரில் ஒருத்தியின் காதலனைப் பற்றியதாக சூழல் அமைந்திருக்கும். இதை முதலில் உரையாடல் வடிவிலேயே ஆரம்பித்து பின் பாடலுக்குள் மிக அழகாக சங்கமம் ஆகி இருக்கும்.
பாடலின் துவக்கமானது, நீர் சலசலக்கும் ஓசையுடன் குயில்களின் சிணுங்கலுடன் இருவரும் துவைக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களது துவைக்கும் சத்தமே பாடலின் தாளக்கட்டாக அமைகிறது. இருவரும் நெருக்கமாக நின்று கொண்டு உரையாடவில்லை. எப்பொழுதும் ஆற்றில் துவைப்பவர்கள் ஒருவருக்கொருவர் தள்ளி நின்றே துவைப்பர் . அதை நினவு கொண்டால், இந்த பாடலின் சுருதி சத்தம் போட்டு ஒருவரை அழைப்பது போன்றே இருக்கும்.
துவைக்கும் ஓசையுடன் துவங்கும் உரையாடலானது,
"ஏ மரிகொழுந்து" என்று ஒருவர் விளிக்க,
"என்னம்மா கிருஷ்ணவேணி" என்று ஒருவர் சற்றே தொலைவில் இருந்து பதில் அளிப்பார்.
"உன் மனசுக்குள்ளே" என்று முதலாமவர் கேள்வி கேட்க
"உள்ளத நீ கண்டுபிடி" என்று இன்னொருவர்புதிர் போட
"ராசாதி ராசா பறிச்சி வச்ச ரோசா" என்று மீண்டும் முதலாமவர் நினைவு படுத்த
"ராவானா போதும் நடுங்குதம்மா லேசா" என்று இரண்டாமவர் அவரது பிரிவை உணர்த்த
"ஆமாமா அது சுகந்தானம்மா" என்று முதல் தோழி ஆமோதிக்க
"என் மாமா எப்ப வருவாரம்மா" என்று தன் வேதனையை வெளிப்படுத்தும்போது உரையாடல் முடிவடைகிறது.
துவைக்கும் தாளக்கட்டு அத்துடன் முடிந்து மெல்லிய கிடார் இசையானது மனதை வருடிச் செல்ல பாடலுக்குள் சங்கமிக்கிறது.
இதில் ராஜா உணர்த்துவது எளிய மனிதர்களின் வாழ்வு மட்டுமல்ல, இசையும் இயற்கையோடு இணைந்து இருக்கிறது என்பது சேர்த்து தான். மேலும் அனைத்து இசைகளையும் ஒரே மட்டத்தில் வைத்து நோக்கும் ஒரு ஒப்பற்ற மனநிலை. அதனால் தான் இந்த கிராமத்து தாளக்கட்டில் அமைத்த பாடலை மேற்கத்திய மினி சொனாட்டாவாக மெல்லிய கிடாரின் மூலம் கடத்துகிறார். எந்த இடத்திலும் ஒரு சிறு தொய்வு இல்லாமல் பாடலின் ஆதாரமான மெலடியை சிதைக்காமல் பயணிப்பதை எப்படி விவரிப்பது?
இவை அனைத்தும் ராஜாவிடம் இருந்து தற்போது காணாமல் போய் விட்டது போன்று ஒரு மாயத்தோற்றத்தை பலர் உருவாக்க முயல்கிறார்கள் பல காரணங்களுக்காக. அதைப்பற்றி அடுத்த பின்னூட்டம் .
அன்புடன்
ஸ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்..
ReplyDeleteநீங்க எழுதியதே ஒரு சிறப்பான கட்டுரையாக இருக்கிறதே. உண்மை தான் .ராஜா செய்த பரிசோதனைகள் கூட மக்களுக்கு எளிதாய் தெரியும் வண்ணம் அமைந்ததே அவரது மேதைமைக்கு சான்று . உங்கள் அடுத்த பின்னூட்டத்தையும் எழுதுங்கள். நான் அதை தனி பதிவாகவே இடுகிறேன். உங்கள் வலைப்பூ இருந்தால் அதிலும் எழுதுங்கள். இணைப்பும் தாருங்கள்.
மிக்க நன்றி..
