Sunday, October 31, 2010
இளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம்
ஜென்டில்மேன் வந்த புதிது. அப்போது டெல்லியில் இருந்து வந்திருந்த என் அண்ணனை பார்க்க அவரது டெல்லி தமிழ் நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ராஜாவின் இசையில் ஒரு பிடிப்பு இருந்தாலும் மைக்கேல் ஜாக்சன் பித்து பிடித்து திரிந்து கொண்டிருந்த நேரம். கிட்டத்தட்ட மைக்கேல் தமிழில் பாடுவது போன்ற உச்சரிப்புடன் சுரேஷ் பீட்டர்ஸ் பாடும் 'சிக்கு புக்கு ரயிலின்' ரசிகன் அப்போது நான். அதே போல் 'வீர பாண்டி கோட்டையிலே' பாடலின் கம்பீர இசையும் என்னை ரஹ்மான் பக்கம் இழுத்துக்கொண்டிருந்தது. அப்பொழுது வெளியாகி இருந்த ' உழைப்பாளி' A சைடும் 'திருடா..திருடா' B சைடும் இருந்த கேசட்டில் A சைடு பக்கமே போகாமல் ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டு மகிழ்ந்து கொண்டிருப்பேன். என் அண்ணனின் நண்பர் ரவி என்பவர் 'இந்த கேசட்டை கேட்டிருக்கியா? இளையராஜா நாலைந்து வருடங்களுக்கு முன் போட்ட ஆல்பம்..' என்று கொடுத்த கேசட்டில் ராஜா தன முகவாயை கையால் தாங்கியபடி இருக்கும் படம். 'How to name it!'. கர்நாடக இசை நன்கு அறிந்த அவர் 'இதை கேள்..அப்புறம் பேசலாம்' என்றார். அன்றைய இரவு இசையின் ஒரு மாபெரும் அதிசயத்தை உணர்ந்தேன். ஒற்றை வயலின் உயிரை உருக்கும் இசையில் தொடங்க , காத்திருந்தது போல் இன்னும் பல வயலின்கள் சேர்ந்து இசைக்க அந்த இரவில் ஒலித்த இசை இன்றும் என் பல இரவுகளில் ஒரு பெரும் துணையாய். ரவி அண்ணனிடம் ராஜா பற்றிய பல தகவல்கள் இருந்தன. கேட்க கேட்க அதிசயமாய் இருக்கும். பிரபலமாகாத பல பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் அவர்.
உண்மையை சொன்னால் ரஹ்மான் வந்த பிறகு தான் தீவிர ராஜா ரசிகனானேன். பாலச்சந்தருக்கும் மணிரத்னத்துக்கும் நன்றி. ஒரு மாபெரும் கலைஞனை காலமும் அவரின் 'நண்பர்களும்' சேர்ந்து வீழ்த்த ஆரம்பித்த நேரம். ராஜாவின் இசையில் வெளிவந்த பல பாடல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தவறிய காலம், என்னை போன்ற எல்லோரையும் போலவே அப்போது தான் அவரது இசையை நேசிக்க ஆரம்பித்தேன். அவரது பழைய இசையை, திரும்ப கிடைக்க முடியாத பொக்கிஷ இசையை.
தொண்ணூறுகள் ரஹ்மானின் பொற்காலம் என்றாலும், ராஜாவின் (வணிகரீதியான) சரிவுக்கு மிக முக்கிய காரணம், 'ஏழைகளின் இளையராஜா' தேவா தான் என்பேன். ராஜாவின் நகலாகவே உள்ளே நுழைந்த தேவா, பின்னர் ராஜாவுக்கு ஒரு எளிய மாற்றாகவே மாறினார். ராஜாவின் ரசிகர்கள் தான் என்றாலும் நண்பர்கள் என் இந்த கருத்தை மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். என்ன காரணம் சொன்னாலும் 'ரோஜாவில்' ரஹ்மான் வந்ததில் இருந்து ராஜா கொஞ்சம் கொஞ்சமாக தன பிடியை விட துவங்கினார் என்பது உண்மையே. உண்மையில் 'சின்ன சின்ன ஆசை' பாடலை கேட்கும்போது அது இளையராஜாவின் இசை என்றே நினைத்தேன். மணிரத்னத்தின் 'வித்தியாச' படங்களுக்கு ராஜா புதுவித இசை தருவது வழக்கம் என்பதால் எனக்கு அப்படி தான் தோன்றியது. பிறகு தான் இருபத்தி நான்கே வயதான ஒரு இளைஞன் தந்த இசை என்று தெரிந்த போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. 'புது வெள்ளைமழை' இன்றும் என் பெரு விருப்பப்பாடல். பிறகு ஓரிரு வருடங்கள் ராஜா முனைப்புடன் இயங்கினாலும் பிறகு அவரது இசையில் ஒரு தொய்வு ஏற்பட துவங்கியது. தேவர் மகன் போன்ற படங்களில் அவரது இசையின் கம்பீரம் மற்ற படங்களில் இல்லாதது ஒரு பெரிய எதிர்பாராத (ஏ)மாற்றம். ஓரிரு வருடங்களுக்கு முன் வெற்றியடைந்த சின்ன தம்பி, சின்ன கவுண்டர் போன்ற படங்களின் பாதிப்பிலேயே பல கிராமியம் சார்ந்த படங்கள் வெளியாகின அப்போது . இசைக்கு எந்த முகாந்திரமும் இல்லாத வறண்ட கற்பனை படங்கள். ஒரு சில நகரம் சார்ந்த கதைகள் வந்தாலும் பெரும்பாலானவை இவ்வகை படங்களே. நான் என் நெருங்கிய நண்பர்களிடம் 'பி. வாசு- பிரபு' போன்ற தரமற்ற கூட்டணிக்கு இசை அமைத்தே ராஜா தன் இனிய இசையை குறைத்துக்கொண்டார்' என்று குமுறுவதுண்டு. அவ்வளவு வறட்சியான காலம் அது.
காலம் தனது மாற்றத்துக்கு தகுந்தாற்போல் புதியவர்களை அறிமுகம் செய்யும் எனது போல் சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் கணினி வசதிகளும் அறிமுகமாகி தொடர்ந்து வளர்ந்து வந்த நேரத்தில் வந்த ரஹ்மான் வரவு ஒரு புதிய திறப்பாகவே இருந்தது. (ஆனால் அந்த வழியில் உள்புகுந்தவை தரமுடைய இசைகோலங்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்!). ராஜாவின் கூட்டணியில் இருந்து முன்பே வெளிவந்து விட்ட பாரதிராஜா முதல் தன்னை 'இளையராஜாவின் வெறியை' என்று சொல்லிக்கொள்ளும் சுஹாசினி வரை பலர் ரஹ்மானுடன் கூட்டணி அமைக்க ராஜா திடீரென தனியானார். கமல் ரஜினி மட்டும் அவருடன் மிஞ்சி இருந்தார்கள். கமலுடன் மகாநதி போன்ற படங்களில் பாடல்களை விட பின்னணி இசைக்கே முக்கியத்துவம் தர ஆரம்பித்தார் ராஜா. ரஜினி படங்களுக்கு அவர் தந்த இசை ஈடுபாட்டோடு செய்தவை போல் இல்லை. அவரது கவனம் அப்போது சிம்பனியில் இருந்தது ஒரு காரணம் எனலாம். துரதிருஷ்ட வசமாக அந்த சிம்பனியும் வராததில் இன்று வரை பலருக்கு வருத்தம். இது தொடர்பான பல சர்ச்சைகள் இன்றும் இணையத்தில் நடக்கின்றன.
மெல்ல மெல்ல நம் கண் முன்னே ராஜா பாடல்கள் கவனம் இழந்தன. பாலுமகேந்திரா-கமல் காம்பினேஷன் என்று எதிர்பார்த்த 'சதிலீலாவதி' படத்திலும் ஒரே ஒரு பாடல் கேட்கும்படி இருந்தது. காதலனுக்கு பிறகு பிரபுதேவா நடித்த படம் என்பதாலும், இசை தளபதி க்கு பிறகு பம்பாயில் பதிவு செய்யப்பட்டது என்பதாலும் 'ராசையா' பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அந்த படத்தில் இருந்து தான் ராஜா தன் வழக்கமான பாணியை மாற்றி இசை அமைக்க ஆரம்பித்தார். 'மஸ்தானா' பாடல் தான் சன் டிவியில் டாப் டென்னில் நம்பர் ஒன்னாக வந்த ராஜாவின் முதல் பாடல் என்றாலும், ராஜா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது அந்த படம். தனது நடன அசைவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இளையராஜாவின் இசை அமையவில்லை என்று பிரபு தேவா என்று 'வருந்தினார்'.ரஹ்மானின் மே மாதம் ஆடியோ வெளியீட்டுக்கு வந்த தமிழ் சினிமா பிரபலங்கள் 'யாருடைய' மிரட்டலுக்கும் பயப்படாமல் தொடர்ந்து இசை அமைக்கும்படி ரஹ்மானுக்கு 'உற்சாகம் ஊட்டினார்கள்'.
அந்த சூழலில் ரஹ்மான் தவிர வித்யாசாகர், தேவா, மரகதமணி போன்றோர் பிரகாசிக்க துவங்கினர். ராஜாவுக்கு பிறகு கதைக்களனை உணர்ந்து இசை அமைப்பதில் வித்யாசாகர் உண்மையில் சிறந்து விளங்குகிறார். இவை அனைத்துமே அந்த கால கட்டத்தில் நிகழ்ந்தவற்றை நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் பத்திரிக்கைகள் வாயிலாகவும் நான் அறிந்துகொண்ட விஷயங்கள்.