(ராஜா தன் பாணி இசையை தருவதில்லை என்ற வருத்தம் , கோபம் எல்லாம் எனக்கும் இருக்கிறது..:) )
நண்பர் சந்திரமோகன் ,
ReplyDelete//அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் //
இதை நீங்கள் கையாண்டது வேறு வகையில் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும் சுரேஷ் கண்ணன் அதை தனக்கு சாதகமாக்கி அது "தனிநபர் பார்வை" என்றொரு வாதத்தையும் வைக்கிறார்.
தனி நபர் பார்வை என்பது "அவரது யுகம் முடிந்து விட்டதென்று நான் கருதுகிறேன்". ஆனால் நண்பர் சுரேஷ் கண்ணன் அவருடைய தளத்தில் இது குறித்து எழுதிய கருத்துக்களில் தனி நபர் பார்வையாக எதுவும் முன்வைக்கவில்லை. அப்படி தனி நபர் பார்வை என்று கருதும் பட்சத்தில் அது என் பார்வை என்று நீங்கள் சொல்வதை யார் தடுத்தார்கள்?
போகட்டும், நான் கூற வந்தது அதுவல்ல. நண்பர் கீதப்பிரியன் நந்தலாலா படத்தின் இசை பற்றி குறிப்பிடிருந்தார். அது சுரேஷ் கண்ணன் சொல்வது போல ராஜாவின் யுகம் முடிந்து இருபது ஆண்டுகள் கழித்து வெளிவந்த திரைப்படம். அந்த திரைப்படம் இன்னும் விளியாகவில்லை .
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து பாடலில் ஒரு innocent மனநிலை பாடல் முழுதும் வெளிப்பட்டிருக்கும் , அதில் ஒரு innocent பாத்திரமானது தன் பயணத்தின் போது வெளிப்படுத்தும் குதூகலத்தை பாடல் முழுவதும் உணர்த்துகிறது.
பாடலின் மெட்டு நீளமாக இல்லாமல் குறுகி வெட்டி வெட்டி அடுத்த அடிக்கு செல்வதை உணரலாம். இது குழந்தை மனநிலையில் இருக்கும் ஒருவர் அடுத்தடுத்த விசயத்திற்கு உடனே உடனே சென்று விடுவதை உணர்த்துகிறது.
உதாரணம் வேண்டுமானால்,
வானம் ரொம்ப பழையது,
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே
இன்று பிறந்து வந்தது
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவை பொருத்தது
என்ற வரிகளில் வரும் மெட்டுக்களின் மூலமும்
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிப்போகும் நம் வழி
என்ற மெட்டில் அந்த பாத்திரம் தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி தன் உள்ளக்களிப்பை வெளிப்படுத்தும் உணர்வை புரிந்து கொள்ளலாம்.
இங்கே எந்த இடத்திலும் ராஜா பாடலுக்குத் தேவையான உணர்வை வெளிப்படுத்த தவறவில்லை. மேலும் அவரது முத்திரையான மெலடியையும் எங்கும் தவற விடவில்லை .
நண்பர் சுரேஷ் கண்ணன் தளத்தில் நானும் ஓரிருமுறை ராஜாவைப் பற்றிய அவரது கருத்துக்கு பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். இப்பொழுது நான் கேட்பது, ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு உட்பட்டு ராஜா வெளிப்படுத்த முடியாமல் போன உணர்வுகளை நீங்கள் குறிபிட்டால் மட்டுமே ராஜாவின் "யுகம்" முடிந்து விட்டதாக நீங்கள் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்கும் .
அன்புடன்
ஸ்ரீதர்
நன்றி நண்பர் சந்திர மோகன்,
ReplyDeleteநான் எந்த தளமும் வைத்துக் கொள்ளவில்லை. உங்களது தளத்தை ஆரம்பம் முதலே வாசித்து வருகிறேன். ஷாஜி பற்றிய உங்கள் பதிவு நான் ரசித்தவைகளுள் மிக முக்கியமானது. நீங்கள் தனி பதிவாக இடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இரண்டு பின்னூட்டத்தில் உங்களுக்கு உகந்ததை எடுத்துக்கொள்ளவும் வேண்டாததை நீக்கிக் கொள்ளவும் வார்த்தைகளை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முழு உரிமை உண்டு.
Sridhar
max_sridhar@yahoo.com
எனக்கொரு ஆச்சர்யம் நண்பர்களே.. முடிந்தால் விளக்குங்கள்.இசைப்பற்றிய கல்வியறிவு இல்லாத நாம் இந்த அளவுக்கு நுணுக்கி ரசித்திருக்கிறோம் என்றால்.. அம்மாதிரியான இசையை கேட்டுவளர்ந்த சமீபகால இசையமைப்பாளர்கள் ஏன் இவ்வளவு மட்டமாகவும் சரக்கு நீர்த்து போய் கிடக்கிறார்கள்... இரண்டு படங்களுக்கு மேல் ஒருவரும் தேறவில்லை.. ரஹ்மான் தவிர.. அவர்கூட என்னளவில் பெரிய இசையமைப்பாளராக எனக்கு தோன்றவில்லை.. ராஜா மிகசிறிய படங்கள் தயாரிப்பாளர்கள்,இயக்குநர்களுக்குத்தான்(கூட) மிக அற்புதமான பாடல்களை அள்ளிக்கொடுத்துள்ளார்.. (உ.ம்.ஆனந்தஆராதனை,தைப்பொங்கல்,பொண்ணுஊருக்குபுதுசு,பொங்கிவரும் காவேரி)கொஞ்சம் முடிந்தால் விளக்குங்களேன்.
ReplyDeleteஇந்த ராசாவ நம்பி வந்த யாரும் மோசமே போனது இல்லே இல்லே... அதான் சிறிய தயாரிப்பாளருக்கும் ஹிட் பாடல்கள். கமல் இதை நன்கு புரிந்து கொண்டவர். ரஹ்மானை டிரண்டிற்காக கொண்டு வந்தாலும் மணிரத்னம் ராசய்யாவை என்றேனும் நாடுவார்... மீண்டும்.
Delete//அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் அவரது ரசிகர்கள் இன்றும் அவரை ஆராதிப்பதே அதற்காக தான் என்று
ReplyDeleteநம்புகிறேன்// ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து, சமீப காலமாக அவர் மலையாளத்தில் தொடர்ந்து இயக்குனர் சத்யன் அந்திக்காடு உடன் சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். தமிழிலும் பல ஹிட்கள் 1990க்கு பிறகு கொடுத்திருக்கிறார்
காலையிலேயே இதமான தேநீரோடு
ReplyDeleteராஜாவின் கட்டுரையைப் படிக்க சுகமாக இருந்தது.
ஸ்ரீதரின் பின்னூட்டம் அருமை
ReplyDelete//அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் அவரது ரசிகர்கள் இன்றும் அவரை ஆராதிப்பதே அதற்காக தான் என்று
ReplyDeleteநம்புகிறேன்//
90க்கு பிறகு ராஜாவின் பாட்டுக்களை கேட்கவில்லையா?
பிதாமகன், நான்கடவுள் எல்லாம் வந்து இருபது வருடமாகவில்லையே!!
கட்டுரை நன்றாக இருக்கிறது.
நண்பர் சந்திர மோகன் அவர்களுக்கு,
ReplyDelete-----------------------------------------------------------------------------
என்னுடைய முந்தய பின்னூட்டங்களையும் இத்துடன் சேர்த்துக் கொண்டு , தேவையானதாக நீங்கள் கருதுவதை வைத்து உங்கள் கருத்துக்களுடன் சேர்த்து ஒரு முழு இடுகையாக பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் மின்னஞ்சல் பார்த்த பின்பே நான் நந்தலாலா வின் மெல்ல ஊர்ந்து பாடல் மட்டும் போதவில்லை என்பதை உணர்ந்தேன்.நான் முன்னரே கூறியது போல நண்பர் சுரேஷ் கண்ணன் பற்றிய சில வரிகளை நீக்கி விடுங்கள் அல்லது மாற்றிக் கொள்ளுங்கள் .
-------------------------------------------------------------------------
நான் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம் என்றே நினைக்கிறேன்,முக்கியமாக ராஜாவின் "யுகம்" முடிந்து விட்டதாக சிலர் முன்வைக்கும் கூற்றுக்கள் பற்றி. ராஜாவின் படைப்புக்கள் நம் முன் விரிந்திருக்கிறது. அதில் 90 களின் பிற்பகுதில் இருந்து வெளியான சில பாடல்கள் பற்றி என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலில் பழசிராஜாவின் ஆதியுச சந்திய பூததிவிடே பாடல் .இதைப் பற்றி ராஜா விரிவாகப் பேசி பதிவு செய்திருக்கிறார். அது youtube தளத்தில் கிடைகிறது. ஒரு போர் வீரன் தன் மண் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்த வேண்டிய அதே நேரத்தில் அவர் மீண்டும் வெள்ளையர்களை எதிர்த்து போரிட வேண்டிய உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும். "ஆதியுச சந்த்யா பூத்ததிவிடே" என்று உயிரை உருக்கும் மெட்டு, ராணுவ வீரர்களின் நடையைத் தாளமாகக் கொண்டு இரண்டு வித உணர்வுகையும் ஒருங்கே படைத்து ராஜா தன் முன்னால் வைக்கப்பட்ட சவால்களை அனாயசமாகக் கடக்கிறார் .