அப்போது இலங்கை வானொலி நிலையத்தில் வைரமுத்து பல இசை பிரபலங்களையும் சினிமா ஜாம்பவான்களையும் நேர்காணல் செய்வார். அவர் குரலில் ஒரு சந்தோசம் இருக்கும். ராஜாவுடன் இருந்த பிணக்கால் சில காலம் வனவாசம் இருந்து விட்டு ரஹ்மான் வரவால் புத்துயிர் பெற்ற கவிஞருக்கு இயல்பாகவே அது மகிழ்ச்சி தந்திருக்கும். 'பாடலுக்கு முக்கியம் இசையா பாடல் வரிகளா?' என்ற கேள்வியை அவர் எல்லோரிடமும் கேட்பார்.ராஜாவுக்கும் அவருக்குமான பிணக்கில் இது தான் மையமாக இருந்தது என்று சொல்வார்கள். அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீது ராஜாவை பற்றி பேசும்போதெல்லாம் எதோ ஊழல் செய்த மந்திரியை பற்றி நேர்மையான பத்திரிக்கை ஆசிரியர் பேசும் தொனியிலேயே பேசுவார். கேட்க எரிச்சலாக இருக்கும். ராஜாவின் பாடல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன என்றே சொல்லலாம். நிறைய பேர் கவனித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ரஹ்மான் வருடத்துக்கு ஐந்து படம் என்றால், தேவா வாரத்துக்கு ஒன்று என்று productivity யின் உச்சத்தில் இருந்த சமயம். ராஜாவின் புது பாடல்கள் சொல்லிக்கொள்ளும் விதமாக இருக்காது என்பதால் நான் அவரது ஆரம்ப கால பாடல்களில் தஞ்சம் அடைந்தேன். புதுக்கோட்டை 'பாஸ்' ரெக்கார்டிங் கடைக்கு சென்று ராஜாவின் பழைய பாடல்களை பதிவு செய்து வந்து வீட்டில் கேட்பேன். உல்லாசப்பறவைகளில் ஜானகி பாடும் 'நான் உந்தன் தாயாக வேண்டும்' பாடலில் ராஜா தந்திருக்கும் முகப்பு இசை மற்றும் நிரவல் இசை உள்ளார்ந்த விஷயங்களை நுணுக்கமாக எழுதும் தேர்ந்த எழுத்தாளனின் எழுத்தை ஒத்தது. ராஜாவின் இசை ஒரு போதை மருந்தாகியது, மியூசிக்கல்ஸ் வைத்திருந்த என் நண்பர்கள் கடையிலேயே பழியாய் கிடப்பேன். எனக்காக ராஜாவின் பழைய ரெக்கார்டுகளை ஒலிக்க விடுவார்கள். ஆர்வத்துடன் ராஜா பற்றி பேசிக்கொண்டிருப்போம். 'எனக்காக காத்திரு', 'ஈர விழி காவியங்கள்' போன்ற படத்தின் பாடல்களை நான் கேட்டது அப்படி தான். ஒரு நண்பன் கடையில் 'ராஜ பார்வையின்' தீம் இசையை ஒலிக்க சொல்லி கேட்டு விட்டு ஏகாந்தமாய் அமர்ந்திருந்த என்னை கடையில் வேலை பார்த்த பெண் விசித்திரமாய் பார்த்ததை இன்னும் மறக்க முடியவில்லை. கால யந்திரத்தில் நான் பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறேன் என்று நினைத்தாளோ என்னவோ. !
மேலும்..
Saturday, October 23, 2010
சில ஓவியங்கள்:
வடக்கு வாசல் மாத இதழில் வெளியான எனது சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.
நா. விச்வநாதன் எழுதிய சிறுகதைக்கான ஓவியம்
நா. விச்வநாதன் எழுதிய சிறுகதைக்கான ஓவியம்
பாவண்ணன் எழுதிய சிறுகதைக்கான ஓவியம்
ஹரன் பிரசன்னா எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
ஹரன் பிரசன்னா எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
புதிய மாதவி எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
புதிய மாதவி எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
வடக்குவாசலில் வெளிவந்த ஒரு சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
வடக்குவாசலில் வெளிவந்த ஒரு சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
வடக்குவாசலில் வெளிவந்த ஒரு கவிதைக்கான ஓவியம்
பிராங்க்ளின் குமார் எழுதிய கவிதைக்கான ஓவியம்
ஆனந்த் ராகவ் எழுதிய 'தண்டனை' சிறுகதைக்கான ஓவியம்
ஆனந்த் ராகவ் எழுதிய 'தண்டனை' சிறுகதைக்கான ஓவியம்
நா. விச்வநாதன் எழுதிய சிறுகதைக்கான ஓவியம்
நா. விச்வநாதன் எழுதிய சிறுகதைக்கான ஓவியம்
பாவண்ணன் எழுதிய சிறுகதைக்கான ஓவியம்
ஹரன் பிரசன்னா எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
ஹரன் பிரசன்னா எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
புதிய மாதவி எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
புதிய மாதவி எழுதிய சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
வடக்குவாசலில் வெளிவந்த ஒரு சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
வடக்குவாசலில் வெளிவந்த ஒரு சிறுகதைக்கு வரைந்த ஓவியம்
வடக்குவாசலில் வெளிவந்த ஒரு கவிதைக்கான ஓவியம்
பிராங்க்ளின் குமார் எழுதிய கவிதைக்கான ஓவியம்
ஆனந்த் ராகவ் எழுதிய 'தண்டனை' சிறுகதைக்கான ஓவியம்
ஆனந்த் ராகவ் எழுதிய 'தண்டனை' சிறுகதைக்கான ஓவியம்
Thursday, October 21, 2010
இளையராஜாவின் படைப்பாற்றல் குறைந்து விட்டதா?- ஒரு கடிதம்
இளையராஜா பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள், கடிதங்கள் சுவாரசியமாய் இருந்தன. முக்கியமாக 'ராஜாவின் யுகம் இருபதாண்டுகளுக்கு முன்பு முடிந்து விட்டது' என்று சொன்னதில் நிறைய பேருக்கு வருத்தம். பலர் ராஜா மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியும் (பலருள் நானும் அடக்கம்!).கீதப்ரியன். ராஜ், மாயாவி போன்றோர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். எனக்கு அதில் மாற்று கருத்து உண்டு என்றாலும் அவர்கள் சொல்வதை மதிக்கிறேன். ஸ்ரீதர் எழுதிய பின்னூட்டம் விரிவானது. அது ராஜா இன்னும் தன இசை படைப்பாற்றலை இழக்கவில்லை என்கிறது.
" நண்பர் கீதப்பிரியன் நந்தலாலா படத்தின் இசை பற்றி குறிப்பிடிருந்தார். அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 'மெல்ல ஊர்ந்து ஊர்ந்து' பாடலில் ஒரு innocent மனநிலை பாடல் முழுதும் வெளிப்பட்டிருக்கும் , அதில் ஒரு innocent பாத்திரமானது தன் பயணத்தின் போது வெளிப்படுத்தும் குதூகலத்தை பாடல் முழுவதும் உணர்த்துகிறது.
பாடலின் மெட்டு நீளமாக இல்லாமல் குறுகி வெட்டி வெட்டி அடுத்த அடிக்கு செல்வதை உணரலாம். இது குழந்தை மனநிலையில் இருக்கும் ஒருவர் அடுத்தடுத்த விசயத்திற்கு உடனே உடனே சென்று விடுவதை உணர்த்துகிறது.
உதாரணம் வேண்டுமானால்,
வானம் ரொம்ப பழையது,
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே
இன்று பிறந்து வந்தது
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவை பொருத்தது
என்ற வரிகளில் வரும் மெட்டுக்களின் மூலமும்
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிப்போகும் நம் வழி
என்ற மெட்டில் அந்த பாத்திரம் தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி தன் உள்ளக்களிப்பை வெளிப்படுத்தும் உணர்வை புரிந்து கொள்ளலாம்.
இங்கே எந்த இடத்திலும் ராஜா பாடலுக்குத் தேவையான உணர்வை வெளிப்படுத்த தவறவில்லை. மேலும் அவரது முத்திரையான மெலடியையும் எங்கும் தவற விடவில்லை .
நான் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம் என்றே நினைக்கிறேன்,முக்கியமாக ராஜாவின் "யுகம்" முடிந்து விட்டதாக சிலர் முன்வைக்கும் கூற்றுக்கள் பற்றி. ராஜாவின் படைப்புக்கள் நம் முன் விரிந்திருக்கிறது. அதில் 90 களின் பிற்பகுதில் இருந்து வெளியான சில பாடல்கள் பற்றி என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலில் பழசிராஜாவின் ஆதியுச சந்திய பூததிவிடே பாடல் .இதைப் பற்றி ராஜா விரிவாகப் பேசி பதிவு செய்திருக்கிறார். அது youtube தளத்தில் கிடைகிறது. ஒரு போர் வீரன் தன் மண் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்த வேண்டிய அதே நேரத்தில் அவர் மீண்டும் வெள்ளையர்களை எதிர்த்து போரிட வேண்டிய உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும். "ஆதியுச சந்த்யா பூத்ததிவிடே" என்று உயிரை உருக்கும் மெட்டு, ராணுவ வீரர்களின் நடையைத் தாளமாகக் கொண்டு இரண்டு வித உணர்வுகையும் ஒருங்கே படைத்து ராஜா தன் முன்னால் வைக்கப்பட்ட சவால்களை அனாயசமாகக் கடக்கிறார் .
இன்னொரு மலையாளத் திரைப்படம் rasathanthiram திரைப்படத்தில் வரும் தேவாரம் நோக்கு என்ற மிகச் சிறந்த இசைக்கோர்வைகளைக் கொண்ட பாடல். இந்த திரைப்படம் பார்ப்பதற்கு முன்னரே இந்த பாடல் ஒரு travelling மனநிலையை கொண்டு செல்வதை என்னால் உணர முடிந்தது. திரைப்படம் பார்த்த பிறகு, வேலைக்கு மிதிவண்டியில் பயணிக்கும் ஆசாரிகள் பாடுவதாக அமைந்த பாடல் என்பதை நிச்சயப் படுத்திக் கொண்டேன் . இந்த பாடலின் ஒரே ஒரு நொடி கூட தொய்வு ஏற்படுவதில்லை. நான் மிகைப்படுத்தவில்லை,இந்த குறிப்பிட்ட பாடலை ஒரே மூச்சில் எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் கேட்க முடிகிறது. எத்தனை விதமான கற்பனைகள்? ராஜாவின் படைப்பாற்றல் தளரவில்லை என்பதற்கு அவரது தொய்வில்லாத இசைக்கோர்வைகளே சாட்சி. இதே போல இன்னொரு மலையாளப்பாடல் அள்ளிப்பூவே மல்லிப்பூவே.
அவரது படைப்பாற்றல் பற்றி சொல்லும்பொழுது அவரது மெட்டுக்கள் மாறும் வேகம் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. நன்னவனு என்ற கன்னட திரைப்படத்தில் வரும் ஒரு சிவ ஆராதனை தெருப்பாடல். அதில் மேளங்கள் சங்கு மற்றும் மணியோசையுடன் துவங்கும் கோரஸ் "டண்டர டமரு டரி தண்டாரோ எல்லரு மனிகே சிவ பந்தாறு" என்ற வரிகள் இரண்டாக உடைந்து "டண்டர டமரு" என்ற வார்த்தைகள் ஒரு மெட்டிலும் "டரி தண்டாரோ" என்பது இன்னொரு மெட்டிலும் ஒலிக்கும். இப்படியே தொடரும் பாடல் வேறு வேறு மெட்டுகளுக்கு மாறி ஒரு அதிவேக தாளக்கட்டில் கோரஸ் குரல்கள் நிறைவு செய்ய S P B யின் குரலில் ஒலிக்கும் "ஓம் சிவோ ஹம் சிவோ மஹா" என்ற உச்ச ஸ்தாயி வரிகளுடைய மெட்டு, இந்த பாடலை விவரிக்க இயலாத வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. இதை அவர் முன்பும் பலமுறை செய்திருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த இளமையெனும் பூங்காற்று பாடல் பல்லவியில் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு மெட்டைக் கொண்டு இசை அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு பாடல்களும் வெவேறு கால கட்டங்கள் தான். இசை வடிவங்கள் மாறி இருக்கலாம். ஆனால் ராஜாவின் கற்பனை வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?
தமிழ் திரைப்படங்களில் நான் கடவுள் திரைப்படத்தின் ஓம் சிவோ ஹம் என்ற பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த வரிகள் பொறுமையாக நிறுத்தி உச்சரிக்கும் பட்சத்தில் இது ஒரு மந்திரம் அல்லது வடக்கதியர்களுக்குப் பழக்கப்பட்ட பஜன் . ஆனால் பாலாவின் ஆண்மை திரண்ட நாயகன் அகோரிக்கு இது எப்படிப் பொருந்தும்? உணர்வுகள் பொங்கிப் பிரவாகமெடுக்கும் மெட்டு உடுக்கையுடன் சேர்ந்து கோபக் கனலைத் தெறிப்பது, ராஜாவின் கற்பனை வளத்தால் மிக இயல்பாக interprate செய்கிறது.
ராஜாவின் திருவாசகம் என் மனதுக்கு நெருக்கமானதல்ல, ஆனால் அவரது இசையிலமைந்த அக்கா மகாதேவியின் வசனங்கள் பற்றிய documentary யில் இருந்து inspiration ஆக வைத்துக்கொண்டு [நன்றி நண்பர் புலிகேசி] எந்த வித வர்ணப்பூசுகளும் இல்லாமல் மிக நேர்மையாக திருவாசகத்தைப் படைத்திருக்கிறார். இரண்டு தொகுப்புகளையும் ஒன்றாக வைத்துக் கேட்பவர்கள் இதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். அக்கா மகாதேவியின் தொகுப்பில் ஒவ்வொரு பாடலும் எனக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்வதற்கு ராஜா அந்தப் படைப்பை எளிமைப் படுத்தி இசை அமைத்தது தான் காரணமாக இருக்க முடியும். என் விருப்பு சார்ந்து திருவாசகத்தை எடை போடுவது நியாயமாக இருக்க முடியுமா? அது போல் தான் தனிப்பட்டவரின் கருத்துக்கள் அது அவர்களுக்கானதே. தன் கருத்து என்பதை பொதுக்கருதாகத் திரிப்பவர்கள் தான் இங்கே ஏராளம்.பலருக்கும் ராஜாவின் மீது பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ராஜாவின் படைப்பாற்றலைக் கொண்டு ராஜாவின் யுகத்தைக் கணக்கிட விரும்புவர்கள், அவரது காலம் முடிந்து விட்டதாக நினைக்க விரும்ப மாட்டார்கள். அவரது பாடலுக்குக் கிடைக்கும் விளம்பரங்கள், அதன் மூலம் அவர் பெரும் வர்த்தக லாபங்களை வைத்துக் கணக்கிட விரும்புவர்கள் வேண்டுமானால் அவரது "யுகம்" முடிந்து விட்டதாக உரக்க கத்திக் கொண்டிருக்கட்டும். நம்மைப் போன்ற ரசிகர்கள் நேர்மையான படைப்புகளைத் தலையில் வைத்துக் கொண்டாடலாம். வேறு என்ன செய்ய?
மிக்க நன்றி
அன்புடன்
ஸ்ரீதர்
Monday, October 18, 2010
சாரு நிவேதிதா செய்யும் அத்துமீறல்களை பற்றிய என் கேள்வியும் பென்னேஸ்வரனின் பதிலும்..
சாரு நிவேதிதா என்ற முது பெரும் எழுத்தாளர் , தனது பதிவுகளில் கண்டதை உளறிக்கொண்டும் தன்னைத் தானே புகழ்ந்து எழுதிக்கொண்டும் சக எழுத்தாளர்களின் மீது விழுந்து பிடுங்கிக்கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் பாமினி என்ற பெண்(?!) சாருவின் ஆங்கிலப் புலமை மீது 'கவலையுற்று' எழுப்பிய கேள்விக்கு தனது 'மொழியில்' பதில் சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் வாசகியின் கேள்விக்கு சாருவின் வார்த்தைப் பிரயோகங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை. இடையில் என்னவோ புதைபொருள் ஆராய்ச்சியாளர் கணக்குக்கு ஒரு 'எலக்கிய ஆய்வுக்கு' எழுபதாயிரம் செலவானதாக ஒரு புருடா வேறு. தமிழில் சமீப காலமாக உலவும் இப்படிப் பட்ட ஒரு போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?
சந்திரமோகன் வெற்றிவேல்
புது டெல்லி
chandrabuwan@gmail.com
அன்புள்ள சந்திரமோகன்
உங்கள் பல கேள்விகளுக்கு நீங்களே விடையும் தந்திருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்லும் அந்தச் சரித்திரப் புகழ் பெற்ற பதிவினை நானும் படித்தேன். சாரு நிவேதிதாவை ரவியாகவும் அறிவழகனாகவும் நானும் என்னுடைய டெல்லி நண்பர்களும் அறிவோம். அடிப்படையில் மிகவும் மிருதுவானவர் சாரு. சற்று பயந்த சுபாவம் உண்டு அவருக்கு. நேருக்கு நேராக யாராவது அவரிடம் மோதினால் பதுங்கி நழுவுவதை நாங்கள் நிறைய பார்த்து இருக்கிறோம். அவர் பறைசாற்றிக் கொள்ளும் உலக ஞானங்கள் பற்றிய ஆச்சரியம் அவருடைய பதிவுகளைப் படிக்கும் பலரைப் போலவே எங்களுக்கும் உண்டு. ஏறத்தாழ ஒரு மனநோயாளியின் மனநிலையில் இருப்பது போல வேண்டுமென்றே அவர் எழுதுகிறார் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த வேஷத்தை அவர் விரும்பி அணிந்து கொள்கிறார் என்பது அவருடைய வாசர்கள் மற்றும் நண்பர்களைப் போலவே அவருக்கும் நன்கு தெரியும்.
அதனால் உங்களுக்கோ எனக்கோ வேறு யாருக்கோ இதில் எவ்விதமான ஆட்சேபணையும் ஆச்சரியமும் இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.