இன்னொரு மலையாளத் திரைப்படம் rasathanthiram திரைப்படத்தில் வரும் தேவாரம் நோக்கு என்ற மிகச் சிறந்த இசைக்கோர்வைகளைக் கொண்ட பாடல். இந்த திரைப்படம் பார்ப்பதற்கு முன்னரே இந்த பாடல் ஒரு travelling மனநிலையை கொண்டு செல்வதை என்னால் உணர முடிந்தது. திரைப்படம் பார்த்த பிறகு, வேலைக்கு மிதிவண்டியில் பயணிக்கும் ஆசாரிகள் பாடுவதாக அமைந்த பாடல் என்பதை நிச்சயப் படுத்திக் கொண்டேன் . இந்த பாடலின் ஒரே ஒரு நொடி கூட தொய்வு ஏற்படுவதில்லை. நான் மிகைப்படுத்தவில்லை,இந்த குறிப்பிட்ட பாடலை ஒரே மூச்சில் எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் கேட்க முடிகிறது. எத்தனை விதமான கற்பனைகள்? ராஜாவின் படைப்பாற்றல் தளரவில்லை என்பதற்கு அவரது தொய்வில்லாத இசைக்கோர்வைகளே சாட்சி. இதே போல இன்னொரு மலையாளப்பாடல் அள்ளிப்பூவே மல்லிப்பூவே.
அன்புடன்
ஸ்ரீதர்
அவரது படைப்பாற்றல் பற்றி சொல்லும்பொழுது அவரது மெட்டுக்கள் மாறும் வேகம் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. நன்னவனு என்ற கன்னட திரைப்படத்தில் வரும் ஒரு சிவ ஆராதனை தெருப்பாடல். அதில் மேளங்கள் சங்கு மற்றும் மணியோசையுடன் துவங்கும் கோரஸ் "டண்டர டமரு டரி தண்டாரோ எல்லரு மனிகே சிவ பந்தாறு" என்ற வரிகள் இரண்டாக உடைந்து "டண்டர டமரு" என்ற வார்த்தைகள் ஒரு மெட்டிலும் "டரி தண்டாரோ" என்பது இன்னொரு மெட்டிலும் ஒலிக்கும். இப்படியே தொடரும் பாடல் வேறு வேறு மெட்டுகளுக்கு மாறி ஒரு அதிவேக தாளக்கட்டில் கோரஸ் குரல்கள் நிறைவு செய்ய S P B யின் குரலில் ஒலிக்கும் "ஓம் சிவோ ஹம் சிவோ மஹா" என்ற உச்ச ஸ்தாயி வரிகளுடைய மெட்டு, இந்த பாடலை விவரிக்க இயலாத வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. இதை அவர் முன்பும் பலமுறை செய்திருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த இளமையெனும் பூங்காற்று பாடல் பல்லவியில் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு மெட்டைக் கொண்டு இசை அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு பாடல்களும் வெவேறு கால கட்டங்கள் தான். இசை வடிவங்கள் மாறி இருக்கலாம். ஆனால் ராஜாவின் கற்பனை வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?
ReplyDeleteதமிழ் திரைப்படங்களில் நான் கடவுள் திரைப்படத்தின் ஓம் சிவோ ஹம் என்ற பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த வரிகள் பொறுமையாக நிறுத்தி உச்சரிக்கும் பட்சத்தில் இது ஒரு மந்திரம் அல்லது வடக்கதியர்களுக்குப் பழக்கப்பட்ட பஜன் . ஆனால் பாலாவின் ஆண்மை திரண்ட நாயகன் அகோரிக்கு இது எப்படிப் பொருந்தும்? உணர்வுகள் பொங்கிப் பிரவாகமெடுக்கும் மெட்டு உடுக்கையுடன் சேர்ந்து கோபக் கனலைத் தெறிப்பது, ராஜாவின் கற்பனை வளத்தால் மிக இயல்பாக interprate செய்கிறது.