அதே நேரத்தில் அவர் பாமினி என்கிற பெயரில் அவருடைய அபிமான ‘வாசகி’ ஒருவர் எழுதியிருக்கும் கடிதத்தின் வாசகம் அந்த வாசகியின் மனநிலையையும் சற்று சந்தேகப்பட வைக்கிறது. நான் கேள்விப்பட்டது என்னவென்றால் சாரு மற்றும் தமிழின் ஓரிரு அதிநவீன எழுத்தாளர்கள் பல பெயர்களில் மின்னஞ்சல் கணக்குகளை பராமரித்து தங்களுக்குத் தாங்களே கடிதங்களும் பாராட்டுக்களும் எழுதிக் கொண்டும் பில்டப் கொடுத்துக் கொண்டும் வருகிறார்கள். இதைப் பல சென்னை நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த மேதாவி எழுத்தாளர்களின் தளங்களில் இவர்கள் பிரசுரித்துக் கொள்ளும் கடிதங்களையும் எதிர்வினைகளையும் பார்க்கும்போது சென்னை நண்பர்கள் சொல்வதை உறுதிப்படுத்துவது போலத்தான் உள்ளது. இது அந்த மேதாவி எழுத்தாளர்களின் தனிப்பட்ட உரிமை. இதற்கு யாரும் ஒன்றும் செய்யமுடியாது.
மற்றபடி சாரு நிவேதிதா எழுபதாயிரம் ரூபாய் செலவில் எழுதிய அதிமேதாவித்தனமான கட்டுரையை என்னைப் போன்ற பாமரர்கள் படிக்கும் வகையில் எங்காவது பிரசுரித்தால் மிகவும் வசதியாக இருக்கும்.
அரபி மொழி படித்தது பற்றி அடிக்கடி பேசிக்கொண்டு இருக்கிறார் சாரு. படிக்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. நான் ஒன்று செய்யலாம் என்று இருக்கிறேன். மும்பையில் என்னுடைய நண்பர் ஒருவர் அரபி மொழியை உண்மையாகவே படித்து இருக்கிறார். அரபி மொழியில் சில விஷயங்களை காணொளி வழியாக அவருடைய குரலிலேயே பதிவேற்றம் செய்திருக்கிறார். அரபு மொழியில் எண்களைப் பற்றிய ஒரு விளக்கமும் கொடுத்து இருக்கிறார். திருக்குரானை கைப்பேசியில் டவுன்லோட் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தாராவி பகுதியில் வசிக்கும் மிகச் சாதாரணமான மனிதர் அவர். அந்த எளிய மனிதர் என்றும் தான் செய்த வேலைகளைப் பற்றிப் பீற்றிக் கொள்ள வில்லை. தன்னுடைய அரபி மொழி அறிவைப் பற்றி எங்கும் எழுதிக் கொள்ளவில்லை. அந்த நண்பரை வைத்து ஒரு நாள் அரபி மொழியறிஞர் சாருவுடன் உரையாடச் சொல்லலாம் என்று இருக்கிறேன். அவரை வைத்து சாருவின் பாஷா மேதாவிலாசத்தை உலகறியச் செய்யலாம் என்று இருக்கிறேன்.
அதே போல ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மொழியில் ஆய்வு செய்த சில மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டு நண்பர் சாருவுக்கு ஸ்பானிஷ் மொழியில் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வைத்து அந்த உரையாடலை பதிவு செய்யச் சொல்லி அதை இணையத்தில் வெளியிட வேண்டும்.
அப்போதுதான் பாமினி போன்ற ரசிகைகளின் அன்புத் தொல்லைகள் சாருவுக்கு இருக்காது.
பெண் உரிமை வழக்குகளை எடுத்து வாதாடும் பெண் வழக்கறிஞர் ஒருவருடன் இதுகுறித்துப் பேசினேன். பாமினி என்பது தமிழக அறிஞர்களின் வழமைப்படி ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்தால் பிரச்னை எதுவும் இல்லை. பாமினி என்று உண்மையாகவே ஒரு பெண்மணி இருந்தால் சாருவின் கடிதம் அவருக்கு மன உளைச்சல் தந்திருந்தால் அவர் சாரு நிவேதிதாவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். பாமினிக்கு அளிதது இருக்கும் பதிலில் உச்சபட்டச ஆபாசமும் வசையும் கலந்து இருக்கிறது. மிகவும் அநாகரிமான ஒரு அணுகுமறையை கடைப்பிடித்து இருக்கிறார் சாரு. பாமினி என்னும் பெண்ணுக்கு எதிராக சாரு இழைத்திருக்கும் குற்றத்துக்கு சட்டப்படி சாரு சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.
ஒரு கட்டுரை எழுத எழுபதாயிரம் செலவு செய்ததாக சாரு எழுதியிருக்கிறார். பாமினி என்னும் அந்தப் பெண், சாருவின் கற்பனை கதாபாத்திரமாக அல்லாமல் மனிதரூபத்தில் இருந்து அவர் சாரு மீது வழக்குத் தொடுத்தால் இது போல ஒரு கடிதம் எழுதி அதனை இணையத்தில் பிரசுரம் செய்ததற்கு பல லட்சங்களை சாரு செலவு செய்ய வேண்டியிருக்கும். அவர் எழுதிய கட்டுரையை விட இந்தக் கடிதம் அவருக்கு அதீதமாக செலவு வைக்கும்.
பாவம் நம் எழுத்தாளர்கள். எப்படி எல்லாம் தமிழ் வளர்க்க வேண்டி இருக்கிறது பாருங்கள்.
அன்புடன்
கி.பென்னேஸ்வரன்
18 அக்டோபர் 2010
http://www.kpenneswaran.com/index.php?option=com_content&view=article&id=122:2010-10-18-17-43-59&catid=47:2010-09-16-10-13-46
Sunday, October 17, 2010
இளையராஜா : உயிரில் கலந்த இசை..
ராஜாவின் இசையுடனான உறவு எப்போது துவங்கியது தெரியவில்லை.பள்ளி செல்லும் நேரங்களில் விவிதபாரதி ஒலிபரப்பும் பாடல்கள் என்னை அறியாமலே என்னுள் கலக்க ஆரம்பித்த நேரம். பழைய பாடல்களை இனம்பிரிக்க தெரிந்து வைத்திருந்தேன். சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டும் இன்னதென்று சொல்ல முடியாத அளவு இனிமையாய் இருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன்.
அப்போது இசை அமைப்பாளர் யார் யார் என்றெல்லாம் தெரியாது. 'இளமை இதோ இதோ' என்ற மேற்கத்திய இசை சாயல் பாடலும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற துள்ள வைக்கும் நாட்டுப்புற இசை பாடலும் இந்த பாடல்களுக்கு பின் யார் தான் இருக்கிறார்கள் என்று தேட வைத்தன. வானொலியில் பாடல் பற்றி அறிவிப்பாளர் சொல்லும் விஷயங்களை கேட்க ஆரம்பித்தபோது ஒளிபரப்பாகும் பாடல்களில் எண்பது சதவீதம் உச்சரிக்கப்படும் பெயர் 'இளையராஜா'. இப்போது நினைத்து பார்த்தால் அந்த அறிவிப்பாளர் ராஜாவின் பெயரை ஒரு கனிவுடன் உச்சரித்து போல் தோன்றும். எத்தனை பாடல்கள்.
என் வீட்டில் என் சகோதரிகளும் அண்ணனும் ராஜாவின் மிக தீவிரமான ரசிகர்கள். அவர்கள் தான் ராஜாவின் பாடல்கள் இவை என எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள். மிக பிரபலமாய் இருந்த பாடல்கள் தவிர அவ்வப்போது திருச்சி வானொலி நிலையமும் இலங்கை வானொலி நிலையமும் ஒலிபரப்பும் அரிதான பாடல்கள் தான் என்னை மிகவும் கவர்ந்தன. 'மெட்டி ஒலி காற்றோடு' பாட்டுக்கு முன் ஜானகியும் ராஜாவும் பாடும் ஆலாபனை என்னை ஒரு மயக்க நிலைக்கு தள்ளியது என்றே சொல்வேன். அந்த படத்தில் அவ்வளவு பிரபலமாகாத இன்னொரு பாடல் 'சந்த கவிகள் பாடிடும் மனதினில்' . அந்த பாடலின் முன்னால் வரும் வயலின் இசை , ராஜா இன்று வரை அமைத்த வயலின் இசைக்கோர்வைகளில் மிக சிறந்தது என சொல்வேன். இசை வெள்ளம் என்று சொல்வார்களே.. அதை அந்த பாடலில் கேட்கலாம். அதே போல் மாலை நேரங்களில் எங்கிருந்தோ ஒலிக்கும் 'ஆசைய காத்துலே தூது விட்டு' பாடலின் முகப்பு இசை , அந்த புல்லாங்குழல் முணுமுணுப்பு.....இப்போதும் சிலிர்க்க வைக்கும் 'ராஜ கற்பனை'. ஜானியின் இன்னொரு மிக சிறந்த பாடலான 'காற்றில் எந்தன் கீதம்' இன்றும் பலர் இரவுகளில் இதயம் தொட்டு தூங்க வைக்கும் பாடல். அந்த பாடலின் இடைஇசையின் அற்புதமாக ஒரு புல்லாங்குழல் சற்று சிணுங்கி விட்டு பின்பு இசைக்க தொடங்கும்...ஆஹா என்ன ஒரு கற்பனை.
ராஜாவின் மிக பெரும்பலம் வார்த்தைகளில் கூட வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை தனது இசை மூலம் தருவது தான். அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் அவரது ரசிகர்கள் இன்றும் அவரை ஆராதிப்பதே அதற்காக தான் என்று நம்புகிறேன். மெல்லிய இழை போன்ற உணர்வுகளை அவரது பெரும்பாலான பாடல்களில் , பின்னணி இசையில் கேட்கலாம். அந்த வகையில் எனக்கு பிடித்த பாடல்களை (இப்போது நினைவுக்கு வருபவை) : உறவுகள் தொடர்கதை (அவள் அப்படி தான்) , பனி விழும் பூ நிலவில் (தைப்பொங்கல்) , ஞான் ஞான் பாடணும் (பூந்தளிர்) , வசந்த கால கோலங்கள் (தியாகம்) , மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே (நண்டு) , வான் மீதிலே (ஜானகி பாடியது..) என்று அவரது பாடல்களை பட்டியலிட ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. என்னை பொறுத்தவரை ராஜா எண்பதுகளின் இறுதிவரை தந்த பாடல்களை இனி அவரால் கூட தரமுடியாது என்று தான் நினைக்கிறேன். குறிப்பாக '76 முதல் '86 வரை அவர் இசையில் உருவான பாடல்கள் நிகரற்றவை. இவை எல்லா இசை ரசிகரும் அறிந்த விஷயங்கள். தவிர இசை ரீதியாக ராஜாவின் படைப்பாற்றலை ஆராய்ந்து சொல்லும் இசை அறிந்த ரசிகர்களின் பதிவுகளுக்கு முன்னால் நான் சொல்வது எதுவும் இல்லை. இருந்தாலும் ஒரு கடைக்கோடி ரசிகனாக ராஜாவின் இசை பற்றி எழுத நீண்ட நாட்களாக இருந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஒரு சந்தோஷம்.
அவரை சந்தித்த அனுபவத்தை இந்த பதிவில் எழுதுகிறேன் . ராஜா தீபாவளி நாட்களில் தனது அம்மா சமாதி இருக்கும் கம்பம்-தேனி பகுதிக்கு வருவார் என்று என் இசை நண்பர்கள் புதுக்கோட்டையிலிருந்து ஒரு ஆன்மீக பயணம் போல் கிளம்பி ராஜாவை தரிசித்து விட்டு வருவார்கள். என்னையும் ஒரு முறை அழைத்து சென்றார்கள்.நிர்மல் என்ற ஒரு நண்பரின் வேனில் தான் பயணம். அவரிடம் மிக அரிதான ராஜ பாடல்களின் தொகுப்பு நிறைய இருக்கும். வழியெங்கும் ராஜாவின் இசையில் வந்த அற்புதங்கள் செவிகளை நிறைக்க ..அதிகாலையில் அந்த பகுதி சென்று சேர்ந்தோம். அங்கு ஒரு கண்மாயில் குளித்து விட்டு ராஜாவை பார்க்க அவர் அம்மா சமாதியை அடைந்தோம். அங்குள்ள தனது விருந்தினர் மாளிகையில் ராஜா ஒரு அரைக்கை சட்டையும் வேட்டியும் அணிந்து புதுக்கோட்டையை சேர்ந்த புலவர் வெண்ணரசுவுடன் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னாலேயே புலவர் அங்கு வந்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை . பேசிக்கொண்டே எங்களை திரும்பி பார்த்த ராஜா "எல்லோரும் டிபன் சாப்பிடுங்கள்' என்றார். அந்த நேரத்திலும் அங்கு வருபவர்களுக்காக அருமையான காலை உணவு தயாராய் இருந்தது. அருகில் கேமராவும் கையுமாக அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருந்த ஒருவரிடம் பேசியபோது அவர் ஆனந்த விகடன் நிருபர் பொன்ஸீ என்று தெரியவந்தது. அவரும் எங்களை போன்றே தீவிர ரசிகர். பிறகு ராஜா தன் அம்மா சமாதிக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியதை மெளனமாக பார்த்துகொண்டு நின்றோம். அவரது வெளிநாட்டு நண்பர்கள் இருவர் அந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்தனர்.
பிறகு ராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எல்லோரும் முண்டியடித்தார்கள். எனக்கென்னவோ அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. சில சமயம் அவர் இப்படி போய் நிற்கும் ரசிகர்களிடம் கடிந்து கொள்வார் என்று கேள்விபட்டிருந்ததால் நான் அவரை நெருங்கவில்லை. ஏதாவது நடந்து அவர் என் மனதில் நான் அவரை அமர வைத்திருக்கும் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி விடக்கூடாது என்ற பயம் தான் காரணம். என் மனதிற்கு பிடித்த ஒரு மனிதனை , இணையில்லா கலைஞனை தூரத்தில் இருந்தே தரிசித்துவிட்டு திரும்பினோம். வழி முழுவதும் ....அவர் இசை. 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்'.
Friday, October 15, 2010
சொல்வனம் இணைய இதழில் எனது கட்டுரை..
சொல்வனம் இந்த இதழில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகள் பற்றிய எனது கட்டுரை வெளியாகி இருக்கிறது. உங்கள் பார்வைக்கு. .
http://solvanam.com/?p=11039
Thursday, October 14, 2010
உரக்க அதிரும் மெளனப் பறை
நூல் விமர்சனம்
ஜே.எஸ்.அனார்கலி
சங்ககாலப் பெண்கவிகள் நாற்பத்தி இரண்டுபேர் இருந்தார்களென சங்க இலக்கியங்கள் சான்று அளிக்கின்றன. சங்க காலத்துக்குப் பின்னர் 20,21 ஆம் நூற்றாண்டுகளில்தான் அதிகளவு பெண்கவிகள் காணப்படுகிறார்கள். இடைப்பட்ட காலங்களில் பெண்கவிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே காணப்படுகின்றனர். அயலவர் படையெடுப்பு , பக்திமரபு , சித்தர் மரபு போன்றவை பெண்ணை உடமைப் பொருளாக, பாவப் பொருளாக, போகப் பொருளாக அதீதமாக உருவகித்திருந்தன. பெண்ணினுடைய வரலாறும் பெண் பார்வையில் இந்த உலகப் பதிவுகளும் நிராகரிக்கப்பட்டன. பக்திச் சாம்பல் பூசிக்கொண்டு பூத்திருக்கும் கனல் துண்டுகள்தான் ஆண்டாளும் காரைக்காலம்மையாரும். சங்கம் தொட்டே பெண்கவிகளின் பாடல்கள் அகம் சார்ந்து மட்டுமல்ல புறம் சார்ந்தும் அமைந்திருந்தன. களவு, கற்பு முதல் மன்னன் செங்கோலாட்சி வரை பெண்கவிகள் பாடாதவை இல்லை. சங்க காலப் பெண்கவிகளின் கருத்து சுதந்திரம் அவர்களின் படைப்புகளில் மிளிர்கின்றன.
இதைக்காட்டிலும் சம கால பெண்கவிகளின் கவிதைகள் துணிவான பாய்ச்சலை வெளிப்படுத்துகின்றன. இந்த வரிசையில் சமிபத்தில் வெளி வந்திருக்கும் கனிமொழியின் கவிதை நூல் 'சிகரங்களில் உறைகிறது காலம்' மனதின் நுண்ணிய உணர்வுகளை நெசவாலனின் மென் பதத்துடன்நெய்திருக்கிறது.
''ஈன்று புறந்தருதல் எந்தலைக்கடனே'' (புறம். 312)
''படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மாண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முளையறுத் திடுவேன்யான் .........'' (புறம். 278)
என்றும் பாடினர் சங்கப் பெண்கவிகள். ஆண்மகனைப் பெற்றெடுத்தல் எனது கடமை;
போரில் தன் மகன் புறமுதுகிட்டு ஓடியிருந்தால் அவன் வாய் வைத்து பால் உண்ட மார்பை அறுத்து எறிவேன் என்று சொன்ன சங்கப்பெண் வீரத்தாயாக சிலை வைக்கப்பட்டாள். சிலையாய் செதுக்கியது போதும் எங்கள் சிந்தனைக்கு பதில் சொல் என்கிறார்கள் இன்றைய பெண்கவிகள்.
" உன் தீரம் தகைக்கவும்/ வீரம் விளைக்கவும்/
விழலான என் பிள்ளை
பெருமை என்றாய், உரிமை என்றாய்
எதைக் கண்டேன் நான்.
.............................................
என் கருவறை சுமந்த
கோமேதத்தை எடுத்து
போனாய் உன்
கிரீடத்தில் அணியாய் சேர்க்க''
என மௌனப் பறை உரக்க அடிக்கிறார் கனிமொழி. போரை, "சரித்திரத்தின் கரிமப் பதிவுகளாய்" காண்கிறார் கனிமொழி. தாய்வழி சமுகத்தின் வளர்ச்சி எத்தனைக் கொடுத்திருக்கும் என்ற கனவினை காணச் சொல்கிறது. இந்த வரிகள்.