ராஜாவின் திருவாசகம் என் மனதுக்கு நெருக்கமானதல்ல, ஆனால் அவரது இசையிலமைந்த அக்கா மகாதேவியின் வசனங்கள் பற்றிய documentary யில் இருந்து inspiration ஆக வைத்துக்கொண்டு [நன்றி நண்பர் புலிகேசி] எந்த வித வர்ணப்பூசுகளும் இல்லாமல் மிக நேர்மையாக திருவாசகத்தைப் படைத்திருக்கிறார். இரண்டு தொகுப்புகளையும் ஒன்றாக வைத்துக் கேட்பவர்கள் இதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். அக்கா மகாதேவியின் தொகுப்பில் ஒவ்வொரு பாடலும் எனக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்வதற்கு ராஜா அந்தப் படைப்பை எளிமைப் படுத்தி இசை அமைத்தது தான் காரணமாக இருக்க முடியும். என் விருப்பு சார்ந்து திருவாசகத்தை எடை போடுவது நியாயமாக இருக்க முடியுமா? அது போல் தான் தனிப்பட்டவரின் கருத்துக்கள் அது அவர்களுக்கானதே. தன் கருத்து என்பதை பொதுக்கருதாகத் திரிப்பவர்கள் தான் இங்கே ஏராளம்.பலருக்கும் ராஜாவின் மீது பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ராஜாவின் படைப்பாற்றலைக் கொண்டு ராஜாவின் யுகத்தைக் கணக்கிட விரும்புவர்கள், அவரது காலம் முடிந்து விட்டதாக நினைக்க விரும்ப மாட்டார்கள். அவரது பாடலுக்குக் கிடைக்கும் விளம்பரங்கள், அதன் மூலம் அவர் பெரும் வர்த்தக லாபங்களை வைத்துக் கணக்கிட விரும்புவர்கள் வேண்டுமானால் அவரது "யுகம்" முடிந்து விட்டதாக உரக்க கத்திக் கொண்டிருக்கட்டும். நம்மைப் போன்ற ரசிகர்கள் நேர்மையான படைப்புகளைத் தலையில் வைத்துக் கொண்டாடலாம். வேறு என்ன செய்ய?
அன்புடன்
ஸ்ரீதர்
நண்பர் ராஜா,
ReplyDeleteநீங்கள் கேட்கும் கேள்வி மிக நீண்ட விவாதத்திற்குரியது. ஆனால் ஒரு சில கருத்துக்கள் மட்டும் இப்போது. படைப்புக்கு ராஜா நியாயமானவராக நடந்து கொண்டதனால் தான் எளிய ரசிகர்களான நம்மால் உணர்வுகள் ததும்பி வழியும் இசைக்குள் மிக எளிதாக பயணம் செய்ய முடிகிறது. பவதாரிணி நடத்திய nothing but wind கான்செர்டில் இன்றைய இசை அமைப்பாளர்கள் ஏணியில் ஏறுவதற்கு பதில் இறங்கிக் கொண்டிருகிறார்கள் என்று வருத்தப்பட்டார். வித்யாசாகர் போன்ற சிலரைத் தவிர யாரிடமும் படைப்பு குறித்த கவலை இருக்கவில்லை, ராஜாவின் புதல்வன் உட்பட. ஆனால் M S விஸ்வநாதன் மற்றும் அவர் தலைமுறை இசை அமைப்பாளர்களுக்கு அந்த கவலை இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கண்டடைந்தது இளையராஜாவை.
அன்புடன்
ஸ்ரீதர்
என்ன சந்துரு எஸ்.எஸ்.டீக்கடை வாசல்ல விடிய விடிய உக்காந்து ராசாவைப் பற்றி மட்டும் பேசிகிட்டு இருப்போமே, அதை எழுதாம விட்டீயே???
ReplyDeleteமிக மிக அழகான பதிவு சார்!
ReplyDeleteராஜா சார் இசை இந்த உலகில் என்றென்றும் நிலைத்திற்கும்! :)
http://cartoonian-bala.blogspot.com/2011/05/loving-maestro-ilayaraja-sir.html
ராஜா சார் ரசிகனுக்கு ! :)
- பி.சி.பாலசுப்பிரமணியம்
மிக்க நன்றி பாலா..
ReplyDeleteஉங்கள் கார்ட்டூனை ரசித்தேன்..அருமை..!!! ராஜா நம்மை 'எங்கெங்கோ கொண்டு செல்கிறார்'..
ராஜா ராஜா தான் .
ReplyDelete