போர் சுழலில்,
" அச்சத்தின் வேர்கள்
நீளுகின்றன தலைமுறைகள் தாண்டி" என்று கூறும் கவிஞர்,
" 'ஒருமித்த குரலில்
கரிசனத்தை
வெளிப்படுத்தினோம்' "
என்று போருக்கு 'வெள்ளை கொடி காட்டும்' தலைவர்களையும் தாக்க தவறவில்லை. பெண் கவிஞை, சமூகப் பொறுப்பில் உள்ள போது வெளிப்படுத்தும் உணர்வுப் பதிவுகள் மிக்கியமானவை. அவ்வகையில் கனிமொழியின் கவிதைகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை.
தனிமை கவிதை பிறக்க இன்றியமையாதது. தனக்குள் இருக்கும் தனிமையை அடையாளம் கண்டு கொள்ளும் கவிஞர் கனிமொழி, சமுகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் உள் வாங்குகிறார். அதனை அழகாக பதிவும் செய்து இருக்கிறார். 'சமூகம்' என்ற கவிதையில் இன்றய சமுகத்தின் இயல்பை மிக இயல்பாக எடுத்துக் கூறி இருக்கிறார். மூன்று 'மயமாதல்கள்' சேர்ந்து மனிதனுக்குக் .
கொடுத்திருக்கும் நிலை என்ன? தோலை இழுத்துக் கட்டிய இயந்திரமாகத் தான் இன்று நவயுக யுவதிகளும் யுவன்களும் திரிகிறார்கள். இந்த அவல நிலையை 'கசகசத்த நகரம்' கவிதை காட்டுகிறது.
" பேரிரைச்சலாய் எழுந்து
பேரிரைச்சலில் அடங்கும்
நகரம்
மரியாதை நிமித்தங்களுக்கு
நேரமற்ற மொழி"
நேரமற்றவன் மனிதனல்ல. அவனது மொழி. மனிதனால் கையாளப்படும் மொழிதான் எவ்வளவு அவசரகதியில் இருக்கிறது? மனிதனிடம் வர அதற்க்கு நேரமில்லை. ஊமையாகிப் போன மனிதர்கள்/ இயந்திரங்கள்.
இந்த பரபரப்பில் எதிர்கால சந்ததிக்கு இந்த தலைமுறை வழங்கப்போவது என்ன?
"சக்கையாய்த் துப்பிய
பூமியை
.................
மகரந்தமற்ற சோலைகளை!
......................
மலட்டுக் காடுகளை !"
இந்த அவசர மனிதர்களை, விட்டு விலகவும் கவி உள்ளம் நினைப்பதில்லை. கலைஞனை எல்லாவற்றையும் ரசிப்பவன்: உணர்பவன். கருவறை வாசனையில் கனிமொழி சொன்னது,
" என் காதலில்
பெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது."
மகாகவி இன்
" காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல் " தானோ இது?
" நேசிக்காமல் வாழவும்
தெரியவில்லை
நேசிக்காமல் இருந்தததில்லை"
என்ற கனிமொழியின் கவிதை மனிதனின் மீது உள்ள நம்பிக்கை ஊற்றை வற்ற விடாமல் பாதுகாக்க சொல்கிறது.
சபிக்கப்பட்டதன் சாட்சியமே மனித வாழ்க்கை. இதில் கிடைக்கும் அடிமை வாழ்க்கை மேலும் கொடுமையானது. பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் அத்தகைய வாழ்க்கையை கனிமொழி ' அவிழும் தினங்கள்" என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.. செக்கு மாட்டு வாழ்க்கை வாய்க்கப்பெற்ற பெண்கள், தங்கள் வாழ்வில் தினங்கள் ஒவ்வொன்றாய் " அவிழ்த்து விழட்டும்" என ஏங்குவது தவிர வேறு என்ன செய்வார்கள்?
பெண் மீதான அடையாளங்கள், சமூகம் அவளுக்குக் கொடுத்த சவுக்கடிகள் என்பதை "அச்சம்" , "சீதை மகள்" , "ரௌத்திரம் ததும்ப" போன்ற கவிதைகளில் கனிமொழி விவரிக்கிறார்.
கவிஞர்கள் மிக மிக மென்மையானவர்கள். சிறு குழந்தையின் இயல்பான ஆச்சரியமும் பயமும் நிறைந்து ஒருவித பாதுகாப்புணர்வும் வேண்டி நிற்ப்பவர்கள் அவர்கள். வார்த்தைகளை விதைக்கும் கவி உள்ளத்திற்கு வார்த்தைகள் காட்டும் அச்சுறுத்தல்கள் தான் என்ன?
"அம்புகளைப் போல் சீறிப் பாய்கின்றன !
நீதி கேட்ட
ரத்தினப் பரல்களாய்
வெடித்துச் சிதறுகின்றன !
................................................
கயிறாய் திரித்த பின்
கழைக் கூத்தாடியின் லாவகத்தோடு
அவற்றின் மீது நடக்க !
சமுகத்தின் அவலங்களை காண்பதும் அதனை செரித்துக் கொள்வதும் கவிஞர்களுக்கு எளிதான காரியம் அல்ல. இனம் புரியாத அவஸ்தை அவர்களைக் குடைந்து கொண்டேதான் இருக்கும். ' சிறு பறவைக்குக் கிடைக்கும் அமைதி"யே நகரங்கள் கொடுக்கும் அவஸ்தைகள் இடையே கலைஞர்களுக்கு போதுமானதாய் இருக்கிறது.
" மெத்தென்ற
அணைப்பில் என்
பிள்ளையோடு நான்
உறங்கும் சூட்சுமம் !
'சாலை ஓர தாய்க்கு ஒரு ருபாய் வழங்குவதில் தான் உள்ளது' என காட்டுவதும் கவியின் மென் மனம் அன்றி வேறு எது?
கவிதையின் வீர்யத்தை உணர்ந்து ஓவியங்களை தந்திருக்கும் சந்ரு பாராட்டுக்குரியவர். ஓவியங்கள் தனியே ஒரு வெளியில் ஆவர்த்தனம் செய்கின்றன. புத்தக வடிவமைப்பும் சிறப்பாய் செய்யப்பட்டிருக்கிறது.கனிமொழி கூறுவது போல, ' நம்பிக்கை என்பது மேசையின் விளிம்பில் உள்ள கண்ணாடிக் குவளையாய் இருப்பினும் அதைப் பாதுகாப்பதோ அல்லது மீண்டும் கண்ணாடிக் குவளையை மேசைமீது வைப்பதோ' தான் மனித வாழ்க்கை ஆகிறது.
மூடிக்கிடக்கும் சாளரங்கள்...
வடக்கு வாசல் 2008 இல் வெளியிட்ட இலக்கிய மலர் தொடர்பான எனது கட்டுரை. சிற்றிதழ்களை நடத்துபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது..
வடக்கு வாசல் இலக்கிய மலர் வெளியீட்டு விழாவுக்காக நண்பர்களுடன் வந்திருந்த நான் இதழ்கள் விற்பனையாகும் ஸ்டாலின் முன் நின்றிருந்தேன். மாலை 6 மணி ஆனவுடன் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் மேஜையில் வைக்கப்பட்டிருந்த புதிய, பழைய இதழ்களை பார்த்தவாறே வேகமாக வந்த ஒருவர் இதழை எடுத்துக் கையில் வைத்து கொண்டார். பின்பு சந்தேக தொனியில் ப்ரீ தானே?' என்றார். இதழ் வடிவமைப்பாளர் செந்தில் இல்லே, சார் ஒரு புத்தகம் பத்து ரூபாய் என்றார். உடனே சுற்றும் முற்றும் பார்த்தவர் இதழை கைவிட்டவராக வேக வேகமாக அரங்கத்தினுள் நுழைந்தார். செந்திலின் கண்களும், என்னுடைய கண்களும் ஒரு முறை சந்தித்து சிரித்து கொண்டன. கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நல்ல நிகழ்வு அது. பி.ஏ.கிருஷ்ணன் அறிவு பூர்வமான பேச்சோடு, முன்னள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தன்னம்பிக்கையூட்டும் உரையோடு சிறப்பாக நிகழ்ந்த விழாவில் விற்பனையாகியிருந்த இலக்கிய இதழ்களின் எண்ணிக்கை தான் வருத்தமளிக்கும் வகையில் இருந்தது. வெறும் பார்வையாளர்களாக வடக்கு வாசல் நடத்தும் இசை விழா மற்றும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ளும் நண்பர்கள் வாசகர்களாய் மாறுவது எப்போது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. வாசிப்பு பழக்கம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்கிற தகவல்கள் கிடைக்கிறபோதும் இன்னொரு பக்கம் அது வெறும் செய்தி தானோ என எண்ண வைக்கும் அளவு புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் விற்பனை கவலை தருகிறது.
இதழ் தொடங்கிய காலத்திலிருந்து வடக்கு வாசலுடன் நெருங்கிய உறவில் இருக்கும் நான், முதல் இதழின் பிரதியை கையில் வைத்துக் கொண்டு கண்களிலும், வார்த்தைகளிலும் உறுதியுடன் பேசிக் கொண்டிருந்த ஆசிரியரை ஒருமுறை நினைத்துப் பார்த்தேன். வாசகர்கள் பலர் அறியாத பக்கங்களைத் தன்னுள் கொண்டவர் அவர். நவீன நாடகம் மற்றும் நவீன இலக்கியம் போன்றவற்றில் அவரின் தேர்ந்த பயிற்சியும் ஆழ்ந்த அறிவும் பலமுறை என்னை பிரமிக்கச் செய்திருக்கின்றன. பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்று வரும் பொழுது அது குறித்து அவரின் தீர்மானங்கள் மிக வித்தியாசமானவையாக அமைந்தன. வாசகனை தேடச் செய்யும் கடினமல்லாத ஒரு எளிய மொழியை வழங்க வேண்டும் என்று அவர் தொடக்கத்திலிருந்தே உறுதியாய் இருக்கிறார். புதிய எழுத்தாளர்களை மட்டுமன்றி புதிய வாசகர்களை உருவாக்க வேண்டும் என்கிற தீவிர எண்ணம் அவருக்கு உண்டு. மிக முக்கியமாக அட்டைப் படங்களில் அவர் செலுத்தும் கவனம் மற்ற தீவிர மற்றும் வணிகப் பத்திரிகைகளில் கிடைக்கப் பெறாத அம்சம். இதழில் பிரசுரமாகும் கட்டுரைகள் மற்றும் முக்கிய எழுத்தாளர்களின் பெயர்களை அட்டையில் பிரசுரித்தால் விற்பனைக்கு உதவியாயிருக்கும் என்பது போன்ற யோசனைகளை அவர் முற்றிலும் நிராகரித்து விடுவார். புகைப்படத்தின் அழகியலில் குறுக்கிடுவது அதைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சமம் என்பது அவர் கருத்து.
வாசகர்களில் பலர் ஒரு இலக்கிய மாத இதழ் எவ்வளவு சிரமத்திற்கு இடையில் தயாராகிறது என்பது பற்றிய அக்கறை கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். அசோக மித்திரன் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல் பலருக்கு செய்திகளை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் நல்ல புனைவுகள் மற்றும் அறிவுசார் கட்டுரைகளை வாசிப்பதில் இருப்பதில்லை. நல்ல இலக்கியம் மனித மனத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை எனினும் பலர் இதுபோன்ற விஷயங்களை வாசித்தல் ஒரு அர்த்தமற்ற வேலை என்பது போன்ற மனோபாவம் கொண்டவர்கள். புத்தக, பத்திரிக்கை வாசிப்பு பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குன்றிவருகிறதா? இல்லை வலைத்தளங்களிலே நிறைய விஷயங்கள் கிடைப்பதால் வாசகர்களின் பெரும்பகுதி அந்தப் பிராந்தியத்துக்குள் சென்று விட்டதா என்பது புரியவில்லை.
மிகச் சிறப்பான முறையில் வடிவமைப்போடும் நல்ல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளோடும் வெளியாகியிருக்கும் இலக்கிய மலர் தயாரிப்பில் எத்தனை பேர் ஈடுபட்டிருந்தார்கள் என்று தெரிய வந்தால் ஆச்சரியமாயிருக்கும். முழுக்க முழுக்க ஆசிரியரும், வடிவமைப்பாளர் செந்தில் மட்டுமே மிகக் கடுமையாக உழைத்து இந்த மலரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அகஸ்டஸ், சுரேஷ் சுப்ரமணியம் போன்றோர்களின் ஆலோசனையோடு கிட்டத்தட்ட தனிமனிதனக நின்று இலக்கிய மலரை வெளியிட்டு இருப்பது பென்னேஸ்வரனின் மிகப்பெரிய சாதனை.
இதழில் வெளியாகும் பல இளம் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை வெளியிடுவதற்காக பல பெரிய கவிஞர்களின் சாதாரண கவிதைகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரித்ததை நான் நேரில் கண்டதுண்டு. இப்படி செய்வதினல் அவர்களின் பகைக்கு ஆளாக நேரிடுமே என்றால் "பரவாயில்லை நன்றாக எழுதுபவர்களை அடையாளம் காண்பது தான் எனக்கு முக்கியம் என்பார். இதழில் வெளியான நேர்காணல்களுக்காக அவர் உழைத்த விதம் பிரமிப்புக்குரியது. தெரிந்த பலரின் தெரியாத பக்கங்களையும் புதிய சாதனையாளர்களையும் அறிஞர்களையும் மிகச் சிறந்த முறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த நேர்காணல்கள் அவை.
முன்பு தொடர்ந்து மொழி பெயர்ப்புகளையும், சிறந்த சிறுகதைகளையும் வழங்கி வந்த ஆசிரியர் ஒரு கட்டத்துக்கு மேல் அவற்றைத் தருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டார். இந்த முறை எதுவும் எழுதவில்லை என்றால் "எனக்கு இருக்கும் வேலைப்பளுவில் அதற்கு நேரமே கிடைப்பதில்லை'' என்பார். ஒரு பத்திரிகை ஆசிரியர் நேரடியாக செய்யத் தேவையில்லாத வேலைகளில், வேறுவழியின்றி தானே ஈடுபடுவதைத் தவிர கொடுமையானது ஏதும் இல்லை. நவீன இலக்கியத்திலும் நாடகத்திலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் விளம்பரம் சம்பந்தமாகவும் விற்பனை சம்பந்தமாகவும் அலைந்து திரிவது எவ்வளவு துயரமானது?
வாசகர்கள் பல்வேறு விதமான பத்திரிகைகளை வாசிக்கிறார்கள். சிலவற்றை தொடர்ந்தாற் போலும், சிலவற்றை நேரம் கிடைக்கும் போதும் வாசிப்பது உண்டு. ஒரு வாசகனக நான் சக வாசகர்களை கேட்டுக் கொள்வது இதுதான். நல்ல பத்திரிகையை அடையாளம் காணுங்கள். வெளியாகும் விஷயங்கள் மீது தங்கள் கருத்தை கொண்டு தர்க்கம் செய்யுங்கள். வடக்கு வாசல் மட்டுமின்றி பல சிற்றிதழ்கள் பல்வேறு சிரமங்களிடையில் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடக்க வாசகர்கள் தங்கள் ஆதரவை நல்க வேண்டும்.
http://www.vadakkuvaasal.com/article.php?id=93&issue=47&category=4
Tuesday, October 5, 2010
Sunday, October 3, 2010
எனது பார்வையில் எந்திரன்..
இன்று எந்திரன் பார்த்தேன். சினிமா ரசிகர்களிடமும் , சீரியல் ரசிகர்களிடமும் (சன் உபயம்) அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்ற காரணத்தாலும் , எரிச்சலூட்டும் வகையிலான விளம்பர யுக்திகள், படம் வெளிவருவதற்கு முன்பே எல்லை மீறி புகழப்பட்ட படம் என்பதாலும் ...ஆரவாரம் விமர்சனங்கள் எல்லாம் ஓய்ந்த பின் ஒரு நாள் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் பாருங்கள் ..சாருவிற்கு கூட டிக்கெட் கிடைக்கவில்லை. எனக்கு என் தம்பி நண்பர்கள் மூலமாக கிடைத்தது. பார்க்கலாம் என்று கிளம்பி விட்டோம். டெல்லி PVR தியேட்டர் ஒன்றின் முன்பு.. 'சார் கொஞ்சம் தள்ளிக்கோங்க ..','மாப்ளே சும்மா... கொல்றாளேடா', 'இது என்ன தியேட்டர் .. நொய்டாவிலே ஒரு தியேட்டரில் படுத்துண்டே படம் பார்க்கலாம்..' போன்ற செந்தமிழ் உரையாடல்கள் காதை நிறைக்கும் அளவுக்கு நம் மக்களின் கூட்டம். எல்லோரும் படத்தை பற்றிய எதிர்பார்ப்போடு வாயில் பாப்கார்னும் கையில் குளிர்பானத்தோடும் 'ஆலய' வாசல் முன் அமர்ந்திருந்தார்கள். முனிர்காவில் இருக்கும் எனக்கு தெரிந்த தமிழர்களில் பாதி பேர் அங்கிருந்தார்கள். குசல விசாரிப்புகள் குதூகல முகங்கள்.
படம் டைட்டில் தொடங்கியவுடன் ஒரே ஆரவாரம். என் தம்பியின் நண்பன் ஒருவன் அடித்த முதல் விசிலுக்கு பல எதிரொலிகள் அரங்கில் ஆங்காங்கு கிளம்பி 'ரஜினி' என்ற பெயர் வரும்போது காது ஜவ்வு கிழிந்து விட்டது. இத்தனை வயதுக்கு பிறகும் தனக்கு அடுத்த தலைமுறையே சற்று தளர்ந்து போய் விட்ட பிறகும் இந்த மனிதருக்கு கிடைக்கும் இத்தனை வரவேற்பும் ..அவர் தனது ஆரமபகாலத்தில் போட்ட பலமான அஸ்திவாரம் தான் என்று தோன்றியது. (எனினும் நம் தமிழக இளைஞர்கள் ரஜினி கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் அதீத முட்டாள் தனமின்றி வேறில்லை. இங்குள்ள மீடியாக்கள் அந்த அபத்தங்களை டி.வி.யில் காட்டும் போதெல்லாம் கடுமையான எரிச்சல் வருகிறது. )
படம் ரஜினி படத்துக்குரிய அநியாய அலட்டல் இல்லாமல் தொடங்கியதே ஒரு நல்ல சகுனம் என்று நினைத்தேன். உண்மை தான். நிறைய flaws இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் செதுக்கம் தேவையாய் இருக்கிறது தான் என்றாலும்.. நேர்மையாக சொல்கிறேன். இந்திய சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு மைல்கல் படம் எந்திரன். விஞ்ஞானி வசீகரனின் படைப்பில் உருவான ரோபோவான சிட்டி ஒரு அசத்தல் அறிமுகம். ஆனால் அதை தயாரிக்கும் பணியில் இருக்கும் சந்தானமும் கருணாசும் ஏதோ மோட்டார் மெக்கானிக் போல் காமெடி பண்ணுவது ஷங்கரின் வழக்கமான சொதப்பல்.அதற்கும் அரங்கில் சிரிப்பலை. இன்னும் நம் ரசிகர்களை 'சிறுவர்களாகவே' வைத்திருக்கிறது சினிமா.
கதைப்படி வசீகரன் தயாரித்த எந்திரனை மனித உணர்வுகள் அற்ற , அதை புரிந்து கொள்ள முடியாத 'வெறும் இயந்திரம்' என்று நிராகரிக்கிறார் டேனி டி சோஸா. தனது முயற்சிக்கு கிடைக்காத வெற்றி தனது மாணவன் ஒருவனுக்கு போகக்கூடாது என்ற பொறாமை. அந்த ரோபோவை இந்திய ராணுவத்துக்கு தந்து தந்து தேசப்பற்றை உறுதி செய்ய விரும்பும் வசீகரனும் தனது தயாரிப்புக்கு உணர்வுகளை புரிந்து கொள்ள பயிற்சி தருகிறார். அதுவே அவருக்கு வினையாய் மாறி ,அவரது காதலியான ஐஸ்வர்யாவையே காதலிக்கும் அளவுக்கு 'எந்திரன்' மாறிவிட , டி சோஸாவே சொல்வது போல் , அப்போது தான் படத்தின் கதையே தொடங்குகிறது, அதுவரை அப்பாவி ரோபோவின் குறும்புகளை ரசிக்க முடிகிறது. ரஜினி ரசிகர்கள் விசிலடித்து களைத்தே விட்டார்கள் என்று சொல்லலாம். ரஜினியும் 'எடுப்பார் கை பிள்ளை' என்பது போல் , இயக்குனர் சொல்வதை எல்லாம் நிறைவேற்றி 'பாபா' ரசிகர்களின் வயிற்றுக்கு பால் வார்க்கிறார்.
பிற்பாதியில் ஐஸ்வர்யா தனக்கு கிடைக்காத கோபத்தில் தனது 'கடவுளுக்கே' எதிராய் கிளம்பி விடும் சிட்டி ரோபோ சிட்டியையே புரட்டிப்போடுகிறது. தனது பிரதிகளை தானே உருவாக்கி ( copy-paste!) தனது சாம்ராஜியத்தை அமைத்து அதகளம் செய்யும் சிட்டி & சிட்டீசை தொழிநுட்பம் கொண்டு அடக்குகிறார், வசீகரன். இடையில் திருமண மேடையில் இருந்து வசீகரனை தாக்கி சனா (ஐஸ்வர்யா) வை தூக்கி வந்து தனது 'அசோகவனத்தில்' சிறை வைத்து விடுகிறது எந்திரம் (ன்). வழக்கமான கதை தான் என்றாலும் ஷங்கர் வெளிநாட்டு மற்றும் நம் நாட்டு தொழிநுட்ப கலைஞர்களின் துணையோடு கடுமையாக உழைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார். என்னை பொறுத்தவரையில் அவர் தனது ஜென்டில் மேன் படத்துக்கு பிறகு நல்ல திரைக்கதையோடு தந்த ஒரே படம் இது தான் என்று சொல்வேன். இது நாள் வரையில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வந்த அவர், இந்த படம் மூலம் இந்திய சினிமாவுக்கே (தொழிநுட்ப ரீதியாக !) ஒரு நம்பிக்கையை அளிக்கிறார். மிக பிரமாண்ட கற்பனை. ஆனால் நம் குட்டி பிசாசு போன்ற தமிழ் அபத்த முயற்சிகள் போல் அல்லாமல் நிஜமாகவே அபாரமாக உழைத்திருக்கிறார்கள். படம் முடிந்த பின் வரும் டைட்டிலில் வரும் வெளிநாட்டு தொழிநுட்ப கலைஞர்களின் எண்ணிக்கை வியக்க வைத்தது.
முதல் பாதியில் லவுட் -ஸ்பீக்கரில் அலறவிடும் மேல் தட்டு மற்றும் கீழ்தட்டு (இது ஷங்கரின் வழக்கமான நுண்ணரசியல்!) ரௌடிகளை ரஜினி காமெடியாய் மிரட்டும் காட்சிகளில் அரங்கம் துள்ளுகிறது. தன்னை தாக்க வரும் ரவுடிகளிடம் இருக்கும் 'பொருள்களை' நொடியில் கவர்ந்து கிட்டத்தட்ட அம்மன் கோலத்தில் காட்சி அளித்தவுடன் ..அங்கிருக்கும் பக்தைகள் 'அம்மனே' வந்து விட்டதுபோல் அருள்வந்து ஆடுவது சுவையான கற்பனை. அதே போல் ரோபோ ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தை வெளிவந்தவுடன் அதை தூக்கி 'வெல்கம்' சொல்வதும் அருமை. விஞ்ஞானி ரஜினியை 'கவுக்க' ராணுவ தேர்வின்போது ரோபோ ரஜினி வைரமுத்து போல் 'காதல் பெருமை' பேசும் காட்சியில் தியேட்டர் ஆபரேட்டர் கூட சிரித்திருப்பார். பாவ-புண்ணியங்கள் தெரியாத ரோபோவாக அவர் நடிப்பு பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது. அதே போல் பிற்பாதியில் வில்லனான பின்பு அவர் செய்யும் மேனரிசங்களும் படத்துக்கு பெரிய பலம். தனது ரோபோ படையில் கலந்து விட்ட பொய் ரோபோவை(வசீகரன்) கண்டுபிடிக்க சந்தேகத்துக்குரிய ஒரு ரோபோ உடலில் கத்தியை பாய்ச்சி அது மனிதன் இல்லை என்று தெரிந்தவுடன் 'ரோபோ' என்று கோணவாய் சிரிப்போடு சொல்வது அசத்தல். ஆனால் சில் காட்சிகள் பழைய ஜெய்ஷங்கர் -அசோகன் பட காட்சிகளின் நெடியுடன் இருக்கின்றன.
குறைகள், எரிச்சல்கள் நிறைய இருந்தாலும் உறுத்தும்படி இல்லை என்பதே பெரும் ஆறுதல். சில குறைகளை மட்டும் குறிப்பிடலாம்.
பத்து வருடங்களாக உழைத்து உருவாக்கும் ஒரு அதிசக்தி மிக்க ரோபோவை தனது காதலி கேட்டாள் என்பதற்காக ஒரு பொம்மையை தருவது போல் விஞ்ஞானி வசீகரன் தருவது ஏன்?
தவிர எல்லா கலைகளையும் மொழிகளையும் அறிந்த ஒரு ரோபோவை தயாரிக்கும் விஞ்ஞானி அது குறிப்பிட்ட பிரத்யேக சமிஞைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற ஒரு அடிப்படை உணர்வோடு உருவாக்காதது ஏன்?
சனாவை ரயிலில் கற்பழிக்க முயலும் 'கயவர்களிடம்' இருந்து காப்பாற்ற உணர்வுள்ள ஒரு ரோபோ , ஏன் தான் தீயிலிருந்து காப்பாற்றும் ஒரு பெண்ணின் நிர்வாண நிலையை உணரவில்லை..?
ரோபோவை அப்ரூவ் அல்லது தடை செய்யும் கமிட்டியின் தலைவரான (?) டி சோஸா ஒரு வெளிநாட்டு ( அவர்கள் பேசும் முறையை பார்த்தால் ரஷ்யர்கள் போல் இருக்கிறது..) தீவிரவாத கும்பலுக்கு 'கெட்ட எந்திரர்களை' தருவதாக உறுதி அளிக்கிறார். அவர்கள் பின்பு சீனிலேயே இல்லை ஏன்?
தனது கனவை , 'பொருந்தா காதல்' கொண்ட ரோபோ தகர்த்தவுடன் கோபத்தில் அதை மனிதனை வெட்டுவது போல் வெட்டியா வீழ்த்துவான் ஒரு விஞ்ஞானி? அதை dismantle செய்யவேண்டியது தானே? அதை வெட்டி குப்பையில் போடுவது பெரிய லாஜிக் ஓட்டை.
ரோபோவால் கடத்தப்பட்ட ஐஸ்வர்யா , ஏதோ காமன்வெல்த் கிராமத்தில் சுகாதாரம் அற்ற தங்கும் அறையில் தங்க வைக்கப்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீராங்கனை போல் அப்செட்டாக இருக்கிறாரே தவிர ஒரு பதற்றம் அல்லது கவலை இல்லை. இது ஷங்கரின் கதாநாயகிகள் தரும் பெரும் எரிச்சல்.
இன்னும் சில திரைக்கதை ஓட்டைகள் - தவறுகள் இருந்தாலும் , ரஜினி-ஐஸ்வர்யா ராய்- ஷங்கர் -மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் அபார உழைப்புக்காகவே இந்த படத்தை ஒரு சினிமா ரசிகனாக வரவேற்கிறேன், படத்தின் தயாரிப்பில் சிறப்பை காட்டி இருந்தாலும் மலிவான விளம்பர முயற்சிகளுக்காக சன்னின் தலையில் ஒரு நறுக் கொட்டு வைத்தபடிதான்..